கைதிகளின் பாலியல் உறவுக்கான சந்திப்புகள் குறித்து இந்திய உயர் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. 

Advertisment

மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள, எர்வாடா மத்திய சிறையில் எச்.ஐ.வி. பாசிட்டிவ் கைதிகளுக்கு முறையாக சிகிச்சை வழங்கவேண்டி ஜனவரி 2009-ல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அச்சிறைக்குச் சென்று,  இதுகுறித்து விசாரிக்க புனேவின் தலைமை நீதித்துறை நடுவர் (CJM) த.ஐ.முகமதுவுக்கு உத்தரவிட்டது. அவர் எர்வாடா சிறையில் 22 கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகவும், முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் ஜூலை 2009-ல் தெரிவித்தார். பாதுகாப்பற்ற இயற்கைக்கு மாறான உடலுறவு காரணமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நீதிபதிகள் கருதியதால், இவ்விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக (அமிகஸ் கியூரியாக) வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டார். அவர் தனது அறிக்கையில், ’"சிறைக்குள் ஓரினச்சேர்க்கை நடப்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதனால் AIDS, TB மற்றும் இதுபோன்ற பரவக்கூடிய நோய்கள், சிறைவாசிகளுக்குப் பரவி, அவர்கள் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் பரவுகிறது. இது அனைவரும் மூடிமறைக்க விரும்பும் ஒரு பிரச்சினை'’எனக் குறிப்பிட்டு சில பரிந்துரைகளைச் சமர்ப்பித்தார்.

நீதிபதிகள் பி.பி.மஜும்தார் மற்றும் ஆர்.ஜி.கேத்கர்,  சிறைகளில் HIV பரவுவதைத் தடுக்க அரசாங்கம் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. அதற்குப் பதிலாக, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் சிறையிலுள்ள  கைதிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் தங்களின் மனைவிகளை முழுமையான தனிமையில் சந்திக்க உதவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு  மகாராஷ்டிர மாநில அரசுக்கு 20.02.2010-ல் உத்தரவிட்டனர். 

ஆந்திர மாநிலத்திலுள்ள சிறைகளில் பாலியல் சந்திப்புகளை அனுமதிக்கவேண்டி, ஏ.பார்கவி என்ற சமூகநல ஆர்வலர்PIL No.251 of  2012 என்ற பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். அரசின் கொள்கை முடிவுகளில் தலை யிட முடியாது என்றும், பரோல் வழங்குவதைச் சுட்டிக்காட்டியும், இக்கோரிக்கை உயர் நீதிமன் றத்தால் 16.07.2012-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.     

Advertisment

jail1

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முக்கிய வழக்குகள்:  2005-ல் ஹோஷியர்பூரில், அபிவர்மா (16) என்ற சிறுவனை பணத்திற்காக  ஜஸ்வீர் சிங்கும் அவருடைய மனைவி சோனியாவும் கடத்திக் கொலை செய் தனர். இவர்களை பாட்டியாலா மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, பல்வேறு நிலைகளைக் கடந்து,  உச்ச நீதிமன்றத்தில் (Criminal Appeal No.1396 of 2007) மேல்முறையீடு சென்றனர். அதில் ஜஸ்வீர் சிங்கிற்கு தூக்குத் தண்டனையை உறுதிசெய்தும், அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 25.01.2010-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதன்பின் ஜஸ்வீர் சிங்கின் மனைவி,  பாலியல் உறவுக்கான உரிமை கோரியும், சிறைக்குள் ஒரே அறையில் தங்கிக்கொள்ளவும், இது இல்லையென்றால் குறைந்தபட்சம் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வாவது அனுமதிக்கவேண்டும் என்றும், பஞ்சாப் உயர் நீதிமன்றத்தை (CWP No.5429 of 2010) அணுகினார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக (Amicus Curiae) அனுபம் குப்தா என்ற மூத்த வழக்கறிஞர் தலைமையில் சில வழக்கறிஞர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது. 

இக்குழுவின் அறிக்கையின்படி, மனுதாரர்கள் கோரிய நிவாரணத்திற்கு அப்பால், பொதுநலனுக் காக விரிவுபடுத்தப்படுவதாகக் கூறி, சிறைகளில் கைதிகளுக்கு பாலியல் சந்திப்புகளுக்கான சூழலையும், உள்கட்டமைப்பையும் உருவாக்க, அரசுக்கு ஒரு வருடத்திற்குள் பரிந்துரைக்கும் வகையில், பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் சிறை சீர்திருத்தக் குழுவை அமைத்தது. மேலும், சிறைக் கைதிகளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை என்பது சிறைத் தண்டனை பெற்றபிறகும் நீடிக்கும் ஒரு அடிப்படை உரிமை என்றும் நீதிபதி சூர்யகாந்த் 29.05.2014-ல் தெரிவித்துள்ளார். 

Advertisment

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள்:  கடலூர் மத்திய சிறையிலுள்ள பெத்தபெருமாள் அ பெருமாளின் (ஆயுள் தண்டனை பெற்றவர்) மனைவி முத்துமாரி,  திருமண உரிமை களைப் பாதுகாப்பதற்காக H.C.P.No.835 of 2018 என்ற வழக்கில் விடுப்பு கோரினார்.  நீதிபதிகள்  C.T.செல்வம்  மற்றும் ந.ராமதிலகம் ஆகியோர்,  ஒரு வாரம் பரோல் வழங்கி 28.04.2018-ல் உத்தரவிட்டனர்.  

