குடிநீர் சட்ட விதிகளும் நடைமுறை உண்மையும்!
சிறைத்துறை தலைவர் (DGP) சிறையை ஆய்வு செய்யும் ஒவ்வொரு முறையும், சிறையில் வழங்கப்படும் குடிநீர் வசதி, சுகாதார ஏற்பாடுகள் மற்றும் மருத்துவ நிர்வாகத்தின் நிலை குறித்து அவசியமாக விசாரணை மேற்கொள்ளவேண்டும் (விதி 14(4)). சிறைக் கண்காணிப்பாளர் மேற்கொள்ளும் வாராந் திர ஆய்வின்போது (ஒவ்வொரு செவ்வாய்கிழமை யும்), சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து சிறை மருத்துவர் நேரடியாக விசாரணை நடத்தவேண்டும் (விதி 96). சிறைக்கு வழங்கப்படும் நீர் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக் கக்கூடும் என தலைமை மருத்துவ அதிகாரி கருதினால், அந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய தேவையான பரிந்துரைகளை எழுத்துப்பூர்வ அறிக் கையாக சிறைக் கண்காணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் (விதி 99 (a)). மேலும், சிறை மருத்துவர் சிறையில் நீர் சேமித்து வைக்கப்படும் அனைத்துத் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களையும் தினசரி ஆய்வு செய்யவேண்டும். தேவையான சமயங்களில், நீரின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் (விதி 111 (s)).
குடிநீர் ஆதாரங்களின் மேலாண்மை: சிறைக்கு குடிநீர் பெறப்படும் ஆதாரங்கள் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவை எந்தவித மாசுபாடும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். குடிநீர் ஆதாரமாகக் கிணறுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, கிணற்றின் வாய்ப்பகுதி முழுமையாக சிமென்ட் தளத்தால் மூடப்பட்டிருக்க வேண்டும் (விதி 760). ஒவ்வொரு கிணறும் வருடத்திற்கு குறைந்தது ஒருமுறை அல்லது அவசியம் ஏற்படும்போது சுத்தம் செய்யப்படவேண்டும். மேலும், வாரத்திற்கு ஒருமுறை, ஒவ்வொரு குடிநீர் கிணற்றிலும் உள்ள நீரின் ஆழம் சோதனை செய்யப்பட்டு, அதற்கான விவரங்கள் உரிய பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிக்கப்பட வேண்டும் (விதி 761). குடிநீர் பெறப்படும் கிணறுகளில் அந்த நீர் கைதிகளின் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என நம்பத்தக்க காரணம் இருந்தால், அத்தகைய கிணறுகள் மூன்று நாட்கள் இடைவெளியில், தேவைக்கேற்ப பொட்டாசியம் பெர்மாங்கனேட் டை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட வேண்டும் (விதி 766). குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர், சிறைத்துறை தலைவர் (DGP), சிறையின் மருத்துவர் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் வடிகட்டப்படலாம். மேலும், எந்தவொரு சிறைக்கும் அருகில், கைதிகளின் உடல்நலத்திற்கு தீங்குவிளைவிக்கும் வகையில் ஆலைகள் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால்கள் அமைக்கப்படவோ, அனுமதிக்கப்படவோ கூடாது (விதி 762).
சிறைகளில் குளியல் -சுகாதார ஏற்பாடுகள்: சிறை விதி 268-ன்படி, ஒவ்வொரு சிறையிலும் பத்து கைதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் குளிப்பதற் கான மூடிய அறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு குளியலறையும் 5 அடி பு 5 அடி அளவில் அமைக்கப்பட வேண்டும். மேலும், ஒரு நபரின் தினசரி நீர் தேவையானது சுமார் 135 லிட்டர் என்பதைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு சிறையிலும் போதிய அளவு குடிநீர் மற்றும் குளியல் பயன்பாட்டிற்கான தண்ணீர் தொடர்ந்து கிடைக்குமாறு சிறை நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், அனைத்துச் சிறை கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங் கள் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும்.
