ஜோலார்பேட்டை தொகுதியிலுள்ள மக்களில் 60 சதவிகிதத்துக்கும் மேலாக வன்னிய சமுதாயத்தினர், கவுண்டர்கள், பட்டியலின சமூக மக்களென உள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பில், நாட்றம் பள்ளி தொகுதியிலிருந்து ஜோலார்பேட்டை தொகுதி யானது. முழுக்க முழுக்க விவசாயத் தையே நம்பியுள்ள மக்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே தொழிற்சங்கம் இங்கு வலிமையாக இருந்தது. நக்சல் பகுதியாகவும் இருந்தது.
இத்தொகுதியில் 2011-ல் முதல்முறையாக அ.தி.மு.க. மா.செ. வீரமணிக்கு சீட் தந்தார் ஜெ. அப்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. பொன்னுசாமி போட்டியிட்டு, 23 ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2016-ல் வீரமணியை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் கவிதா தண்டபாணி தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு தி.மு.க. நிர்வாகிகளே காரணமென்று தி.மு.க. ஒ.செ.வாக இருந்த வீரமணியின் அண்ணன் அழகிரி, நாட்றம்பள்ளி ஒ.செ.வும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சூர்யகுமார் மீது புகார் தெரிவித்தார். இதனால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியது தலைமை. பின்னர் சூர்யகுமார் மட்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
2021 தேர்தலின்போது பொருளாதாரத்தில் பெரியளவில் வளர்ந்திருந்த வீரமணிக்கு எதிராக தி.மு.க. மாவட்டச்செயலாளர் தேவராஜ் நிறுத்தப்பட்டார். தொகுதி மாறிவந்து நிற்பதால் தோற்றுவிடுவாரென ஆரூடங்கள் சொன்னார்கள். ஆனால் தேவராஜ் வெற்றிபெற்றார். எம்.எல்.ஏ. வானதும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளாக இருந்ததை செய்யத் துவங்கி னார். கிராமங்கள் நிறைந்த இத்தொகுதியில், புதியதாக 164 ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டது மக்களிடம் பாராட்டைப் பெற்றது. அதேபோல் புத்துக்கோவில் டூ ஜோலார்பேட்டை சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும், சோமநாயக்கன்பட்டி, பச்சூர் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டுமென்பதும் இப்பகுதி மக்களின் பல்லாண்டுகால கோரிக்கை. இதையெல்லாம் 9 ஆண்டுகள் அமைச்சராக இருந்த வீரமணி நிறைவேற்றாமல் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்ததால்தான் தோற்கடிக்கப்பட்டார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினரே.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிப்காட் கொண்டுவருவேன், அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பேன், சுற்றுலாத்தலமான ஏலகிரியை மேம்படுத்துவேன், அனைத்து கிராமங்களுக்கும் ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டுவருவேன் என வாக்குறுதிகள் தந்திருந்தார் தேவராஜ். அதில், குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஏலகிரி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வைத்திருக்கிறார். இரண்டு மாதத்துக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், சிப்காட் அறிவிப்பு செய்தது, பொன்னேரியில் மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்துள்ளது தேவராஜுக்கு தெம்பை தந்துள் ளது.
மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மண் டல தேர்தல் பொறுப் பாளருமான எ.வ.வேலு, இந்த தொகுதி மீது கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். இதற்காக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையை, ஜோலார்பேட்டை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக்கியுள்ளார். ஆட்சி மீது, எம்.எல்.ஏ. மீது மக்களுக்கு அதிருப்தியிருந்தால் அதனை சரிசெய்து வெற்றியை தக்கவைக்க என்னென்ன வழியோ, அதனை ஆராயுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
வரும் தேர்தலுக்கு வாணியம்பாடி தொகுதியை தேவராஜ் குறிவைத்தார். தி.மு.க. தலைவரோ, நீங்களே ஜோலார்பேட்டையில் நில்லுங்கன்னு தேவராஜிடம் சொல்லி விட்டார், அதனால் அவர்தான் அங்கே களமிறக்கப்படுவார் என்கிறார்கள் உடன் பிறப்புக்கள்.
அதே நேரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. சூர்யகுமார், முன்னாள் மா.செ. முத்தமிழ்செல்வி, ஒ.செ. கவிதா தண்டபாணி, உமா கண்ணுரங்கம் போன்றோர் சீட் கனவில் உள்ளனர். 2016-ல் உள்ளடியால் தோற்றுவிட்டேன், இம்முறை கண்டிப்பாக ஜெயித்துவிடுவேன் என துரைமுருகன் வழியாகவும், கனிமொழி எம்.பி. வழியாகவும் தலைமையிடம் கோரிக்கை வைத்துவருகிறார் கவிதா. கட்சியில் முன்னாள் மா.செ. முத்தமிழ்செல்வி, ஒ.செ.க்கள் கவிதா, உமா, சூர்யகுமார், சதீஷ் என ஆளாளுக்கு தனித்தனி கோஷ்டி களாக உள்ளனர். இவர்களில் யாருக்கு சீட் தந்தாலும் மற்றொருவர் கண்டிப்பாக காலை வாருவார்கள். மா.செ. என்கிற முறையில் தேவராஜை நிறுத்தினால் மற்றவர்கள் உள்ளடி வேலை செய்ய முடி யாது. தேவராஜால் மட்டுமே வீரமணியை எதிர்க்கமுடியும், செலவு செய்யமுடி யும். அதனால் தலைமை அவரைத் தான் தேர்வு செய்யும் என்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இத் தொகுதியில் மூன்று முறை நின்று இரண்டு முறை வெற்றிபெற்ற திருப்பத்தூர் மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான வீரமணி தான் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது. அதனால் மற்றவர்கள் சீட் கேட்கும் எண்ணத்தி லேயே இல்லை. வீரமணியும் தொகுதி யில் ஏற்கெனவே களப்பணியை தொடங்கியுள்ளார். ஜெ. காலத்திலேயே கோவிலுக்கு போகாதவர், தற்போது கோவில் கோவிலாகப் போகிறார். கிராமங்களின் பெரிய தலைக்கட்டுக்களை சந்தித்து தன் மீதான அதிருப்தியை போக்க முயற்சிக்கிறார். வன்னியர் வாக்குகள் அதிகமாக இருந்தாலும், 2011-ல் பா.ம.க. போட்டியிட்டபோது தோல்வி. கடந்தமுறை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தபோதும் அ.தி.மு.க. தோல்வி. தற்போது பா.ம.க.வில் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டாக உள்ளது. இரண்டு அணிக்குமே அ.தி.மு.க.வில், தி.மு.க.வில் சீட் கிடைக்காது என்பதால் சைலன்ட் மோடுக்கு போய்விட்டனர் பா.ம.க. நிர்வாகிகள்.
தி.மு.க. மா.செ.வும், அ.தி.மு.க. மா.செ.வும் மோதுவார்கள் என எதிர்பார்ப்பதால் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த தொகுதியை இப்போதே உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர்.