பார்வையாளர்கள் யார்? அவர்கள் ஏன் தேவை?  

மிழக சிறைகளின் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து விசாரிக்க வேண்டி, சென்னை உயர் நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் வைகை, சிறை விதி-1983, தொகுதி-II, பகுதி-26, விதி எண் 505 முதல் 519 வரை (தற்போது சிறை விதி, 2024 - பகுதி 26, விதி எண் 502 முதல் 517 வரை) தெளிவாகக் கூறியுள்ள அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் சாரா பார்வை யாளர்கள் கொண்ட பார்வையாளர் குழுவை அமைப்பது எவ்வளவு அவசியம் என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இந்தப் பார்வையாளர் குழுவின் உறுப்பினர்கள், சிறையில் உள்ள எந்தவொரு கைதியுடனும், அவர்கள் விரும்பினால், ரகசியமாகவும் தனித்தனியாகவும் உரையாடும் அதிகாரம் பெற்றவர்கள் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Advertisment

ஆனால் இங்கே ஒரு அடிப்படை கேள்வி எழுகிறது. Official and Non-Official Visitors என்பவர்கள் யார்? இவர்களின் முக்கியத்துவம் என்ன? சிறை நிர்வாகத்தில் இவர்களால் என்ன செய்ய முடியும்? இதன் வரலாற்றுப் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறியாமல், சிறை சீர்திருத்தம் குறித்து பேசுவது வெறும் வார்த்தை அலங்காரமாகவே மாறிவிடும்.

Advertisment

சிறை விதி 503/2024-ன் படி, மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட நீதிபதி, தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் கோட்டாட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன், சுகாதார சேவைகள் இணை இயக்குநர் அல்லது துணை இயக்குநர், தமிழ்நாடு காவல் வீட்டுவசதிக் கழகத்தின் நிர்வாகப் பொறியாளர், மாவட்ட அளவிலான காவல் வீட்டுவசதிக் கழக நிர்வாகப் பொறியாளர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேளாண் அலுவலர், மாவட்ட தொழில்துறை அலுவலர், கால்நடை பராமரிப்பு இயக்குநர், மாவட்ட கால்நடை மருத்துவர், நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், கோட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகியோர் அதிகாரப்பூர்வ பார்வை யாளர்களாக இருப்பார்கள்.

இந்தப் பட்டியல் ஒன்றை மட்டும் பார்த்தாலே, சிறை என்பது காவல் துறையின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு மூடப்பட்ட வளாகம் அல்ல என்பதும், அது நிர்வாகம், நீதித்துறை, சுகாதாரம், கல்வி, சமூக நலன், மனிதாபிமானம் ஆகிய அனைத்தும் ஒன்றாக இணையும் ஒரு பொது நிறுவனம் என்பதும் சட்டத்தின் நிலைப்பாடாக வெளிப்படுகிறது.

Advertisment

சிறை விதி 504/2024-ன்படி, ஒவ்வொரு மத்திய சிறைக்கும் ஆறு அலுவல் சாரா பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்களில் குறைந்தது இருவர் பெண்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கான சிறப்புச் சிறைகளுக்கு மூன்று பெண்கள் அலுவல் சாரா பார்வையாளர் களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டச் சிறை, சிறப்பு கிளைச் சிறை, திறந்தவெளிச் சிறை மற்றும் கிளைச் சிறைகளுக்கு இரண்டு அலுவல் சாரா உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இவர்களை தமிழக அரசு நியமிக்கும்.

இந்த அலுவல் சாரா பார்வையாளர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். தொடர்ச்சியாக மூன்று பதவிக்காலங்களுக்கு மேல் அல்லாத வகையில் மீண்டும் நியமிக்கலாம். நியமிக்கப்பட்ட பின்னர் இவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்பு கள் குறித்து கட்டாயமாகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான அலுவல் சாரா பார்வையாளர்களின் பட்டியலை சிறைக் கண்காணிப்பாளர்கள் பராமரிக்க வேண்டும். இவை அனைத்தும் சட்டத்தில் எழுதப்பட்ட விதிகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது; நடைமுறையில் உயிர்ப்புடன் செயல்பட வேண்டிய பொறுப்புகள் ஆகும்.

சிறைச் சட்டம் 1894-ல்தான் சிறை வருகை முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றது. பிரிவு 12-ன் படி, சிறை நிர்வாகம் குறித்து பார்வை யாளர்கள் தங்கள் பரிந்துரைகளைப் பதிவுசெய்யும் Visitors Book-ஐ சிறைக் கண்காணிப்பாளர் பரா மரிக்க வேண்டும். பிரிவு 59(25)-ன் கீழ், Visitors தொடர்பான விதிகளை உருவாக்க மாநில அரசு களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதன் அடிப் படையில்தான் இந்திய மாகாணங்களில் Official Utßm Non#Official Visitors நியமிக்கப்பட்டனர்.