கோவை குண்டுவெடிப்பு வழக்கில், பாளையங்கோட்டை மத்திய சிறையிலுள்ள கைதி சித்திக் அலி அ சுல்தானின் மனைவி மெஹராஜ், தனது கணவருடன் சேர்ந்து குழந்தை யின்மைக்கு  சிகிச்சை பெற  பரோல் விடுப்பு வழங்கவேண்டி,  சென்னை உயர்  நீதிமன்றத்தில்  H.C.P.(MD).No.1837 of 2017 என்ற வழக்கினைத் தாக்கல் செய்தார். இவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரம் பரோல் வழங்கி 11.01.2018-ல் உத்தர விடப்பட்டது.   அதன்பின்,  மேலும் ஆறு வாரங்கள் விடுப்பு வேண்டி H.C.P. (MD) No.365 of 2018 என்ற வழக்கினைத் தாக்கல் செய்தார். நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி (தலைமை நீதிபதி), புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு,  “சிறைவாசிகளின் தாம்பத்திய சந்திப்பிற்கான உரிமை,  முழுமையான உரிமை அல்ல. சட்டத்தை மதிக்கும் குடிமகனுக்குக் கிடைக்கும் உரிமைகளை, சட்டத்தை மீறும் கைதிகள் அனுபவிக்க முடியாது.  இவர்களுக்கிடையே வேறுபாடு இருக்கவேண்டும்” என்று 20.01.2022-ல் திட்டவட்டமாகக் கூறியது.

jail2

Neha Vs State Of Haryana and Others: குருகிராம் மாவட்டச் சிறையிலுள்ள ஆயுள் தண்டனை சிறைவாசி  கௌரவ் அ சோனு கட்டாரியா-விற்கு, பாலியல் உறவிற்காக பரோல் விடுப்பு வழங்கவேண்டி அவரது  மனைவி நேஹா, ஹரியானா உயர் நீதிமன்றத்தில் C.R.W.P.No.2526 வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவால், சிறைவாசிகளுக்கான பாலியல் சந்திப்புகளை நடைமுறைப்படுத்த சிறை சீர்திருத்தக்குழுவை ஹரியானா மாநிலஅரசு 27.09.2021-ல் அமைத்தது. 

ரஞ்சிதா பட்டேல் Vs  The State Of Bihar:  தனது கணவர் விக்கி ஆனந்த்,  திருமணமான 5 மாதங்களிலேயே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றார்.  பாலியல் உறவிற்காக தனது கணவருக்கு பரோல் விடுமுறை வழங்கக் கோரி,  பாட்னா உயர் நீதிமன்றத்தில், இவரது மனைவி ரஞ்சிதா, வழக்கு (C.W.J.C. No.1868 of 2019) தொடுத்தார். இதனை பீகார் மாநில அரசு 30 நாட்களுக்குள் பரிசீலித்து நியாயமான ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும்,  ஜஸ்வீர் சிங் Vs State of Punjab, என்ற வழக்கில் பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை, பீகார் மாநிலத்தின் சூழலுக்கேற்ப மாற்றி செயல்படுத்த, பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென 12.10.2020-ல் பாட்னா உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு உத்தரவிட்டது.   

கைதிகளுக்கு பாலியல் சந்திப்புகளை நடத்திய இந்தியாவின் முதல் மாநிலம்: பஞ்சாப் மாநிலத்திலுள்ள மத்திய (உயர் பாதுகாப்பு) சிறை கோயிண்ட்வால் சாஹிப்பிலும்,  பெண்கள் சிறை பதிண்டாவிலும், மாவட்டச் சிறை நாபாவிலும் செப்டம்பர் 2022-ல் “Parivar Mulakat’” (பாலியலுக்கான சந்திப்பு) திட்டம் தொடங்கப் பட்டது. இம் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 60 வயதான குர்ஜீத் சிங்தான் முதல் பயனாளி ஆவார். 

இச்சிறையின் அப்போதைய கண்காணிப்பாளர் லலித் கோஹலி "இது குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ஒரு ஜோடிக்கு இரண்டுமணி நேரம்வரை அனுமதிக்கப்படுகிறது. இதற்காக,  அட்டாச்டு பாத்ரூமுடன் கூடிய தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தம்பதி உள்ளே நுழைந்தவுடன், அனைத்துக் கதவுகளும் ஜன்னல்களும் வெளியிலிருந்து பூட்டப்படும். அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், காவலரை வரவழைக்க அழைப்புமணியும்  வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப ஆணுறை களும் வழங்கப்படுகிறது. அத்தம்பதியினருக்கு எச்.ஐ.வி. அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய்கள் இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்களும், திருமணச் சான்றும் கட்டாயம் வழங்கவேண்டும். அதிக ஆபத்துள்ள, கடுமை யான குற்றங்களைச் செய்தவர் களுக்கு இச்சலுகை பொருந்தாது. சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது. கைதிகள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் இச்சலுகையை அனுபவித் துள்ளனர். அக்டோபர் 2022-ல் 17 சிறைகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது''’எனக் கூறியுள்ளார். 

சென்னை மத்திய சிறையில் 08.07.2023-ல் திடீர் ஆய்வு செய்தபின், சிறைவாசிகளுக்கு பாலியல் உறவிற்கான சந்திப்பு (Conjugal Right) சலுகைகளை வழங்கிட,  தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென,  மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி ந.ங.சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பாலியல் உறவிற்காகவும், குழந்தையின்மை சிகிச்சைக்காகவும் சிறை அதிகாரிகளே பரோல் விடுப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு தண்டனைத் தடுப்பு விதிகள், 1982-ல் திருத்தம் செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

(ஊழல் தொடர்ந்து கசியும்) 

-ராம்கி