சிறை விதி 267-ன்படி, ஒவ்வொரு கைதிக்கும் பல் துலக்குவதற்காக மாதந்தோறும் 50 கிராம் பல்பொடி காதி நிறுவனத்திலிருந்து பெற்று வழங்கப்படுகிறது. மேலும், சிறைவாசிகள் குளிப்பதற்காக மாதந்தோறும் 150 கிராம் குளியல் சோப்பு திருச்சி மத்திய சிறையில் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்துச் சிறைகளுக்கும் விநியோ கிக்கப்படுகிறது. இருப்பினும், நடைமுறையில் இந்தப் பல்பொடி மற்றும் குளியல் சோப்புகள் சுமார் 95 சதவீதம் கைதிகளால் தனிப்பட்ட சுகாதாரப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
பயன்படுத்தப்படும் சில சந்தர்ப்பங்களிலும் பல்பொடி, கழிவறையைச் சுத்தம் செய்வதற்கும், குளியல் சோப்பு, துணி துவைப்பதற்குமான பயன்பாட்டிற்கும் மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, குளியல் சோப்புகளை முழுநாள் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, அதில் துணிகளை ஊறவைத்து துவைக்கும் நடைமுறை காணப்படுகிறது. இந்நிலையில், இத்தகைய பல்பொடி மற்றும் குளியல் சோப்புகளை வாங்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும் அரசு செலவழிக்கும் தொகைக்கு இணையான மதிப்பில், சந்தையில் கிடைக்கும் தரமான சோப்புகளை நேரடியாக வாங்கி வழங்குவது நடைமுறைப்பூர்வமாக வும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
தொற்றுநோய் கால குடிநீர் பாதுகாப்பு: தொற்றுநோய் பரவல் காரணமாக குடிநீரை கொதிக்க வைக்கவேண் டிய அவசியம் ஏற்பட்டால், சிறை மருத்துவரது அறிவுரையின் பேரில், குடிநீரை முறையாகவும் முழுமையாகவும் கொதிக்க வைக்கவேண்டும். இதற்காக பயன்படுத்தப் படும் எல்.பி.ஜி.(LPG) எரிவாயு, ஒருவருக்கு ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 300 கிராம் அளவுக்கு மேல் செலவிடப்படக்கூடாது (விதி 679). மேலும், மழைக்காலங்களில் மற்றும் சிறைகளில் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் காலங்களில், கைதிகளுக்குச் சுடு தண்ணீர் வழங்கப்பட வேண்டும். குடிநீரைக் கொதிக்கவைப்பது முறையாக நடைபெறு வதை உறுதி செய்வதற்கான பொறுப்பு சிறைக்கண்காணிப்பாளருக்கும், தலைமை மருத்துவ அதிகாரிக்கும் உரியதாகும். அதேபோல், குடிநீரை கொதிக்கவைக்கும் செயல்முறையை நேரடியாக மேற்பார்வை யிடுவதற்காக ஒரு பொறுப்பான அதிகாரி நியமிக்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்யவேண்டும் (விதி 680).
குடிநீரின் வேதியியல் -பாக்டீரியா வியல் பரிசோதனை: சிறை விதி 765-ன்படி, சிறைகளில் குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்தப்படும் நீரின் மாதிரிகள், வேதியியல் மற்றும் பாக்டீரியாவியல் பரிசோதனைக்காக வருடத்திற்கு குறைந்தது இருமுறை, தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கிண்டியில் செயல்படும் King Institute of Preventive Medicine and Research நிறுவனத்தின் இயக்குநருக்கு அனுப்பப்பட வேண்டும். நீரின் மூலம் தொற்றுநோய் பரவுகிறது என நம்பத்தக்க காரணம் ஏற்பட்டால், சிறை மருத்துவ அதிகாரியின் பரிந்துரையின் பேரில், நீர் மாதிரிகள் உடனடியாக பரிசோதனைக்காக அனுப்பப்பட வேண்டும். மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வு அறிக்கையின் ஒரு நகலை King Institute இயக்குநர் உரிய காலத்திற்குள் சிறைக் கண்காணிப்பாளருக்கும், மற்றொரு நகலை சிறைத் துறை தலைவருக்கும் (உஏட) அனுப்பவேண்டும்.
நீர் பரிசோதனை தொடர்பான நடைமுறைகள் சிறை விதி கையேட்டின் இணைப்பு VIII-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, பாக்டீரியாவியல் மற்றும் வேதியியல் பரிசோதனைக் காக, சிறைகளில் பயன்படுத்தப்படும் நீரின் மாதிரிகள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறைKing Institute of Preventive Medicine and Research, கிண்டி அல்லது முதன்மை பொது சுகாதார ஆய்வகம் (Principal Public Health Laboratory), கோயம்புத்தூர் ஆகிய ஆய்வகங்களின் நீர் ஆய்வாளருக்கு அனுப்பப்பட வேண்டும். இருப்பினும், நடைமுறையில் எந்தச் சிறையிலும் இவ்விதமான பரிசோதனைக்காக நீர் மாதிரிகள் முறையாக அனுப்பப்படுவதில்லை.
King Institute of Preventive Medicine and Research, கிண்டி ஆய்வகத்திற்கு, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட வேண்டும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து பெறப்படும் நீர் மாதிரிகள், கோயம்புத்தூரில் செயல்படும் முதன்மை பொது சுகாதார ஆய்வகத்தின் நீர் ஆய்வாளரிடம் பரிசோதனைக்காக அனுப்பப்பட வேண்டும். பாக்டீரியாவியல் பரிசோதனைக்கான நீர் மாதிரிகளை சேகரிப்பதற்குத் தேவையான பாட்டில்கள் மேற்கண்ட ஆய்வகங்களிடமிருந்து பெறப்பட வேண்டும். மாதிரி எடுக்கும் தேதி மற்றும் நேரம் முன்கூட்டியே உறுதி செய்யப்பட வேண்டும்.
சரியான நேரத்தில், உரிய வெப்பநிலையில் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முறையில் நீர் மாதிரிகளைச் சேகரித்து, பேக்கிங் செய்து அனுப்புவதற்கான பொறுப்பினை சிறைக் கண்காணிப்பாளரும், சிறை மருத்துவரும் இணைந்து ஏற்கவேண்டும். ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டிய மாதிரிகள் நம்பகத்தன்மைகொண்ட சிறை வார்டன் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவசரத் தேவைகள் ஏற்படும் சூழ்நிலைகளில், Tamil Nadu Water Supply and Drainage Board (TWAD Board) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சென்னை தலைமை நீர் ஆய்வாளரின் (Chief Water Analyst) சேவைகளைப் பயன்படுத்தலாம். அவரின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் இளநிலை நீர் ஆய்வாளர்களின் மூலம், நீர் பரிசோதனை சேவைகளைப் பெற தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஊழல் தொடர்ந்து கசியும்...)
-ராம்கி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/jail-2026-01-06-11-15-48.jpg)