சேலம் ராஜலட்சுமி, அரூர் சௌமியா என தமிழகத்தில் நடந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் மீதான பாலியல் கொடூரங்களில் இருந்து மீள்வதற்கு முன்...
சம்பவம்-1
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள விவசாய கிராமம் குளமங்கலம் வடக்கு. விவசாயி சித்திரவேலின் கடைசி மகள் கஸ்தூரி (19). ஆலங்குடி வெங்கடேஷ்வரா மெடிக்கலுக்கு வேலைக்குச் சென்றார். கடந்த மாதம் 28-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை வேலைக்குப் போன கஸ்தூரி இரவு கடைசி பஸ் வரை வரவில்லை. கொத்தமங்கலம் கடைவீதியில் காத்திருந்த அப்பா சித்திரவேல் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு ஓடினார். பின்னர் ஆலங்குடிக்கு சென்று புகார் கொடுத்துவிட்டு ஸ்டேஷனிலேயே உறவினர்களுடன் காத்திருந்தார். மெடிக்கலுக்கு எதிரே டாடா ஏஸ் ஓட்டும் அதிராண்விடுதி நாகராஜ் மீதுதான் பலத்த சந்தேகம். 31-ந் தேதி அதிகாலை நாகராஜனை பிடித்த போலீசார் அவனிடம் விசாரணை செய்தபோது, "கஸ்தூரியைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டணம் கடலுக்கு செல்லும் ஆற்றுக்குள் வீசிவிட்டோம்' என்று அதிரவைத்தான். கஸ்தூரியின் சடலம் மீட்கப்பட்டது.
கஸ்தூரி கொலை, போலீஸ் அலட்சியம் இவற்றைக் கண்டித்து பனங்குளம் பாலத்தில் தொடங்கிய சாலை மறியல் போராட்டம் 25 கிராமங்களுக்குப் பரவி, சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கஸ்தூரியை நாகராஜும் நண்பர்களும் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தபிறகே கொலை செய்து, கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் கல்லும் வைத்து கட்டி வீசியிருக்கிறார்கள். சடலத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக நாகராஜ் சித்தி போதும்மணியையும் கைது செய்தனர். திருமணத்திற்கு வலியுறுத்தியதால் கோபத்தில் தள்ளும் போது சுவற்றில் அடிபட்டு கஸ்தூரி இறந்துவிட்டதாக வாக்குமூலம் பதிவாகி உள்ளது. கஸ்தூரியின் சகோதரி நந்தினி தன் தங்கையின் மரணத்திற்கு நியாயம் கோரி கண்ணீர் வடிக்கிறார்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணையை வலியுறுத்தி இடதுசாரி அமைப்புகளின் மாதர் சங்கங்கள் களமிறங்கின.
போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இந்துராணி.. ""கூட்டுப்பாலியல் வன்முறை என்பது மிகக்குறுகிய காலத்தில் வேகமாக பரவிவருகிறது. இதற்கு முதல் காரணம் மது. அதனால் எங்கள் கிராமத்தில் இருந்த 2 மதுக்கடைகளை பெண்களே உடைத்தோம். கஸ்தூரியின் பாலியல் கொலை சம்பவத்திலும் போதைதான் முக்கிய காரணமாக உள்ளது. மது போதை மட்டுமின்றி பஞ்சர் ஒட்டும் சொலிசன், இங்கிரிமோர், ஹேன்ஸ், கஞ்சா... இதுபோன்ற பல பொருட்களை இளைய சமுதாயம் போதைக்காக பயன்படுத்துவதுடன், அதை அப்பாவிப் பெண்களுக்கும் பழக்கப்படுத்தி அடிமையாக்கிவிடுகிறது. இந்தப் பழக்கத்தை இப்போதே கிள்ளியெறிய வேண்டும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வன்முறையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் போலீசார் அதற்கான சாட்சிகள், தடயங்கள், ஆவணங்கள் சேகரிப்பதில் மெத்தனம் காட்டுவதால் குற்றவாளிகள் எளிதாகத் தப்பி விடுகிறார்கள். நாகராஜன் இதற்கு முன்பு சில பெண்களை நண்பர்களுடன் சேர்ந்து வன்புணர்வு செய்திருக்கிறான். அந்த பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்ற துணிவில்தான் கஸ்தூரியிடம் அத்துமீறி, கொலை செய்திருக்கிறான்''’’ என்றார். "பிரேத பரிசோதனை அறிக்கைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்கிறார்கள் போலீசார்.
