சிறையில் பிறப்பு/இறப்பு பதிவு செய்தல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை எண்:559, நாள்: 15.03.1977 மற்றும் சிறை விதி: 772/1983, 769/2024-ன்படி, சிறையில் பிறப்பு/இறப்பு நிகழ்ந்தால், அதனைப் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969, பிரிவு 7(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்காக நியமிக்கப்பட்ட அந்தப் பகுதியின் பதிவாளருக்கு எழுத்துப்பூர்வமாக ஜெயிலர் கடிதம் அனுப்பவேண்டும்.

Advertisment

சிறையில் பிறப்பு: சிறையில் 99.9% பிறப்பும் இறப்பும் நடக்க, சிறை அதிகாரிகள் விடமாட் டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. பெண் கைதி கருவுற்றிருந்தால் சிறையில் அனுமதிக்கும்போதே இது குறித்து உரிய பதிவேடுகளில் பதிவு மேற்கொள்ளப்பட்டு, பிரசவத்திற்கு 99.9% நீதிமன்றத்தால் பிணை/விடுப்பு வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட பெண் கைதிக்கு  உயிர் பாதுகாப்பு அபாயம் இருக்கும் போது மட்டுமே, சிறைக்கு வெளியே குழந்தை பெற்றெடுக்கும் வசதி மறுக்கப்பட்டு, சிறைக்குள்ளேயே குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும் (சிறை விதி:942). 

Advertisment

ஒரு பெண் கைதி தனது குழந்தையை 6 வயது வரை சிறையில் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம் (சிறை விதி:951). அவ்வாறு வைத்திருக்கும்போது  தாய் இறந்துவிட்டால்,  அந்தக் குழந்தையைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, சிறை அமைந்துள்ள மாவட்டத்தின்  ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும் (சிறை விதி:769(5)). 

தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் கைதி இறந்தால் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை:  தமிழகச் சிறைகளில் 06.12.2025-ன் லாக்அப் அறிக்கையின்படி சிறையில் மொத்தம் 21,321 கைதிகள் உள்ளனர். இதில் 6,497 பேர் மட்டுமே தண்டனைக் கைதிகள். இதனை ஒரு சிறிய கிராமமாகக் கருதினால் இறப்பு என்பது சகஜமாக நடைபெறுவதுதான் என்றாலும், கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், சிறைக்குள் கைதி எந்த நிலையில் இறந்தாலும் (கொலை/தற்கொலை/இயற்கை மரணம்) சிறைவாசிக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிறை ஆம்புலன்சில் ஏற்றி, சிறை அதிகாரிகள் அனுப்பிவைப்பார்கள். வரும் வழியில் இறந்து விட்டதாக வெளியில் உள்ள அரசு மருத்துவர்களிடம் அறிக்கை பெறுவார்கள்.

Advertisment

அதனை அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்படும் Police Intimation Register-ல் பதிவு செய்து, அந்த மருத்துவமனையின் RMO,, சிறை அதிகாரிகளுக்கும், வெளியில் உள்ள OP (Out Post or Observation Post) Police station-க் கும் தகவல் கொடுப்பார். சிறை அதிகாரிகள் சிறைவாசியின் உறவினர்களுக்கும், அரசுக்கும், மாவட்ட ஆட்சியர், மாநகர/மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், மாநில/தேசிய மனித உரிமைகள் ஆணையம், சிறையின் வரம்பிற்குள் வரும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிப்பார்கள். இந்தக் காவல் நிலையத்தில் CRPC: 176(1A)/BNSS:  198(1)-ன் கீழ் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்படும். அதன்பின் நீதித்துறை நடுவரின் தலைமையில் விசாரணை நடக்கும். மருத்துவமனையில் post mortem நடக்கும். அதன்பின், சிறைவாசியின் உறவினர்களுக்கு இறப்பில் சந்தேகம் இல்லை என்றால், சிறை விதி 771-ன்படி, மருத்துவமனை யின் கண்காணிப்பாளர் (Medical Superintendent), சிறைக் கண்காணிப்பாளருடன் கலந்தா லோசித்து, கைதியின் உடலை அவரது உறவினர் கள்/நண்பர்களிடம் ஒப்படைப்பார். சந்தேகம் இருந்தால் போராட்டம், மறு உடற்கூராய்வு, உயர்நீதி மன்றத்தில் வழக்கு என  தொடர்ந்து பல நிகழ்வுகள் நடைபெறும். யாரும் கைதியின் சடலத்தைக் கோரவில்லை என்றால், ஆதரவற்றவராகக் கருதி, தமிழ்நாடு உடற்கூறியல் (The Tamil Nadu Anatomy Act, 1951) சட்டத்தின்படி, நகராட்சி அதிகாரிகள் மூலம் மருத்துவக் கண்காணிப்பாளர் சடலத்தை அப்புறப்படுத்துவார்,  அல்லது உடற்கூறியல் கல்வி கற்கும் நோக்கத்திற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்புவார்.

