18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்யநாராயணா வழங்கிய தீர்ப்பு எடப்பாடி-தினகரன் என இரண்டு தரப்பிற்கும் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
தீர்ப்புக்கு முன்பாக எடப்பாடி தரப்பிலும் தினகரன் தரப்பிலும் பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் யாராலும் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை. பத்திரிகையாளர்கள், உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என அனைவரையும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நிற்க வைத்திருந்தார் நீதிபதி சத்யநாராயணா.
வழக்கு விசாரணை நடக்கும் ஒவ்வொருநாளும் வழக்கறிஞர்கள் குறிப்பிடும் வாதத்தை உடனுக்குடன் தனது தனிப்பட்ட லேப்-டாப்களில் டைப் செய்து கொண்டே வந்தார். அதன் முழுமையான விவரங்களை தனது உதவியாளர் ஒருவர் மூலம் தட்டச்சு செய்து கொண்டே வந்தார்.
அனைத்துப் பதிவுகளையும் முடித்தபிறகு அதன் மொத்த பக்கங்கள் 400-ஐ தாண்டியது. அதில் தனது கருத்தான இறுதித் தீர்ப்பை மட்டுமே எழுத வேண்டும் என்கிற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இடையில் கீழமை நீதிமன்றங்களுக்கு தேவையான உதவி நீதிபதிகளை நியமிக்க தேர்வு நடத்தும் அதிகாரியாக செயல்பட்ட சத்யநாராயணா, தசரா விடுமுறைக்காக வெளிநாட்டிற்கும் சென்று வந்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தபிறகு தீர்ப்பெழுதும் வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சத்யநாராயணா என்ன தீர்ப்பு எழுதப் போகிறார் என யாருக்கும் தெரியவில்லை.
அவரது வழக்கு விசாரணையின்போது எடப்பாடி தரப்புக்காக ஆஜரான முகுல் ரோஹத்தி, அரிமா சுந்தரம் போன்ற சீனியர் வழக்கறிஞர்களின் வாதமே தூக்கலாக இருந்தது. பி.எஸ்.ராமன் போன்ற தினகரனுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் வலுச் சேர்க்கவில்லை. வழக்கின் போக்கை கவனித்த சீனியர் வழக்கறிஞர்கள் எடப்பாடி தரப்புக்கே ஆதரவாக இருக்கிறது என கணித்து எடப்பாடியிடம் சொன்னார்கள். எடப்பாடி அதை முற்றிலும் நம்பவில்லை என்கிறார்கள் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள்.
அதே நேரத்தில் சசிகலா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி "தினகரன் தரப்பிற்கு சாதகமாகத்தான் தீர்ப்புவரும்' என நம்பிக்கையை வளர்த்து வைத்திருந்தார். இந்த நம்பிக்கை பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் சொல்லப்பட்டது. உற்சாகம் அடைந்திருந்த சசிகலாவிடம் எடப்பாடியும் தனது மனைவி மூலமாக கிருஷ்ணப்ரியாவை பேச வைத்திருந்தார். தீர்ப்பு வருவதற்கு இரண்டு நாள் முன்பு தனது ஆதரவு (18+3) 21 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் சுற்றுலா விடுதியில் தங்க வைத்துவிட்டு சசிகலாவை சந்தித்தார் தினகரன். தீர்ப்பு சாதகமாக வந்தால் என்ன செய்ய வேண்டும் என சசியிடம் விவாதித்து விட்டு வந்தார் தினகரன்.
