டலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை, கெடிலம், மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு போன்ற ஆறுகள் ஓடுகின்றன. அதேபோல் வீராணம், பெருமாள், வெலிங்டன், வாலாஜா போன்ற ஏரிகளும் உள்ளன. இவற்றிலிருந்து பாசனத்திற்கு ஓரளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த மாவட்ட மக்களின் தண்ணீர்த் தேவைக்கு சரியான திட்டங்கள் ஏதுமில்லை..

Advertisment

water

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், மங்களூர், நல்லூர் பகுதிகளை யொட்டிய கிராமங்களில் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டது. இவற்றைப் பயன்படுத்துவதால் பலருக்கும் கிட்னி பாதிப்பு ஏற்படுகிறது.(இதுகுறித்து பல்வேறு கட்டுரைகளை நக்கீரன் இதழில் எழுதியுள்ளோம்). அதன் எதிரொலியாகவும், மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் விதமாகவும், கடந்த அ.தி.மு.க. அரசு, 2019ஆம் ஆண்டு, நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நிலக்கரி தோண்டும்போது கிடைக்கும் உபநீரை, திட்டக்குடி, வடலூர் நகராட்சிகள், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் ஆகிய பேரூராட்சிகள், நல்லூர், விருத்தாசலம், மங்களூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட சுமார் 700 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக 479 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நான்கு பகுதிகளாக குழாய் பதிக்கும் பணிகள் பிரிக்கப்பட்டு, கடந்த 2020ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேறுவதன் மூலம் ஒரு தனி நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்று கணக்கிடப்பட்டது இதன்மூலம் சுமார் 25 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இதற்காக என்.எல்.சி. உபரி தண்ணீரைக் கொண்டுசெல்ல 400 மில்லி மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கொண்டுசெல்லும் வழியிலுள்ள புதுக்கூறப்பேட்டை, கொத்தட்டை, கொட்டாரம், ஆவட்டி ஆகிய இடங்களில் பூஸ்டர் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

Advertisment

இத்திட்டம் 2022 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என்று துவக்கப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது ஆனால் தற்போது பல மாதங்களாக இழுத்துக்கொண்டே செல்கிறது. இதுகுறித்து முன்னாள் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் நம்மிடம், "கடந்த ஆட்சியில் கொண்டுவரப் பட்ட இந்தத் திட்டத்தின் குடிநீர்க் குழாய்களுக்காக சாலையோர ஆக்கிரமிப்பு களை அப்புறப்படுத்துவதில் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனமாக இருப்பதே காலதாமதமாவ தற்கு காரணமாகும். இதனால் ஒப்பந்த தாரர்கள் வேறுவழியின்றி, தார்ச் சாலை யைத் தோண்டியெடுத்து குழாய் பதிக்கிறார் கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு இத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதிகாரி கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் விரைந்து முடிக்க முடியும்'' என்றார்.

water

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். "குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகளின் மேற்பார்வை யில் குழாய்கள் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். பல இடங் களில் நெடுஞ்சாலைகளைச் சேதப்படுத்து வதைப் புகைப்படங்களுடன் அந்தத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, சாலையை சேதப்படுத்தாமல் பணிகளைச் செய்யுமாறு பலமுறை தெரிவித்துள்ளோம். அப்படியும் சில இடங்களில் தவறுகள் நடக்கின்றன'' என்றார்கள்.

குடிநீர் வடிகால் வாரியக் கண்காணிப் பாளரிடம் கேட்டபோது, "நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் மேற்பார்வை யில் தான் சாலையோர பைப்லைன் பதிக்கப்படுகிறது. சாலை மிகவும் குறுகலாக உள்ள சில இடங்களில் மட்டும் தார்சாலை யை ஒட்டி பைப் லைன் போடப்பட்டுள்ளது. மற்றபடி சாலையை சேதப்படுத்தவில்லை. இன்னும் சில மாதங்களில் திட்டம் நிறைவு பெற்று, சீரான தண்ணீர் விநியோகம் நடைபெறும்'' என்றார்.

பெண்ணாடம் நுகர்வோர் அமைப் பைச் சேர்ந்த சோமசுந்தரம் கூறுகையில், "கூட்டுக் குடிநீர் திட்டம் மிக மிக அவசியம், மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில், சாலையை ஒட்டி இருபுறமும் நெடுஞ் சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்திருக்கும் தனியாரை அகற்றி விட்டு, அந்த வெற்றிடத்தில் பைப் லைன் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இத்திட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. உதாரணத்திற்கு, கருவேப்பிலங்குறிச்சி - ராமநத்தம் நெடுஞ்சாலையில் துறையூர் கிராமத்தில் சாலையோரம் எங்களுக்கு சொந்தமான பட்டா இடம் உள்ளது. அதில் உள்ள மரத்தை பொக்லைன் கொண்டு அகற்றிவிட்டு பைப் லைன் அமைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்கப்பட்டது. அதற்கு துணை வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்கப் பட்டுள்ளதாக வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு பதில் 2021ஆம் ஆண்டு பத்தாவது மாதத்தில் வந்தது அதன்பிறகு இன்றுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை. இப்படித்தான் ஏனோதானோவென்று பணிகள் நடக்கின்றன'' என்றார். மக்களுக்கு இன்றியமையாத கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளில் இனியாவது சரியான திட்டமிடலோடு செயல்பட்டு விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-எஸ்.பி.எஸ்.