கொரோனாவைக் கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்கு மாநிலங்கள் போராடிவரும் நேரத்தில், மத்திய அரசு கமுக்கமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் நீர்வளத்துறையின்கீழ் கொண்டுவந்துள்ளது. இதில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மட்டுமின்றி பிற நதிநீர் ஆணையங்களும் இடம்பெறுவதால் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக அதிருப்தி எழுந்துள்ளது.

kaveri

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகத்துக்கும் பல ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்துவருகிறது. எனவே காவிரி நீரை பகிர்ந்துகொள்ள 1990-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007ல் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. எனினும் மத்திய அரசு மேற்சொன்ன அமைப்புகளை அமைக்காமல் காலந்தாழ்த்தி வரவே விவகாரம் மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது.

2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஆறு வார கால அவகாசத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக்கு குழுவையும் அமைக்க உத்தரவிட்டது.

Advertisment

duraimurugan

இந்த ஆணையத்தில் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களோடு மத்திய உறுப்பினர்கள் இடம்பெறுவர் எனவும் அறிவித்தது. பலவித இழுத்தடிப்புகளுக்குப் பின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கப்பட்டு கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில்தான் மத்திய அரசு இதுதொடர்பான சட்டங்களில் சில புதிய திருத்தங்களைச் செய்து, இந்த மேலாண்மை வாரியம் மத்திய ஜல்சக்தித் துறை எனும் நீர்வளத்துறையின்கீழ் வருமாறு செய்துள்ளது.

தமிழகத்தின் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் அனைத்தும் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. மத்திய அரசின் முடிவை எதிர்க்க வேண்டிய தமிழக அரசோ, இது வெறும் நிர்வாக நடவடிக்கைதான். அதனால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படாது’’என்கிறது. தமிழக அரசின் அந்த விளக்கத்தில், "காவேரி நடுவர் மன்றம் 5-2-2007-ல் பிறப்பித்த இறுதி ஆணையை கருத்தில்கொண்டுதான் காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண் ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது. அது காவிரிப் பாசன மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடமுடியாது' என்கிறது.

Advertisment

இது வெறும் நிர்வாக நடவடிக்கைதானா என டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் பேரியக்கத்திடம் கேட்டோம். அதன் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன், இப்புதிய விதிகளால் தமிழகத்துக்கான பின்னடைவுகளை விளக்கினார்.

kk

“இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின்படி 27-04-2020 அரசிதழில், இந்திய அரசின் நீர்வளத்துறை தொடர்பான திருத்த விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் (1961-க்கான) திருத்தங்களாக இந்த திருத்த விதிகள் அமைந்துள்ளன. இந்த திருத்தவிதிகள் வழியாக காவிரி மேலாண்மை வாரியம், இந்திய அரசின் நீர்வளத்துறையான ஜல்சக்தியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கெனவே இருந்த பணிகள் ஒதுக்கீட்டு விதியில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதற்காக புதிதாக 33ஊ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 1956-ஆம் ஆண்டு தண்ணீர் தகராறு சட்டம் என்பது, இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே எப்படி நீர் பகிர்ந்துகொள்வதற்கான விதிமுறைகள் பற்றியதாகும். தண்ணீர் தகராறு சட்டத்தை செயல்படுத்தவேண்டிய பொறுப்பு நீர்வளத் துறையினுடையது ஆகும். எனினும் 1956-ஆம் ஆண்டு தண்ணீர் தகராறு சட்டத்துக்கு உட்பட்டுதான் மத்திய அரசு தன் பொறுப்பை நிறை வேற்ற முடியும். தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.

மத்திய அரசின் பணி ஒதுக்கீட்டு விதி 1961-ல், நான்காவது பகுதி இந்திய நீர்வளத்துறை அமைச்சகம் நிர்வாகம் செய்யவேண்டிய சட்டங்களை வரையறுக்கிறது. அதில் பதிவு 32-தான் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு சட்டத்தைக் குறிக்கிறது.