முதல்வர் எடப்பாடி மாற்றம், செங்கோட்டையன் புதிய முதல்வர் என தினகரன் தரப்பிலிருந்து செய்திகள் அவிழ்த்து விடப்பட்டன என டி.டி.வி. கேம்ப்பில் இருந்த உற்சாகத்தைபற்றி சொல்லும் அ.ம.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் ""தீர்ப்பிற்குப் பிறகு அரசியல் சூழலை எப்படி சமாளிப்பது என்பதற்காகவே தனது பிரதிநிதியாக விவேக்கின் அம்மாவான இளவரசியை அவரது சகோதரர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என பரோலில் அனுப்பி வைத்தார் சசிகலா. மறுபடியும் அ.தி.மு.க.வை தனது கண்ட்ரோலுக்கு கொண்டுவரும் சசிகலாவின் முயற்சிகளுக்கு தேவைப்படும் பணத்தை வழங்கவே இளவரசியின் பரோல் பயணம் அமைந்திருந்தது'' என்கிறார்கள்.
இப்படி ஆக்டிவாக சசிகலா செயல்படுவது எடப்பாடிக்கு பீதியை உருவாக்கியது. ஒருவேளை நீதிபதி சத்யநாராயணா தனக்கு எதிராக தீர்ப்பளித்து விட்டால் என்ன செய்வது என பயந்து போன எடப்பாடி உடனடியாக பதினைந்து பெரிய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தார். அக்டோபர்-25 காலை பத்தரை மணிக்கு சத்யநாராயணாவின் தீர்ப்பு வந்ததும் அதை உடனடியாக எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி செய்திருந்தார். அதற்கான பெட்டிஷன் தயார் செய்யப்பட்டு டெல்லியில் வைக்கப்பட்டிருந்தது. சத்யநாராயணா எடப்பாடிக்கு எதிராக தீர்ப்பு எழுதினால் அதன் வாசகங்கள் ஒன்றிரண்டை சேர்த்துவிட்டு அப்பீல் மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி திட்டமிட்டிருந்தார்' என்கிறது சுப்ரீம் கோர்ட் வட்டாரம். ஆனால் சசிகலா தரப்பு தீர்ப்பு நிச்சயம் தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என மற்ற வேலைகளை செய்ய தயாராக இருந்தது. அவர்கள் அப்பீல் மனுக்களை தயார் செய்து வைக்கவில்லை என்கிறது அ.ம.மு.க. வட்டாரம்.
இறுதியாக தீர்ப்பளித்த நீதிபதி சத்யநாராயணா "சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவு செல்லும்' என 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய அதிர்ச்சிக்குள்ளானது தினகரன் தரப்பு. தங்களுக்கு எதிராக வந்த தீர்ப்புக்கு எதிராக அப்பீல் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஆள் இல்லாமல் திணறியது.
ஏற்கெனவே தயார் நிலையிலிருந்த எடப்பாடி தரப்பு "நீதிபதி சத்யநாராயணா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒருவேளை தினகரன் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால் எங்களை கேட்டு கருத்து பெற வேண்டும்' என்கிற தொனியில் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்தது என சொல்கிறது சுப்ரீம் கோர்ட் வட்டாரம்.
இந்நிலையில் நீதிபதி சத்யநாராயணா வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடைபெற முடியுமா? என சுப்ரீம் கோர்ட் வட்டாரங்களை கேட்டோம். ""இதுபற்றி சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்களிடம் பேசிய எடப்பாடிக்கு "உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள். இதுவரை கோர்ட் வழக்குகளால் ஊசலாடும் அரசு என்கிற பிம்பத்தை மாற்றுங்கள்' என ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் தரப்பு அப்பீல் செய்து அந்த அப்பீல் வழக்கு முடியும்வரை இடைத்தேர்தல்கள் நடத்தக்கூடாது என ஒரு உத்தரவை மட்டுமே பெற முடியும்'' என்கிறார்கள் வழக்கறிஞர்கள். இதனால் அப்செட்டாகியுள்ள தினகரன் கூடாரம் மெல்ல மெல்ல காலியாகி, எடப்பாடி பக்கம் செல்கிறது.
