ஜெயலலிதா உள்ளே; விசுவாசிகள் வெளியே!
புன்னகை உறைந்த புகைப்படம்; உருகிய அதிகாரம்!

Advertisment


ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதியாக (எண் 7402) VVIP  செல் எண் 23ல் அடைக்கப்பட்டிருந்த 21 நாட் களிலும் பெரும்பாலும் அறைக் குள்ளேயே நேரத்தைக் கழித்தார், புத்தகங்களை வாசித்ததுடன் எழுதுதலிலும் ஈடுபட்டார் என்று பொதுவாகப் பேசப்பட்டாலும், சசிகலா, சுதாகரன்,  இளவரசி மற்றும் வழக்கறிஞர்களுடன் வழக்கின் தன்மைகள் குறித்து ஆலோசித்து மேல்முறையீட்டு மனுக்களைத் தயாரிப்பதிலேயே தனது நேரத்தைச் செலவிட்டார். 

Advertisment

2014 செப்டம்பர் 29 முதல், ஜெயலலிதா கைகாட்டிய ஓ.பன்னீர் செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். ஆட்சி அவர்களிடம் இருந்ததால், வேலூர் மத்திய சிறையின் கண்காணிப் பாளராக இருந்த கருப்பணன், ஜெயலலிதா மீது அதிக விசுவாசம் காட்டினார். அந்த 21 நாட்களிலும், பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அருகிலேயே முகாமிட்டிருந்தார். அங்கு அப்படி என்ன வேலை பார்த்தார் கருப் பணன்? சிறையிலிருந்து தகவல் களைப் பெற்று வழங்குவதன் மூலம் அ.தி.மு.க. கட்சிக்கும் ஜெயலலிதா வுக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டார். அந்தக் காலகட்டத் தில் வேலூர் மத்திய சிறையில் விடுப்பு எதுவும் எடுக்காமல் கடமைப்பணியில்  (On Duty)  இருந்து கொண்டே ஜெய லலிதாவுக்கு ஆற்ற வேண்டிய அரும் பெரும் பணிகளில் மூழ்கித் திளைத்தார். அவரது வருகைப்பதிவில் முறைகேடு நடந்ததையும், இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும் சிறைத்துறையில் எந்த மேலதிகாரியும் பொருட்படுத்தவில்லை.  இச் சேவைக்கான பலன் கிடைக்காமலா போகும்? 2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழையால் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் அரசு அலுவலகங்களே செயலிழந்திருந்த நிலை யிலும், இவருக்கு டி.ஐ.ஜி. பதவி உயர்வு வழங்கப் பட்டது என்பது இன்றுவரையும் வியப்பாகவே பார்க்கப்படுகிறது.  

அந்தப் புகைப்படத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே செம்மஞ்சள் நிற பட்டுப் புடவைகளை அணிந்து தகதகத்து நிற்கின்றனர். கழுத்து நிறைய தங்க நகைகள், இடுப்பில் ஒட்டியாணம், கைநிறைய வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல்கள் பளிச்சிட, ஜெயலலிதாவின் வலதுகை விரல்கள் சசிகலாவின் வலதுகையை மெதுவாகத் தொட்டபடி, உதடுகளில் புன்முறுவலுடன் ஒய்யாரமாக நின்ற அந்தப் புகைப்படம், வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண விழாவின்போது எடுக்கப்பட்டது.

Advertisment

ஜெயலலிதாவும் அவரது உடன்பிறவா சகோதரி என்று சொல்லப்படும் சசிகலாவும் ஒரே சிறையில் வெவ்வேறு அறைகளில் இருந்தபோது, இந்தப் புகைப்படம் சிறை அதிகாரிகள் மட்டத்தில் இருந்து பணியாளர்கள் வரை அவர்களது கைபேசிகளில் ஒரு சுற்று வந்ததும்  “"எப்படி இருந்தவங்க இப்படி ஜெயிலுக்குள் மாட்டிக்கிட் டாங்களே..?'’என்று வருத்தப்பட்டதும்,  கேலி பேசி சிரித்துக்கொண்டதும் நடந்துள்ளது.    

