சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்-வசந்தி தம்பதியரின் மகன் திலீப்குமார். ராசிபுரம் அரசுக் கல்லூரியில் பி.ஏ.இறுதியாண்டு மாணவரான இவருக்கு போலீஸ் ஆகவேண்டும் என்பது பெரும் கனவு. இதற்காக கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடந்த போலீஸ் தேர்வையும் சிரத்தையுடன் எழுதி, ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.
அதே நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வைரம் என்கிற திருநாவுக்கரசு, சூர்யன், சந்திரன் (இவர்கள் இருவரும் மைனர்கள் என்பதால் பெயர் மாற்றப் பட்டுள்ளது) ஆகிய மூவரும் நெருங்கிய கூட்டாளிகள். வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ மனோன்மணி, மல்லூர் அ.தி.மு.க. ஒ.செ. ஏர்வாடி ஜெகநாதன் ஆகியோர் சொல்லும் வேலைகளை சிரமேற்கொண்டு செய்யும் கில்லாடிகளான இவர்கள் மூவரும் திலீப்குமாருக்கும் நண்பர்கள்.
திருநாவுக்கரசும் மற்ற இருவரும் ஆளும் கட்சிப் புள்ளிகளின் எடுபிடிகளாக இருந்து அவர்கள் செய்யும் வேண்டாத வேலைகள் திலீப்குமாருக்கு பிடிக்காததால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தனது நண்பர்கள் 50 பேருடன் தி.மு.க.வில் இணைந்துவிட்டார். திலீப் தி.மு.க.வில் சேர்ந்ததால் மற்ற மூவரும் கடுப்பாகி, இதுவரை அம்பேத்கர் நகர் ஏரியாவில் விநாயகர் சதுர்த்தியை இணைந்து நடத்தியவர்கள் தனித்தனியே நடத்த ஆரம் பித்தனர்.
அதே போல் இந்த ஆண்டு செப்.02—ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, தனித்தனியே பிள்ளையார் சிலைகளை நிறுவி விழா கொண்டாடினார்கள். செப்.04—ஆம் தேதி விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக மேட்டூருக்கு கிளம்பியது திருநாவுக்கரசு டீம்.
சாலையோரம் நின்று ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த திலீப்குமார், திருநாவுக் கரசைப் பார்த்து ஏதோ கைஜாடை பண்ணி யிருக்கிறார். தன்னைப் பார்த்து கொன்றுவிடுவதாக திலீப் ஜாடை காட்டுவதாக நினைத்த திருநாவுக் கரசு, பிள்ளையார் சிலைகளைக் கரைத்து விட்டு, அம்பேத்கர் நகர் திரும்பிய பின், 05—ஆம் தேதி நடு இரவு தாண்டியதும் மைனர் குஞ்சுகளான தனது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு கொலை வெறியுடன் கிளம்பியிருக்கிறார்.
சமாதான தொனியில் பேசி திலீப்பை வீட்டை விட்டு வெளியே வரவைத்து, இரும்புக் கம்பி மற்றும் சூரிக் கத்திகளால் சரமாரியாக குத்தி யிருக்கிறார்கள். திலீப்பின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாய் வசந்தியின் வலது கையில் கத்திக் குத்து விழுந்துள்ளது. தடுக்க வந்த திலீப்பின் உறவினர் சரண் என்பவருக்கும் கை, கால், நெற்றிப் பகுதிகளில் கத்திக் குத்து விழுந் துள்ளது. வெறியாட்டம் ஆடிவிட்டு சாவகாச மாக கிளம்பியுள்ளது திருநாவுக்கரசு படை.
இந்த படுபாதகத்தை நேரில் பார்த்த, திலீப்குமாரின் வீடு அருகே வசிக்கும் கனிமொழி நம்மிடம், “""திலீப்பின் முழங்காலில் ஆழமான வெட்டு விழுந்ததால், அவனால் ஓடக்கூட முடியல. ஒருவழியா தத்தித் தத்தி அழகு என்பவரின் வீட்டிற்குள் ஓடி ஒளிந்தார். நானும் பின்னாலேயே போனேன். நிற்கக்கூட முடியாமல் சுருண்டு விழுந்துவிட்டான். ஆம்புலன்ஸ் வருவதற்குள் இறந்துவிட்டான்'' என்றார்.
திலீப்பின் அம்மா வசந்தியோ, ""போன வியாழக்கிழமை காலைல (செப்.05) என் வீட்டுக்கு வந்த திருநாவுக் கரசும் அந்த ரெண்டு பேரும் உன் மகனை அடக்கி வை, இல்லேன்னா போட்டுத் தள்ளிருவோம்னு மிரட்டுனா னுங்க. நானும் என் மகனிடம் அந்தக் கும்பலோடு சகவாசம் வச்சுக்காதேன்னு சொன்னேன். ஆனா அதேநாள் ராத்திரி இந்த படுபாதகத்தை பண்ணிட்டானுங்க'' என கதறி அழுதார்.
இந்தக் கொலை குறித்து மல்லூர் இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் நாம் கேட்டபோது, “""அந்த மூணுபேரையும் அரெஸ்ட் பண்ணிட்டோம். எல்லாம் சட்டப்படி நடக்கும், யாருடைய சிபாரிசையும் ஏற்கமாட்டேன்'' என்றார்.
-இளையராஜா