தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் நிஜ வாழ் விலும் நடித்து விடுகிறார்கள். தங்கள் மீது வருகிற வதந்திக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது, அல்லது அமைதியாக இருந்து வதந்தியை உண்மையாக்கி காரியம் சாதித்து விடுவது என்றிருந்து விடுகிறார்கள். திரையிலும், அந்த துறையின் உலகிலும், யதார்த்த வாழ்விலும் எப்போதுமே நல்ல பிள்ளையாக இருந்து வந்தவர் ஜெயம் ரவி. (அவர் பொதுவில் கேட்டுக் கொண்டதன் பேரில் ரவி மோகன் என்றே அழைப்போம்). ஆனால் தற்போதைய அவருடைய பொதுச் செயல்பாடுகள் அவரை நல்ல பிள்ளையா? என்று கேட்க வைக்கிறது
ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு, தயாரிப் பாளர் சுஜாதா விஜயகுமா ரின் மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர் களுக்கு இரண்டு குழந் தைகள் இருக்கின்றனர். இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி, "இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும், என்னு டைய ஒப்புதல் இல்லா மல் எடுத்த முடிவென் றும், கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவைச் சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என நக்கீரன் மட்டுமே பிரத்யேகமாக செய்தி வெளியிட்டிருந்தது.. மேலும், கோவாவில் ரவியும் கெனிஷாவும் இணைந்து ஓட்டிச் சென்ற விலையுயர்ந்த சொகுசு கார் அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக டிண்ட் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது என்று அங்கே அபராதம் விதித்திருக்கிறார்கள். மேலும் அந்த காரை வேகமாக ரவி ஓட்டியதாலும் அபராதம் கட்டியிருந்தார்கள். இதையெல்லாம் ஆதாரத்துடன் நக்கீரன் வெளியிட்டிருந்தது. இந்த தகவலை மறுத்த ரவி மோகன், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், "என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவே இருக்க விடுங்க. கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிர்களைக் காப்பாற்றிய ஒரு ஹீலர். நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாராலும் கெடுக்கவும் முடியாது'' எனக் கூறியிருந்தார்.
கெனிஷாவும் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்திருந்தார். அதில், "ரவிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில் முறை சார்ந் தது. ரவி என்னுடைய நண்பர். எனது வாடிக்கையாளர் அவ்வளவு தான். அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் எனச் சொல் கிறார்கள். அது முற்றிலும் பொய். ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை அது பற்றி எனக்கு தெரியாது. என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கு. அதற்கு நேரம் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த ஊடகத்திடமும் நான் பேசமாட்டேன். இவை என் கடைசி வார்த்தைகள்'' என்றார். ரவி மோகன் தரப்பிலும், கெனிஷா தரப்பிலும் இவ்வாறாக விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், விளக்கத்திற்கு மாறாக தற்போது நடந்திருக்கிறார்கள்.
சென்னையில் நடந்த பிரமாண்டமான திருமண நிகழ்வில் இருவரும் ஜோடியாகக் கலந்து கொண்டுள்ளனர். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்வு சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் ஒரே கலர் உடையுடன் இரு கைகளையும் கோர்த்தபடி ஒன்றாகக் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஏற்கெனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு ஆர்த்தி தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌன மாகவே தாங்கிக் கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்தும் நான் பேசாமல் இருந் ததற்கு காரணம்' என் குழந்தை களுக்கு தந்தை, தாய் இருவ ரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்து விடக் கூடாது என்பதால்தான்.
இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாட கங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாகச் சென்று கொண் டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுட னும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன், என் கைகளை மட்டுமல்ல, தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்றிருக்கிறார். பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன். யாரும் அறியாமல் அந்தக் குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என் கைகள் தான் துடைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கிக் கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்கு காட்சியளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. ஆனால் இன்றும் என்னைத் தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மையென்றால் இப்பொழுது அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்பொ ழுதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன். ஆனால் கணக்குபோட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்று நான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில் நிற்கிறேன்.
இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதைத் தான் தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு முறையே 10 மற்றும் 14 வயதாகிறது... அவர்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பும், உறுதியும் மிகமுக்கியம். இன்று நடந்துகொண்டிருக்கும் சட்டவிவகாரங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கிறது. இன்று நான் ஒரு மனைவியாகவோ, அல்லது குற்றச் சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்யத் தவறினால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும்.
இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக் கொள்ளலாம், உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம், ஆனால் உண்மையை மாற்ற முடியாது. இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவிசாய்த்துத் தான் ஆக வேண்டும். எங்களை உற்றுப் பார்ப்பவர்களுக்கும், எங்களின் நலன் விரும்பிகள் என்று அடையாளம் காட்டிக்கொள்பவர்களுக்கும் ஒன்று, இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்தி ரவி என்ற பெயரில் தான் உள்ளது. சட்டம் முடிவு செய்யும் வரை அது அப்பெயரிலேயே நீடிக்கும்'’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல பிள்ளையாக பெயர் எடுப்பது என்பது வேறு, நல்ல பிள்ளையாக இருப்பது என்பது வேறு என்று ரவி மோகனின் செயல்பாடுகள் காட்டுகிறது. முறையாகப் பிரிந்து வேறொரு வாழ்க்கையை வாழக்கூடாது என்று நாம் சொல்லவில்லை. விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போதே ரவி மோகனின் செயல்பாடுகள் தான் நம்மால் விமர்சிக்கப்படுகிறது.
- கீரன்