கைதிகளின் தண்ணீர் தேவை - நிர்வாகத்தின் அலட்சியம்!
தமிழகச் சிறைகளில் குடிநீர் திட்டம்: சிறை விதி 760(2)-ல் ‘மத்திய அல்லது மாவட்ட சிறை அமைந்துள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, டவுன்ஷிப் அல்லது கன்டோன்மென்ட் பகுதிகளில் நடைமுறையிலுள்ள குடிநீர் விநியோகத் திட்டங்களில், சிறையையும் இணைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறை: 153 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேலூர் மத்திய சிறையில், 469 பெண் கைதிகள் மற்றும் 2,130 ஆண் கைதிகளை அடைத்து வைப்பதற்கான வசதி உள்ளது. இச்சிறை வளாகத்திற்குள், சிறை ஊழியர்களின் குடும்பங்கள் வசிக்கும் 250 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்புப் பகுதியில் மட்டும் தினமும் 5,000 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
சிறை வளாகத்திலுள்ள நான்கு ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நான்கு சாதாரண கிணறுகளி லிருந்து, மொத்தம் ஒன்பது நீர்த்தேக்கத் தொட்டி களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் ஆறு தொட்டிகள் தலா 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்டவையாகவும், மூன்று தொட்டிகள் தலா 20,000 லிட்டர் கொள்ளளவு உடையவையாகவும் உள்ளன. மேலும், கைதிகளின் அத்தியாவசியத் தேவைகளுக்காக, 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு 1,000 லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கும் திறன்கொண்ட ஒரே ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. கடுமையான வெப்பநிலை காரணமாக, கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளி லிருந்து பெறப்படும் தண்ணீர் அளவு குறைந்தும், உவர்ப்புத் தன்மையுடனும் காணப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் நாளுக்கு நாள் சவாலாகி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) செயல்படுத்தும் காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், வேலூர் மத்திய சிறைக்கும், சிறை பணியாளர் குடியிருப்புகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 2022-ல் முடிவு செய்தனர். ஆனால் அது இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை.
பாளையங்கோட்டை மத்திய சிறை: பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம், அரசாணை எண்:1005, உள் (சிறை-IV) துறை, நாள்:29.12.2014-ன் அடிப்படையில் ரூ.1.55 கோடி செலவில் தொடங்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் முக்கிய பணிகள் 02.03.2017-ல் முடிக்கப்பட்டன.
ஆனால் மத்திய சிறைக்கு அருகிலுள்ள இரயில் தண்டவாளத்தையும், சிறைக்கு எதிரே அமைந்துள்ள திருவனந்தபுரம் தேசிய நெடுஞ் சாலையையும் கடந்து குடிநீர் குழாய் பதிப்பதற் காக, ரூ.33.34 லட்சம் கூடுதல் செலவினத்திற்கு அரசாணை எண்:1194, உள் (சிறை-IV) துறை, நாள்:21.09.2017 அன்று வெளியிடப்பட்டது. இருப்பினும், தெற்கு ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமிருந்து தேவையான அனுமதி கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பெறப்படாததாலும், பிற நிர்வாகக் காரணங்களா லும், இந்தத் திட்டம் இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால், அரசின் (மக்கள் வரிப்பணம்) ரூ.1.81 கோடி வீணாகியுள்ளது.
மதுரை மற்றும் திருச்சி மத்திய சிறைகள்: மதுரை மத்திய சிறையில், வைகை நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி, சிறை தோட்டப் பகுதியில் (சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தில்) ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான செலவில் இரண்டு பெரிய நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு, சிறை வெளி கேன்டீன் வழியாக விற்பனையும் நடைபெற்றது. ஆனால் இன்று இந்த அமைப்புகள் எதுவும் செயல்படவில்லை. சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தொட்டிகளுக்காகச் செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான அரசு நிதி வீணாகியுள்ளது.
“நடந்தாய் வாழிய காவிரி’ திட்டம், அன்றைய தமிழக முதலமைச்சரால் 20.07.2019 அன்று தொடங்கப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், திருச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான காவிரி ஆற்றின் வளங்களைப் பாதுகாப்பதும், புத்துயிர் பெறச் செய்வதும், மேலும் காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுபாட்டை திறம்படக் குறைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், திருச்சி மத்திய சிறைக்கு கூட்டுக் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
தண்ணீர் மேலாண்மையில் கேரள - தமிழக சிறைத்துறை ஒப்பீடு: இந்திய சிறைகளில், நீர் மேலாண்மையில் கேரள சிறைத்துறை முன்னோடி யாக விளங்குகிறது. உதாரணமாக, ஜனவரி 2014-ல் செயல்படுத்தப்பட்ட எரிசக்தி மேலாண்மைத் திட்டத்தின் மூலம், கேரள சிறைத்துறை மாதத்திற்கு சராசரியாக ரூ.3.5 லட்சம் மின்சாரக் கட்டணத்தைச் சேமித்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 2014-ல் கேரள சிறைகளில் 2,400 மழைநீர் சேகரிப்புக் குழிகள் தோண்டப்பட்டு, கோடை மழை நீரும் சேமிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 2015-ல், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பூஜாபுரா மத்திய சிறையில், நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் மாதத்திற்கு ரூ.7.5 லட்சம் தண்ணீர் கட்டணம் சேமிக்கப் பட்டது. ஜனவரி 2015 முதல், கேரள நீர் ஆணையம் (KWA) மத்திய, மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளுக்கு வழங்கும் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியது. இதன் விளைவாக, மாதத்திற்கு ரூ.8 லட்சமாக இருந்த தண்ணீர் கட்டணம், வெறும் ரூ.50,000 ஆகக் குறைக்கப்பட்டது.