இந்த பழைய சட்டங்கள், விதிமுறைகள் மத்திய அரசுக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரத் தையே தருவதால், இந்தப் பதிவு 32-ஐ விதியிலிருந்தே நீக்கியிருக்கிறது மத்திய அரசு. அதற்குப் பதிலாக பதிவு 33-ல் A முதல் E வரை புதிய பிரிவுகளைச் சேர்த்துள்ளது. இதில் 33 E- காவிரி மேலாண்மை வாரியம் மத்திய ஜல்சக்தித்துறையின்கீழ் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழக அரசின் விளக்கத்தில், கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் தொடர்பான அமைப்பு களும் மத்திய அரசின் ஜல்சக்தி யின் கீழ் இடம்பெற்றுள்ளன என்றும், இது ஆணையத்தின் ஊழியர்கள் சம்பளம் உள் ளிட்ட நிதி சார்ந்த நிர்வாகத் துக்காக எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்பு பற்றியும் வெங்கட் ராமனிடம் விளக்கம் கேட்டோம்.

“தற்போதைய மத்திய அரசின் அரசிதழில் 7A என்ற புதிய பதிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய நீர்வளத்துறை கங்கை நதி மேலாண்மை மற் றும் தூய்மையாக்கல் குறித்த அதிகாரத்தைத்தான் பெற்றிருந் தது. இப்போது, 7A- இந்தியாவி லுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மைச் சீர்கேட்டை தடுப்பது ஆகிய அதிகாரங்களை ஜல்சக்திக்கு அளிக்கிறது. அந்தந்த மாநில அரசுகளின் ஆற்று நீர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஓசையில்லாமல் இந்திய அரசு பறித்துக்கொள்ள இந்நிர்வாக விதி சீர்திருத்தத்தின் வழியாகவே சட்டவிரோத ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதாவது 7A மற்றும் 33E இரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்ளும்போதுதான் மத்திய அரசு தன் வரம்பைமீறி மாநிலத்தின் அதிகாரத்தைப் பறித்திருப்பது புரியும்'' என்கிறார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 2018 ஜூன் 1-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் தற்சார்பான கூட்டு நிறுவனம் எனத் தெளிவாக அறிவித்தது. இவ்வாறு ஆணையம் அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதன் நிகழ்ச்சி நிரலையும், மற்ற பணிகளையும் முடிவு செய்துகொண்டு இயங்கும் தற்சார்பு அதிகாரம் ஆணையத்திற்கே உண்டு.

ஆணையத்தின் தலைவராக அமர்த்தப் படக்கூடியவரின் கல்வி மற்றும் பணித் தகுதிகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியாக வரையறுத்தது. அதன்படியே 2018 ஜூன் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் ஆணையத்தின் நிதித் தேவையில் கேரளா 15%, தமிழ்நாடு 40%, கர்நாடகா 40%, புதுச்சேரி 5% என மாநில அரசுகளின் பங்களிப்பையும் உச்சநீதிமன்றம் குறிப்பிட் டுள்ளது.

அதன்பிறகு ஏன் மத்திய அரசின் நிதி-நிர்வாகம் எனச் சொல்ல வேண்டும்? ஆனால், இப்போது, புதிதாகச் சேர்க் கப்பட்டுள்ள பதிவு 33ஊ-ன் வழியாக, இந்தத் தற்சார்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலங்களிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் - 1956, இடைஞ்சலாக வரக்கூடாது என்பதற்காக அது குறித்த பதிவான 32 (ஊய்ற்ழ்ஹ் 32) இப்போது நீக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, எல்லா ஆறுகளின் மீதும் முழு அதிகாரம் செலுத்தும் வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய பதிவு 7ஆ சேர்க்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தையோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மீறுவதற்கு இந்திய அமைச்சரவைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஆக, குடியரசுத் தலைவரின் பெயரைப் பயன்படுத்தி மோடி அரசு தெளிவான சட்டமீறலில் ஈடுபட்டுள்ளதாக விரிவாக விளக்குகிறார். இதைத்தான் சட்டநிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

kk

இந்தப் பிரச்சினைகள் குறித்து, பொதுப் பணித்துறை முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழக அரசோ, மத்திய அரசின் புதிய அரசிதழால் காவிரி விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறது. நீட் விவகாரத்திலும் இப்படித்தான் சொன்னது, என்னாச்சு என்கிறார்கள் விவசாயிகள் கவலையுடன்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் உரிமைகள் பறிபோவதற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வேலைகளையே தமிழகம் செய்துவருவதாக விவசாய அமைப்புகள் கொந்தளிக்கின்றன.

-பகத்சிங், க.சுப்பிரமணி