jail1

கைதி சிறையில்தான் இறந்தார் என்பதை ஒத்துக்கொண்டால் என்ன நடக்கும்? சிறையில் கைதி இறந்தார் என்று உயர் அதிகாரிகள் ஒத்துக்கொண்டால், கைதியின் உறவினர்கள்/நண்பர்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் சிறையை அடைவதற்கு நியாயமான வாய்ப்பு இருந்தால்,  இறந்த உடலை சிறையில் 24 மணி நேரமும் பாதுகாத்து வைக்கவேண்டும். சிறைவாசி இறந்த இடத்தையும் (SOC # Scene Of Crime)  பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். இறந்த சிறைவாசியின் உடலில் உள்ள அங்க மச்சம்/தழும்புகள் உள்ளிட்ட அடையாளங்கள் குற்றவாளிப் பதிவேட்டுடன் ஒத்துப்போகிறதா என்பதைச் சிறைக் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும், சிறைக்குள் இறந்த சிறைவாசியின் அனைத்துக் கைரேகையையும் எடுத்து பாதுகாப்பாக சேமிக்க The Fingerprint Bureau#- விற்கு உடனடியாகத்  தகவல் தெரி விக்கவேண்டும்.  இறந்த கைதியின் நெருங்கிய உறவினர் சடலத்தை எடுத்துச் செல்வதற்கான செலவை ஏற்க இயலாமையை வெளிப்படுத்தி, சடலத்தை அரசாங்கச் செலவில் கொண்டு செல்ல உதவுமாறு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தால், சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளர், சடலத்தை கைதியின் வசிப் பிடத்திற்கோ அல்லது விண்ணப்பதாரரின் இடத் திற்கோ அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யவேண் டும். G.O.Ms.No.388, Home (Prison), நாள்: 01.03.2004 மற்றும் சிறை விதி: (1-ஆ)/1983-ன்படி, ஒரு கி.மீ.க்கு ரூ.3/- வீதம் அதிகபட்சம் ரூ.750-க்கு உட்பட்டு, சடலத்தைக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யலாம். தற்போது சிறை விதி: 768(2)/2024-ன்படி ஒரு கி.மீ.க்கு ரூ.12/- வீதம்  அதிகபட்சம் ரூ.5000/- என்ற வரம்பிற்குட்பட்டு, அரசாங்கச் செலவில் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யவேண்டும். உறவினர்கள்/நண்பர்கள் உடலைப் பெற்றுக்கொள்ளும்போது போராட் டத்திலோ,  சாலைமறியலிலோ ஈடுபடக்கூடும். மேற்கண்டவற்றால் சிறையின் அன்றாடப் பணிகள் பாதிக்கும், சிறை நிர்வாகம் ஸ்தம்பிக்கும். மேலும்,  எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சிறை விதி:664/2024-ன்படி நீதித்துறை நடுவர் விசாரணை மற்றும் சிறை விதி:665/2024-ன் படி பிரேத பரி சோதனை ஆகியவை நடத்தப்படுவ தற்கு முன்பு உடலை ஒப்படைப் பதோ அல்லது வேறுவிதமாக அப்புறப்படுத்துவதோ கூடாது. 

