மதுரையைச் சேர்ந்த இரு இளம்பெண்கள், அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்றியபோது பழக்கமாகி, அவர்களுக்குள் காதலாக மலர்ந்து, இருவரும் இணைந்தே வாழலாமென்று முடிவெடுத்திருக் கிறார்கள். இதை அறிந்த அவர்களின் பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி. இப்படியான வாழ்க்கை முறையை சமூகத்தில் ஏற்கமாட்டார்களென்று கூறி மறுத்திருக்கிறார்கள். எனினும், தங்கள் முடிவில் உறுதியாக இருந்த பெண்கள் இருவரும், சென்னையில் ஏதேனும் நிறுவனத்தில் பணியாற்றியபடி இணைந்து வாழலாமென்ற எண்ணத்தில் சென்னைக்கு கிளம்பி வந்துள்ளனர்.
வீட்டைவிட்டு இவர்கள் வெளியேறியதை அறிந்த பெற்றோர், பெண்ணைக் காணவில்லையென்றும், யாரோ கடத்திச் சென்றுள்ளார்களென்றும், மதுரை காவல் நிலை யங்களில் புகாரளித்துள்ளார்கள். புகாரின் அடிப்படையில் போலீசார் ஒருபக்கம் தேட, போலீசார் தேடுவது தெரிந்ததுமே தோழியர் இருவரும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி, சென்னை நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இவ்வழக்கில் பெண்கள் சார்பாக ஆஜரான உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனுராஜ், கூறுகையில், "இந்த வழக்கில், சமூகத்துக்கும், சட்டத்துக்கும் இருக்கின்ற இடைவெளிதான் மிகவும் முக்கியமானது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 377வது பிரிவு, இயற்கைக்கு முரணாக ஆணோ, பெண்ணோ உறவு வைத்துக்கொள்வதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதக் கூடியது. ஆனால், 2018-ம் ஆண்டில், நடனக்கலைஞர் நவ்தேஜ் சிங் ஜோஹர் இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, நாரிமன் உள்ளிட்டோர் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ஓரினச் சேர்க்கையைக் குற்ற மாகக் கருதக்கூடாது என்று தீர்ப்பளித் தது. அதை அடிப்படையாக வைத்துத் தான் இந்த வழக்கை அணுகினேன்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு அவசியம் என்பதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கும் இதுகுறித்த புரிதல் வேண்டியுள்ளது. இப்பெண்களைத் தேடி சென்னைவந்த போலீசார், தீவிரவாதிகளைத் தேடுவதுபோல, போன் நம்பரை ட்ராக் செய்து, இவர்களோடு தொடர்பில் இருந்த அனைவரையும் அதட்டி மிரட்டி விசாரித்து இருப்பிடத்தைக் கண்டு பிடித்துள்ளனர். இருவரையும் பிரிப்பதற்காக0 வாக்கத்தில் வைத்து மணிக்கணக்காக மூளைச்சலவை செய்துள்ளனர். ஆனால் இந்த பெண்கள், தங்களை யாரும் கடத்தவில்லை என்றும், இரு வரும் சேர்ந்து முடிவெடுத்தே சென்னைக்கு வந்ததாகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இப்பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு தேவைப் படுகிறது. அதைத்தாண்டி, பெற் றோர்களுக்கு இவர்களின் எண் ணத்தைப் புரியவைக்க வேண்டும் என்பதால், உளவியல் நிபுணரின் ஆலோசனையும் தேவையென்பதைப் பதிவு செய்தோம்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷும் கடந்த மார்ச் 29ம் தேதியன்று, இந்த பெண்கள் மற்றும் பெற்றோரோடு தனித்தனியாகப் பேசினார். அதன்மூலம் பெண்கள் இருவரும் தங்களது முடிவில் தெளிவோடும், தீர்மானமாகவும் இருப்பதைப் புரிந்துகொண்டார். பின்னர் இதுகுறித்து அவர்களின் பெற்றோரை அழைத்துப் பேசிப் புரியவைக்க முயன்றிருக்கிறார். ஆனால் பெற்றோரால் இதனைப் புரிந்துகொள்வதும், ஏற்பதும் மிகுந்த சிரமமாக இருந்திருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, இப்படி இந்த சமூகத்தில் வாழ்ந்திட முடியுமா, இதை இச்சமூகம் ஏற்குமா, அவர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா, தவறான வழியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்குமா என்றெல்லாம் பல்வேறு குழப்பங்கள். அப்படியெல்லாம் ஆகாதபடி, அப்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமென்று நீதிபதி உறுதி கூறினார்" என்றார் மனுராஜ்.
அதையடுத்து, உளவியல் நிபுணராக வித்யா தினகரன் என்பவரை நியமித்தார் நீதிபதி. இரண்டு பெண்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் மூன்று நாட்கள் கவுன்சிலிங் நடைபெற்றது. அந்த கவுன்சிலிங்கில், அப்பெண்கள் மிகுந்த தெளிவோடு இருப்பது தெரியவந்தது. அதேபோல, பெற் றோருக்கும், இத்தகைய உறவு முறை, சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட் டது என்றும், அத னைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென் றும் கவுன்சலிங் அளிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அடுத்தகட்ட விசாரணையில், கவுன்சலிங் விவரங்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்து கொண்ட நீதிபதி, "தற்பாலின ஈர்ப்பு என்பது குறுகிய வட்டத்துக்குள் பார்க்கவேண்டிய விவகாரமில்லை. உலக அளவில் இதுகுறித்த விவாதங்கள், விழிப்புணர்வுகள் பெருகிவரும் சூழலில், தற்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ்வது தொடர்பான வழக்குகளில், இந்தியா விலும், வெளிநாடுகளிலும் எப்படியான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்துவரு கிறேன். ஏனெனில் இது உளவியல் சார்ந்து அணுக வேண்டிய விஷயம்'' என்றார். இவ்விவகாரத்தில், பெண்களின் பெற்றோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாதென்பதால், வரும் மே மாதத்திலும் மீண்டும் ஒருமுறை பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்படுமென்று கூறினார்.
அதுமட்டுமின்றி, "தற்பாலின ஈர்ப்பு குறித்த புரிதல் எனக்கும் தேவைப்படுகிறது. புரிதலிருந்தால் தான் இந்த வழக்கில் மூளையிலிருந்து வழிகாட்டு தலை வழங்காமல், மனதின் ஆழத்திலிருந்து வழங்க முடியும். எனவே தற்பாலின ஈர்ப்பு குறித்த உளவியல் கல்வியை கற்பதற்கு உளவியல் நிபுணரின் அப்பாயின்மென்ட் எனக்குத் தேவை. உளவியல் ரீதியாக, இந்த தற்பாலின உறவு குறித்து நான் புரிந்துகொண்ட பின்னர், எனது கருத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே மனதிலிருந்து கூறுவதாக அமையும்'' என்றார்
ஒரு வழக்கில் தீர்ப்பை வழங்குவதற்காக ஒரு நீதிபதியே ஓர் உளவியல் நிபுணரிடம் வழக்கு தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொண்டு, அதன்பின்னர் தனது மனதின் ஆழத்திலிருந்து கருத்தைப் பதிவுசெய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டது, இவ்வழக்கின் முக்கியத்துவத்தையும், நீதிபதி யின் தனித்தன்மை யையும் காட்டுவ தாக உள்ளது.
-தெ.சு.கவுதமன்