எடப்பாடி பெரும்பான்மையை காட்டவும் தினகரன் அப்பீலுக்கும் தயாராகிறார்கள். பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதி, ஏற்கெனவே காலியாக உள்ள 2 தொகுதி என மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது என்பது எந்த வகையிலும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையாது. 20-ல் 19 ஏற்கெனவே அ.தி.மு.க. தொகுதிகள். அதில் எத்தனை தொகுதிகளில் தி.மு.க. ஜெயித்தாலும் அதற்கே பலம் சேர்க்கும். இதனை ஆளுந்தரப்பும் விரும்பவில்லை. டெல்லி பா.ஜ.க.வும் விரும்பவில்லை. எனவே தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவே பா.ஜ.க. மேலிடத்திடம் ஆலோசிக்கிறது அ.தி.மு.க.
-தாமோதரன் பிரகாஷ்
____________
முதல்வர் மாற்றம்? எடப்பாடிக்கு டெல்லி ஷாக்!
தீர்ப்பு நாளின் காலையிலிருந்தே பதற்றமாகத்தான் இருந்தார் முதல்வர் எடப்பாடி. சுகாதாரத் துறையில் பணி நியமன ஆணைகள் வழங்குவதாக இருந்த தனது நிகழ்ச்சியைத் தவிர்த்துவிட்டார். அவருக்குப் பதிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். பொதுவாக, தனது துறையைத் தவிர மற்ற துறைகளின் நிகழ்வில் பெரும்பாலும் செங்கோட்டையன் கவனம் செலுத்தியதில்லை. அப்படிப்பட்ட நிலையில், முதல்வருக்குப் பதில் செங்கோட்டையன் பங்கேற்றது ஆளுந்தரப்பில் புருவம் உயர்த்த வைத்தது. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. மீது கடுமையான தாக்குதல் அறிக்கையை வெளியிட்ட செங்கோட்டையன், சற்று நேரத்தில் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்றது கூடுதல் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.
அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசியபோது, ""சமீபத்தில் அரசு மீதும் முதல்வர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சரமாரியாக சட்ட அம்சங்களுடன் கூறி ஆவேசமாக பேட்டியளித்திருந்த தி.மு.க. ஆ.ராசாவுக்கு பதிலடி தரும் வகையில் தி.மு.க.வைத் தாக்கி செங்கோட்டையன் அறிக்கை தந்துள்ளார். முதல்வர் பெயரில் அறிக்கை தரவேண்டாம் என நினைத்திருந்தால், வழக்கமாக தனக்கு நெருக்கமான சீனியர் அமைச்சர்கள் பெயரில் அறிக்கை வந்திருக்கும். செங்கோட்டையன் பெயரில் அறிக்கை வந்திருப்பதும் அவரது டெல்லி பயணமும் முதல்வர் மாற்றத்துக்கு டெல்லி பாதை அமைக்கிறதோ என்கிற சந்கேகத்தை உருவாக்குகிறது'' என்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ததை டெல்லி விரும்பவில்லையாம். இதனால் எடப்பாடி மீது மத்திய அரசு அதிருப்தியடைந்துள்ளது.
எடப்பாடியைப் போலவே கொங்கு சமூகத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் என்பதால், அந்த சமூகத்தினர் அதிருப்தி அடையாதபடி முதல்வர் மாற்றத்தை நிகழ்த்த டெல்லி திட்டமிடுகிறதோ என்ற விவாதமும் ஆளுங்கட்சித் தரப்பில் நடக்கிறது. தொடர்ந்து பதற்றத்திலேயே எடப்பாடி உள்ள நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் போக, இன்னமும் தினகரனை ஆதரித்து நிற்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய மூவரின் பதவியை பறிப்பது குறித்து சபாநாயகர் தனபாலிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி. டெல்லியில் அவருக்காகப் பேசுபவர்களும் தங்கள் முயற்சிகளைத் தொடர்கிறார்கள்.
இதற்கிடையே, பரப்பன அக்ரகாரம் சிறையில் உள்ள இளவரசி பரோலில் வந்திருப்பது சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் அ.தி.மு.க. மற்றும் சசிகலா குடும்பத்தினரிடையே எதிர்பார்க்கப்படுகிறது.
-இளையர்