ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி வேலைவாய்ப்புகளிலும், மருத்துவப் படிப்பிலும் மண்ணின் மைந்தர்களான புதுச்சேரி மாநிலத்தவர் புறக்கணிக்கப்பட்டு பிற மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜிப்மரில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுதோறும் இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்தாண்டு தேர்வுக்காக 1,97,751 பேர் விண்ணப்பித்து தேர்வுமுடிந்து முடிவுகள் வெளியான நிலையில், மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஜூன் 26 அன்று, சமூக ஜனநாயக இயக்கம் சார்பாக போலிச்சான்றுகள் மூலம் வெளிமாநிலத்தவர் புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரிப்பதைத் தடுத்தல், போலிச்சான்று வழங்கிய அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்துதல், மண்ணின் மைந்தர்களுக்கான இடங்களை உறுதிசெய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் ஜிப்மரை முற்றுகையிட முயன்று கைதாகினர்.
போராட்ட ஒருங்கிணைப்பாளரான தமிழர் களம் அமைப்பாளர் அழகர், "புதுச்சேரியைச் சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள்தான் ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் பெரும் பாலோருக்கு தமிழ் மட்டுமே தெரியும். இங்கு பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பான்மை யோர் தமிழே தெரியாதவர்கள். மக்கள் சொல்வதை இந்த மருத்துவர்கள் எப்படிப் புரிந்துகொண்டு சிகிச்சை யளிப்பார்கள்?
சமீபத்தில்கூட வேலைக்கு எடுத்த 24 எழுத்தர், 96 நர்ஸ்களில் ஒரு வர்கூட தமிழர் இல்லை. தெலுங்கர்கள், மலையாளிகள், வட மாநிலத் தவர்கள்தான். இப்படியே போனால் இன்னும் பத்தாண்டுகளில் ஜிப்மரில் ஒரு தமிழர்கூட இருக்க மாட்டார். ஜிப்மரை இந்திய அரசிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும்போது புதுச்சேரி பூர்வகுடி மக்களுக்கு 54 இடங்கள் அளிக்கப்படவேண்டுமென்று ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் மத்திய அரசுத் துறையில் பணியாற்றும் பலர், இங்கேயே நிரந்தரமாக வசிப்பதாக போலிச்சான்று பெற்று மண்ணின் மைந்தர்களுக்கான இடங்களை அபகரிக்கிறார்கள்.
இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் பல வெளி மாநிலத்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் 5 பேர் வடமாநிலத்தவர் இடம் பெற்றதை எதிர்த்து, புதுச்சேரி மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்'' என்கிறார் ஆவேசமாக.
புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் தலைவரான சுவாமிநாதனோ, ""இதுவரை நடந்த போலிச்சான்று மோசடிகளை அரசு விரிவாக ஆய்வுசெய்து மண்ணின் மைந்தர்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்''’ என்கிறார்.
ஜிப்மர் மக்கள்தொடர்பு அலுவலர், டாக்டர் காமாட்சியிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேட்ட போது, ""மத்திய- மாநில அரசுகளின் வழிகாட்டுதலில் எல்லாம் சரி யாகவே நடக்கிறது''’என்கிறார்.
சரியா நடக்கிற விஷயத்துக்கு மக்கள் ஏன் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்?
-சுந்தரபாண்டியன்