18.04.1919 அன்று Government of India, Home Department (Jails) Resolution No.63-ன்படி, சர் அலெக்சாண்டர் ஜி. கார்டியூ தலைமையில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்தியச் சிறைக் கமிட்டி (1919-1920) நியமிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் பகுதி 18, பாரா 511 முதல் 523 வரை, Visitors அமைப்பு இந்தியச் சிறை நிர்வாகத்தின் மிகவும் மதிப்புமிக்க பகுதிகளில் ஒன்றாக இருப்பதாகவும், சுதந்திரமான, பாரபட்சமற்ற பார்வையாளர்களின் வருகைகள் சிறைச் சட்டங் களும் விதிகளும் முறையாகக் கடைப்பிடிக்கப் படுவதை அரசுக்கும் பொதுமக்களுக்கும் உறுதி செய்யும் என்றும், துஷ்பிரயோகங்கள் ஏற்பட்டால் அவை விரைவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படும் என்றும் தெளிவாகக் கூறியது.  

மேலும், பொதுமக்களிலிருந்து அலுவல் சாரா பார்வையாளர்களை நியமிப்பதன் மூலம்  சிறைப் பிரச்சினைகளை சமூகமே நேரடியாக அறிந்துகொள்ளும் பயிற்சித் தளமாக செயல்படும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.

மாதிரி சிறைக் கையேடு 1970: பார்வை யாளர் அமைப்புக்கான தேசிய வழிகாட்டல்: இந்திய முழுவதும் ஒரே மாதிரியான சிறை விதிகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு வழிகாட்ட, மத்திய அரசு வெளியிட்ட Model Prison Manual, 1970-ன் VI-வது அத்தியாயம், மாவட்ட நீதிபதி தலைவராகவும், அமர்வு நீதிபதி, சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வெளி மருத்துவ அதிகாரி, நிர்வாகப் பொறியாளர், மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட வேளாண் அதிகாரி, பொது சுகாதார அதிகாரி மற்றும் இரண்டு பெண் உறுப்பினர்கள் Official Visitors ஆக இருக்கவேண்டும் என்றும் கூறுகிறது.

திஹார் சிறை -மனித உரிமை வரலாற்றின் திருப்புமுனை:  1977-ல் திஹார் மத்திய சிறையில் மரண தண்டனைக் கைதியாக இருந்த சுனில் பத்ரா, அவருடன் மரண தண்டனைக் கொட்டடியில் இருந்த பிரேம்சந்திடம் சிறைத் தலைமைக் காவலர் மாகர்சிங் பணம் கேட்டு, அதை வழங்க மறுத்ததற்காக அடித்துச் சித்ரவதை செய்து, ஆசனவாயில் இரும்புக் கம்பி செலுத்திய கொடூரம், இந்திய சிறை வரலாற்றையே உலுக்கியது. இரத்தம் தொடர்ந்து வெளியேறி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரேம்சந்துக்காக, சுனில் பத்ரா அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை உச்ச நீதிமன்றமே Habeas Corpus மனுவாக மாற்றியது.

வழக்கறிஞர்கள் Y.S.சாஹல் மற்றும் முகுல்முட்கல் அமிகஸ் கியூரிகளாக நியமிக்கப்பட்டு சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை, பணம் கொடுக்காததே சித்திரவதையின் காரணம் என்றும், ஏற்பட்ட காயம் கீழே விழுந்ததால், சுயமாக செய்துகொண்ட தால் அல்லது மூலநோயால் ஏற்பட்டதாகக் கூறி, உண்மையை மூடிமறைக்க சிறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டு முயன்றனர் என்றும் வெளிப்படுத்தியது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் V.R.கிருஷ்ணய்யர், R.S.பதக், O.சின்னப்ப ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு 20.12.1979 அன்று வழங்கிய தீர்ப்பு, இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்தத் தீர்ப்பில், சிறைகளுக்குள் Official மற்றும் Non-Official Visitors எந்தத் தடையுமின்றி வந்து சிறையைப் பார்வையிடுவதும், விசாரிப்பதும் எவ்வளவு அவசியம் என்பதையும், மனிதத்தன்மை சிறைச் சுவர்களுக்குள் நுழைந்தவுடன் கைவிடப்பட வேண்டிய உரிமை அல்ல என்பதையும் உச்ச நீதிமன்றம் உறுதியாகப் பதிவு செய்தது.

சிறை என்பது தண்டனைக்கான இடமாக இருக்கலாம். ஆனால் அது மனிதத்தன்மை இழந்த இடமாக இருக்க முடியாது. Visitors அமைப்பு செயல்படவில்லை என்றால், சிறைக்குள் நடப்பவை வெளியுலகத்துக்குத் தெரியாமல் மறைந்துவிடும். அது செயல்பட்டால், அங்கு நடப்பவை வெளிச்சத்திற்கு வரும். இது சட்டத்தின் கோரிக்கை மட்டுமல்ல; மனிதநேயத்தின் கட்டளை.

(ஊழல் தொடர்ந்து கசியும்…)