இதுபோன்ற சூழ்நிலைகளிலும் அமைதி யைத் தக்கவைத்துக் கொள்வார் அந்த சிறைத்துறை அதிகாரி. ரமணா திரைப்படத்தில் வரும் யூகி சேது கதாபாத்திரம்போல் புத்திக் கூர்மையுள்ளவர். அவருடன் வேலூர் APCA  பயிற்சி மையத்தில் பழகிய தமிழக சிறைத்துறை அதிகாரி ஒருவர், அவரைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

jail1

"பல ஆண்டுகள் சிறையில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. கைதிகளை கவனமாகப் பார்ப்பார். அவர்களுடைய முகத்தில் தெரியும் பயம், பதட்டம், குழப்பம் போன்ற உணர்ச்சிகளைக் கவனிப்பார். ஆனால் அவற்றை வைத்து உடனே முடிவு எடுப்பதில்லை. அந்த கவனிப்பு அவரது கடமையை மீறாது.

மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அடையாள அணிவகுப்பில், இவரைப் பணியமர்த்தும் போது, ஓரமாக நின்று, பாதுகாப்பு சரியாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்துக்கொள்வார். யாரையும் குற்றவாளி என்று தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க மாட்டார். அது தனது பொறுப்பு அல்ல என்பதை அவர் தெளிவாகப் புரிந்திருந்தார்.

வரிசையில் நின்றிருப்பவர்களின் முகங்களை அவர் இயல்பாகவே கவனிப்பார். சிலரிடம் பதட்டம் தெரிந்தாலும், அதை மனிதர்களுக்கு இயல்பாக வரும் உணர்ச்சியாகவே எடுத்துக் கொள்வார். அதற்கும் மேலாக தனிப்பட்ட கருத்து உருவாக்குவதில்லை.

அணிவகுப்பின்போது உண்மைக் குற்றவாளி யார் என்பது அவரது மனத்திரையில் ஓடியபோதி லும், அவர் அமைதியாகவே இருப்பார். தன் மனத்திரையில் ஓடியவரையே சாட்சி குற்றவாளி என கைகாட்டும் தருணத்திலும், ‘அனுபவம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை’ என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும், அதை அவர் தன்னிடமே வைத்துக் கொள்வார். சட்ட நடைமுறையில், தனிப்பட்ட எண்ணங்களுக்கு இடமளிக்காமல் செயல்படுவார்''’என அந்த அதிகாரி வேலை செய்யும் விதத்தைப்  பெருமை யுடன் கூறியவர்,  அவருடன் கான்பரன்ஸ் கால் மூலம் பேசுவதற்கு தொடர்பு ஏற்படுத்தித் தந்தார். 

ஜெயலலிதா -சசிகலா புகைப்படத்தைப் பார்த்த அந்த நேரத்தில் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை, தற்போது நினைவுபடுத்திக் கூறினார். 

"இந்தப் படம் எடுக்கப்பட்ட காலம் அவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த நேரம். வெளியில் பார்த்தால் இது ஒரு சாதாரண புகைப்படம் மாதிரி தோன்றலாம். ஆனால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் வருவது இயல்புதான். அந்தக் கோணத்தில் பார்த்தால், இந்தப் படம் ஒரு மனநிலையையும் காட்டுகிறது போல எனக்குத் தோன்றியது.

அதிகாரம் நீண்டகாலம் ஒருவரிடம் இருந்தால், ‘எல்லாம் நம்ம கட்டுப்பாட்டில்தான் இருக்கு’ என்ற நம்பிக்கை மனதில் வலுப்படும். அந்த உணர்வு அவர்கள் எப்படி உடை அணிவது, எப்படி தங்களை வெளியில் காட்டிக்கொள்வது போன்ற விஷயங்களிலும் தெரியும். அது அழகுக்காக மட்டுமில்லை; ‘நாம் ஓர் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம்’ என்ற உள்ளுணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

அவ்வளவு நகைகள் போட்டிருந்தது ஏதோ ஒரு மனநிலையைக் காட்டுகிறது போல எனக்குத் தோன்றியது. ஆனாலும், அந்த நேரத்தில் அவர்களுக்கு இருந்த தன்னம்பிக்கை, பாதுகாப்பு உணர்வு போன்றவை இப்படி வெளிப் பட்டிருக்கலாம்.   அந்த நொடியில் அவர்கள் மனதில் சரியாக என்ன இருந்தது என்று நாமெல்லாம் ஊகித்துதான் சொல்ல முடியும். ஆனால் நீண்ட காலம் அதிகாரத் தில் இருப்பவர்களுக்கு ‘இன்னும் வலிமையாகத் தெரியவேண்டும்’ என்ற மனநிலை வருவது புதிதல்ல. அந்தச் சாயல் இந்தப் படத்திலும் தெரிகிறது. 