சம்பவம்-2
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்குப் பெயர்பெற்ற ஊர் திருபுவனம். அங்கு தந்தையை இழந்து வறுமையில் வாடிய குடும்பத்தைச் சேர்ந்த பாரதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். கடையில் வேலை செய்யும் 43 வயது சின்னப்பா தீபாவளிக்கு மறுநாள் தனது வீட்டில் அமாவாசை விருந்து என பாரதியை அழைத்துச் சென்று, தனது நண்பர்களுக்கு பாரதியை விருந்தாக்கியுள்ளான்.
பூட்டப்பட்ட வீட்டிற்குள் பாரதி கத்திய கதறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி சரிந்த பாரதியை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். தாயும் உறவினர்களும் தகவல் அறிந்து ஓடிவந்து, வேறு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ரத்தப் போக்கை நிறுத்த பல தையல் போடப்பட்டது. சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் "பலபேர் சேர்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுமளவுக்கு கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள்' எனத் தெரிவித்துள்ளனர். அதன் பிறகே புகார் கொடுக்கப்பட்டு, சின்னப்பாவை மட்டும் போலீஸ் கைது செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட எல்லோரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் கடையடைப்பு, பேரணி நடத்தியதுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட பலரிடமும் மனு கொடுத்தனர்.
மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி... ""பாரதியை ஏமாற்றி அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளனர். சின்னப்பா வீட்டில் கடை முதலாளி கார்த்திக் உள்பட பலர் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ரத்தப் போக்கு ஏற்பட்டதும் பயந்துபோய் அவசரமாக வெளியேற்றி இருக்கிறார்கள். குற்றவாளிகள் அனைவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன் பாரதி குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்க வேண்டும்'' என்றார்.
பழைய சம்பவம்..
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் ஆசிரியர் தம்பதி கலைக்குமார்-ராஜம் இருவரும் பள்ளிக்குச் சென்ற நேரத்தில் கடந்த 2011, மார்ச் 9-ந் தேதி மதியம் வீட்டில் படித்துக் கொண்டிருந்தனர் அவர்களின் குழந்தைகள் அபர்ணா (15), நிஷாந்த். (6) இருவரில் அபர்ணாவை கூட்டுப்பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு வீட்டில் இருந்த நகைகளையும் அள்ளிச் சென்றது வக்கிர கும்பல். இது சம்பந்தமாக கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வந்தவர்கள் யார் என்பதை சிறுவன் நிஷாந்த் அடையாளம் காட்டினான். எந்த பயனும் இல்லை. பிறகு சி.பி.சி.ஐ.டி. விசாரணை, பிறகு சி.பி.ஐ. விசாரணை இப்படி 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. அடையாளம் காட்டப்பட்டவர்கள்மீது கூட நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது போலீஸ். 7 ஆண்டுகளாக தங்கள் குழந்தையின் கொலைக்கு நீதி கிடைக்கும் என்று நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டுதான் இருக்கிறார் கலைக்குமார். இப்படி குற்றவாளிகளை தப்ப வைப்பதால்தான் அடுத்தடுத்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தயக்கமின்றி செய்கிறார்கள்.
இந்தப் பெண்களுக்கு நீதி கிடைக்குமா?
-இரா.பகத்சிங், செல்வா