சுமார் 3,000 கைதிகள் மற்றும் சிறைப் பணியாளர்கள் உள்ள பூஜாபுரா மத்திய சிறையில், கேரள நீர் வாரியம் வழங்கும் தண்ணீர், குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விவசாயம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான தண்ணீர் தேவைகள், முழுவதுமாக மழைநீர் சேகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட சொந்த வளங்களிலிருந்து பூர்த்தி செய்யப்படுகின்றன.
சிறை வளாகத்தில் 350 மழைநீர் சேகரிப்புக் குழிகள் அமைக்கப்பட்டு, மூன்று குளங்கள் மற்றும் நான்கு கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. குளங்கள் மற்றும் கிணறுகளில் கழிவுகள் செல்லாமல் இருக்க பக்கவாட்டு சுவர்களும், பாதுகாப்பு வலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக ரூ.40 லட்சம் தேவைப்பட்ட நிலையில், அந்த தொகை ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் கேரளா லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து, சிறை அதிகாரிகளின் முயற்சியால் பெறப்பட்டதாக, அப்போதைய சிறை -DGP டி.பி.சென்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நீரின் தரத்தை உறுதி செய்ய, pH மதிப்பு மற்றும் Escherichia coli பாக்டீரியா இருப்பு உள்ளிட்ட பரிசோதனைகள், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பொது சுகாதார ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. தண்ணீர் மாசுபடாமல் இருக்க சுண்ணாம்பு மற்றும் ப்ளீச்சிங் பவுடர் சேர்க்கப்படுகிறது.
கண்ணூர் மத்திய சிறையில், 2023-24 நிதியாண்டில் தண்ணீர் பயன்பாட்டுக்காக ரூ.55.47 லட்சம் செலவிடப்பட்டது. இந்தச் செலவைக் குறைக்க, ஜூன் 2024-ல் சிறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தண்ணீர் விநியோகம் மற்றும் கிணற்று நீர் மேலாண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் கூட்டு முயற்சியின் பலனாக, 2024-25-ல் தண்ணீர் கட்டணம் ரூ.20.78 லட்சமாகக் குறைக்கப்பட்டு, ஒரே ஆண்டில் ரூ.34.69 லட்சம் சேமிக்கப்பட்டது.
கண்ணூர் மத்திய சிறையின் சமையலறையி லிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, விவசாயப் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. மணல், கரி, சரளை மற்றும் உலோகம் போன்ற சிறையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி, சிறைத்துறைக்கு எந்த நிதிச் சுமையும் இல்லாமல் இயற்கை முறையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள் ளது. திறமைமிக்க கைதிகள் இந்த வசதியை உருவாக்க உதவியுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட நீர் 6.5 pH நிலைக்கு சரிசெய்யப்பட்ட பிறகே பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சிறை வளாகத்திற்குள் உள்ள 21 கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு, அவற்றில் நான்கு கிணறுகள் ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கண்ணூர் மத்திய சிறை, கழிவுகளும் பிளாஸ்டிக்கும் இல்லாத சிறையாக மாற்றப்பட்டுள்ளது.
தண்ணீர் தணிக்கை அவசியம்: தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளின் நீர் ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறுகள், கிணறுகள் மற்றும் குழாய் இணைப்புகளை முழுமையாகக் கணக்கெடுக்க வேண்டும். அவற்றிலிருந்து தினசரி எடுக்கப்படும் நீரின் அளவு மற்றும் பயன்பாட்டை, தண்ணீர் மீட்டர் போன்ற கருவிகள் மூலம் கணக்கிட்டு, நீரைச் சேமிக்கும் வழிகளைக் கண்டறிந்து,
அவற்றை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதற்காக, சிறைத்துறையின் உள்தணிக்கை அலுவலர்களைக் கொண்டு விரிவான “தண்ணீர் தணிக்கை” மேற்கொள்ளப்பட்டு, நீர் சேமிப்பு மற்றும் மிச்சப்படுத்தல் தொடர்பான நடவடிக்கை கள் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை சிறை -DGP மற்றும் IG எடுத்தால், தமிழகச் சிறைகளில் நீர் மேலாண்மை சிறப்பாக அமையும்.
(ஊழல் தொடர்ந்து கசியும்..,)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/jail-2026-01-14-16-50-08.jpg)