அதிகாரம் பழக்கமாகிவிட் டால், சில நேரங்களில் ஆபத்துகள் தூரத்தில் இருக்கிறது போலத் தோன்றும். அப்போது கேமரா முன் நிற்பதும் ஒரு சாதாரண விஷயம் இல்லை; ‘நாம் இன்னும் வலுவாக இருக்கிறோம்’ என்று சொல்லாமல் சொல்லும் தருணமாக மாறிவிடும். 

ஆனால் இன்னொரு பக்கம் என்னவென்றால், வெளியில் தைரியம் தெரிந்தாலும், உள்ளுக்குள் ஒரு சிறிய கவலையோ அச்சமோ இருக்கலாம். அது முகத்தில் தெரியாது. புன்னகையிலேயே மறைந் திருக்கும். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும், மனம் முழுக்க அமைதியாக இருக்கவேண்டும் என்பதில்லை. அந்த இருவித உணர்ச்சிகளும் கலந்த நிலையை இந்தப் படம் எனக்கு நினைவூட்டியது'' என்று  அவர் கூறிய விளக்கம், அந்தப் புகைப்படத்தைப் பற்றிய பார்வையை மாற்றியது. 

ஆட்சி அதிகாரத்தை அணுஅணுவாக ரசித்த ஜெயலலிதா போன்றவரும், ஒரு கட்டத்தில் சிறையின் இரும்புக் கதவுகளுக்குள் அடைக்கப்பட்டதே வரலாறு.

சிறை என்பது சுவர்கள் மட்டும் அல்ல; அதிகாரத்தைப் பழகிய மனதுக்கு அது கடினமான தனிமை. ஜெயலலிதா அதிகாரத்தில் இருந்தவர் அல்ல -அதிகாரமாகவே வாழ்ந்தவர். அதனால் அந்த சிறைத்தண்டனை, சட்ட தண்டனைக்கு மேல், அவருடைய உள்ளத்தையே உலுக்கியிருக்கும். 

எப்போது எழவேண்டும், எப்போது சாப்பிடவேண்டும், எப்போது உறங்கவேண்டும் என்பதைக்கூட வேறு யாரோ தீர்மானிக்கும் வாழ்க்கை -இது யாருக்கும் எளிதல்ல. ஒரு காலத்தில் முழு அரசியல் இயந் திரமே தன் சைகைக்குக் காத்திருந்த ஒருவருக்கு, இந்த மாற்றம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று நினைத்தாலே புரியும்.

இரவு நேரங்கள் அமைதியாக இருந்திருக்காது. பயத்தால் அல்ல; பழைய உயரத்தின் நினைவால்.  அந்த இரவுகளில் அவருக்குள் இரண்டு உணர்ச்சிகள் மோதியிருக்க லாம் -நான் இன்னும் வலுவான வள்” என்ற நம்பிக்கை. இது எப்படி நடந்தது?’என்ற கேள்வி. இந்த இரண்டிற்கும் நடுவே, அதிகாரத்தை வாழ்வாகக் கொண்ட மனம் மெதுவாக சோர்ந்திருக்கலாம்.

அவர்  வெளியில் அழுதிருக்க வாய்ப்பில்லை. ஆனால் உள்ளுக்குள் ஒரு உடைப்பு இருந்திருக்கலாம். அவரைச் சுற்றிய மௌனம், “நீ இல் லாமலும் உலகம் போகிறதே’என்ற உண்மையை தினமும் நினைவூட்டியிருக்கும். அந்த உண்மைதான், எந்தத் தீர்ப்பையும்விடக் கடினமானது. ஜெயலலிதா போன்றவர்கள் தண்டனை பெற்று வீழ்ந்தாலும், வாழ்நாள் முழுவதும் மடங்கிப் போகமாட்டார்கள். காலம், அதையே தமிழக மக்களுக்கு நன்றாகக் காட்டியது.

விடுதலைக்காகப் போராடி, இந்தியாவில் மிக நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உடலும் மனமும் கடுமையாகச் சிதைந்த ஒரே மனிதர் யார்?

(ஊழல் தொடர்ந்து கசியும்)