திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை, நைஜீரியா, வங்காள தேசம் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். இங்குள்ளவர்களின் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. ஆனால், அகதிகளோ இந்த வழக்குகள் எங்கள் மீது புனையப்பட்டுள்ளவை. பெரும்பாலும் பொய்வழக்குகள். பலரின் தண்டனைக் காலம் முடிந்தபின்னும் சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்துவைக்கப்பட்டுள்ளோம். ஜாமீனில் வந்தவர்கள்கூட இங்கே கைதுசெய்து அடைக்கப்பட்டுள்ளோம் என குற்றம்சாட்டுகின்றனர்.
கொரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்யவேண்டும், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்துவாழ அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் கைதிகள் பலர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற் கொண்டுவந்தனர். ஆனால், உண்ணாவிரதம் இருந்தவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்குப் பதில், போராட்டம் மேற்கொண்டதற்காக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் விரக்தியடைந்து நம்பிக்கை இழந்த இலங்கை அகதிகள் 18 பேர் தற்கொலை முயற்சியில் இறங்கினர். 14 பேர் தூக்க மாத்திரைகளை விழுங்க... டிக்சன், ரமணன் இருவரும் வயிறு, கழுத்துப் பகுதிகளை கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொண்டனர். இதையடுத்து சிறைக்காவலர்கள் அவர்களை அவசர அவசரமாக மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
இதுதொடர்பாக தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர், வ. கௌதமன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“"காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருப்பது பெரும் கவலைக்கும் வேதனைக்கும் உரிய விஷயம்.
அரசின் சார்பாக அகதிகள் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் சென்னையிலிருந்து திருச்சி சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று அங்கே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஈழத் தமிழர்களை சந்தித்து 20 நாட்களில் விடுதலை செய்கிறோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு 30 நாட்கள் கடந்த பிறகும்கூட அவர்களை விடுதலை செய்வதற்கான முகாந்திரமே ஏற்படுத்தப்படவில்லை.
"இனியும் காலம் தாழ்த்தாமல் கருணை மனதோடு விடுதலைக்கு தகுதியான ஈழத்தமிழர்களை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.