இத்தனை பிரச்சனைகள் இதில் இருப்ப தால்தான், கைதி சிறையில்தான் இறந்தார் என்று சிறை அதிகாரிகள் 100 சதவீதம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். போகும் வழி யிலே மரணம் என்றுதான் கொண்டுவருவார்கள். 

ஒரு சிறைவாசி சிறையில் தற்கொலை செய்துகொண்டால், அவர் தனது இறப்புக்கு  இந்த அதிகாரிதான் காரணம் என்று ஏதேனும் கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா என்று அந்தச் சிறைவாசியின் அறையில் சோதனை நடத்தி, அதனையும் இதர ஆதாரங்களையும் அழிக்கும் வேலைகள் நடந்ததுண்டு. போகும் வழியில் சிறைவாசிகளின் இறப்பு என்ற தில்லுமுல்லு வைக் கண்டுபிடித்த சிறை DGP  அமரேஷ் பூஜாரி, போகும் வழியில் கைதி இறந்தால் சம்பந்தப் பட்ட சிறைக் கண்காணிப்பாளரே பொறுப்பு என்றும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏப்ரல், 2023-ல் உத்தரவே போட்டிருந் தார். அவர் பணியிட மாறுதலில் செல்லும்வரை சிறை அதிகாரிகள் கலங்கிப்போய் இருந்தனர்.  அந்தச் சமயத்தில் சிறை அதிகாரிகள், ஒரு இறப்பு கூட போகும் வழியில் நடக்கவிடாமல் மிகவும் கவனமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சம்பந்தப்பட்ட அதிகார மையங்களுக்குத் தகவல் தெரிவித்தல்: தண்டனை பெற்ற கைதி சிறையில் இறந்தால், அவரது வாரண்ட், மரணத் திற்கான காரணம் உள்ளிட்ட அனைத்துத் தக வல்களும், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற் குத் திருப்பி அனுப்பப்படும். இதுவே ஒரு ரிமாண்ட்/விசாரணை கைதி சிறையில் இறந்தால், இறந்தவருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ள நீதிமன்றங்களுக்கு மரணம் குறித்த தகவல்  உடனடியாக எழுத்துப்பூர்வ மாகத் தெரிவிக்கப்படும். ஒரு இராணுவக் கைதி சிறையில் இறந் தால், அவரை சிறைக்கு அனுப் பிய கட்டளை அதிகாரிக்கு உட னடியாகத் தகவல் தெரிவிக்கப் படும். ஒரு வெளிநாட்டு கைதி சிறையில் இறந்தால், சிறை DGP, மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் உள்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். இதுகுறித்து தமிழக அரசு, தூதரகம்/பொருத்தமான அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கும்.  சிறையில் இறந்த கைதியின் மரணம் தொடர்பான அனைத்துப் பதிவுகளும் இரண்டு ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்படும்.

முன்பு சிறையில் இறந்த சிறைவாசிகளைப் புதைப்பதற்கென்று சிறைக்கு வெளியே சிறைவளாகத்தில் தனியாக ஒரு சுடுகாடு இருந்தது.  தற்போது அந்தச் சுடுகாடுகள் இருந்த இடமே தெரியாத அளவிற்கு காலம் மாறிவிட்டது.  முன்பெல்லாம் சுடுகாட்டுக்குச் சென்று வருவதையும் சிறைக்குச் சென்று வருவதையும் ஒன்றாகக் கருதி, சிறைக்கு சென்று வந்தபின் குளிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்தது.  ஏனென்றால், மனிதனின் கடைசி இடம் சுடுகாடு.  சமூகத்தின் கடைசி இடம் சிறைச்சாலை. 

(ஊழல் தொடர்ந்து கசியும்...)