கைதிகளைக் காக்கும் மருத்துவச் சான்றிதழ்!  


சிறை மருத்துவச் சான்றிதழ்:  சிறை நிர்வாகத்தில் கைதிகளுக்கு சிறை மருத்துவரால் வழங்கப்படும்  மருத்துவச் சான்றிதழ் என்பது சிறைவாசிகள் மத்தியில் அதிக மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால்,  நீதிமன்றங்களில் மருத்துவர்களின் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால்தான். உதாரணமாக, சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றங்களில் சிறைவாசிகளை ஆஜர்படுத்தும் தற்போதைய காலகட்டத்திற்கு முன்பு, சிறைவாசி களை விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தும் நேர்வுகளில், சிறைவாசிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல்,  தங்களது வழக்கின் விசாரணைகளை நீட்டிப்பதற்காக/இழுத்தடிப்பதற் காக சிறை மருத்துவரிடம்  Unfit For Travel  என்று  மருத்துவச் சான்றிதழ் வாங்கி, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அவ்வாறு சான்றிதழ் வழங்க சிறை மருத்துவர்களுக்கு கைதிகள் அழுத்தம் கொடுக்கும்  சம்பவங்கள் தமிழகச் சிறைகளில் பரவலாக நடந்துள்ளன.   

Advertisment

சிறை மருத்துவர் கொலை: கடந்த 29.05.2011-ல் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில் டாக்டர் புத்ததேவ் சிங் பூடியோவிடம், நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்ப்பதற்காகப் போலி மருத்துவச் சான்றிதழ்களை வழங்குமாறு சில கைதிகள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால் மருத்துவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,  ஏழு கைதிகள் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. மேலும், இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவுசெய்ததும் குறிப்பிடத்தக்கது. 

Advertisment

சிறையில் இருக்கும் உடல்நலம் குன்றிய சிறை வாசிகளை விடுதலை செய்வதற்கு, சிறை மருத்துவ ரின் மருத்துவச் சான்றிதழே துவக்கப்புள்ளி என்றால்,  அது மிகையாகாது. உடல்நலம் குன்றிய சிறைவாசிகளை மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் முன்விடுதலை செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.  இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். 

விசாரணைக் கைதியின் விடுதலை:  சிறை விதி 833-ன்படி, விசாரணைக் கைதியின் உடல்நிலை மரணிக்கப்போகும் அளவிற்கு மோசமாக இருந்தால், சிறை மருத்துவரது அறிக்கையின் பேரில், சிறைக் கண்காணிப்பாளர் சிறைவாசியின் உறவினர்களுக்கும், சிறைவாசியை ரிமாண்ட் செய்வதற்கு உத்தரவிட்ட  நீதிமன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கவேண்டும். அந்த நீதிமன்றம், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் சிறைவாசியை விடுவிப்பது பொருத்தமானது எனக் கருதினால், அந்த கைதியை ஜாமீனில் விடுவிக்கலாம். மிகவும் அவசர சிகிச்சை தேவைப்படும் நேர்வுகளில், சிறை மருத்துவரது பரிந்துரையின் பேரில் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து, கைதியை சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு,  கண்காணிப்பாளர் மாற்றலாம். 

Advertisment

சிறைகளில் பெரும்பான்மையாக உள்ள விசாரணை சிறைவாசிகளைப் பொருத்தவரை, சிறைகளில் இறப்பு விகிதத்தை (death rate)குறைப்பதற்காக மட்டுமே இந்த விதி பயன்படுகிறது. ஆனால்,  முழுமையாக/பெரும்பாலும் பயன்படுத் தப்படுவது இல்லை. சிறைக் கணக்கில் கைதியை இறக்கவிடாமல், பிணை எடுத்து வெளியே அனுப்பிவிட்டால், சிறை நிர்வாகத்திற்கு வேலைப் பளு மிச்சம். மேலும், சிறைவாசியின் உறவினர்கள்/நண்பர்கள், சிறைவாசிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது உடன் இருப்பார்கள். அதனால் “சிறையில் அடித்துக் கொன்றுவிட்டனர், அல்லது சாவில் மர்மம் உள்ளது” என்று சிறை வாசியின் உறவினர்கள்/நண்பர்கள் பிரச்சினை பண்ணமாட்டார்கள். அதேநேரத்தில், சிறை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைப்பதும் குறையும். 

தண்டனைச் சிறைவாசிகளின் முன் விடுதலை: மிகவும் உடல்நிலை சரியில்லாத சிறைவாசிகள் குறித்து ஒவ்வொரு முறையும் சிறை மருத்துவர் அறிக்கை மூலம்  சிறைக் கண்காணிப் பாளரிடம் தெரிவிப்பார்.   அதனைப் பெற்று நோயின் தன்மைக்கேற்ப அரசு மருத்துவ மனையின் மருத்துவ வாரியத்தின் (Medical Board) முன்பாக சம்பந்தப்பட்ட சிறைவாசியை  ஆஜர்படுத்துவார்கள்.    

சிறை விதி 631-ன்படி, ஒரு கைதி சிறையி லிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும் என்றால், அவர் செயற்கையாக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதவரையில், இயல்பாக ஏற்பட்ட குணப்படுத்த முடியாத முழுமையான குருட்டுத்தன்மை, மேம்பட்ட நுரையீரல் காசநோய் மற்றும் இதுபோன்ற பிற மீளமுடியாத நோய்களின் காரணமாக அவதியுறும் சிறைவாசிகளின் உடல்நலத்தை ஆய்வு செய்து, இதற்கென்றே வழங்கப்பட்டுள்ள படிவம் எண்.46-ல் குறிப்பிட்டுள்ள மருத்துவச் சான்றிதழை மருத்துவ வாரியத்திடமிருந்து பெற வேண்டும்.  

jail1

சிறை விதி 632-ன்படி, விடுதலை பெறவேண்டும் என்பதற்காக செயற்கையாகச் செய்யாத எந்தச் செயல்களாலும், ஒரு கைதி ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்றும், அவரது நோயானது, சிறையில் இருந் தால் மேலும் தீவிரமடைந்து கைதிக்கு உடனடி யாக மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இந்த உடல்நலக் குறைபாடு கைதிக்கு சிறைவாசத்தின் போது ஏற்பட்டதோ இல்லையோ, ஆனால் விடுதலை செய்யப்பட்டால் அந்தக் கைதி குண மடைய நியாயமான வாய்ப்பு உள்ளது என்றும்,  மருத்துவ வாரியம் சான்றளிக்க வேண்டும். 

சிறைவாசியை பேணிப் பார்த்துக்கொள்ள நண்பர்களோ/உறவினர்களோ இல்லாத நிலையில்,  எந்தக் கைதியும் இந்த விதியின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்.  இந்த விதி சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கும் கைதிக்குப் பொருந்தாது.  உண்ணா விரதம் இருக்கும் கைதி எந்தச் சூழ்நிலையிலும்  விடுவிக்கப்படமாட்டார். சிறை விதி 633-ன்படி, ஏதேனும் ஒரு கைதி தொற்று நோய் அல்லாத நோயால் மரண ஆபத்தில் இருக்கிறார் என்றால், சிறைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ குணமடைந்துவிடுவார் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை என்றால், அவ்வாறு மருத்துவ வாரியம் கருதினால், அதுகுறித்து சான்றளிக்கவேண்டும். அத்தகைய கைதிக்கு வீட்டில் இறக்கும் ஆறுதலை அளிப்பது மட்டுமே இந்த விதியின் நோக்கமாகும். அவ்வாறு விடுவிக்கப்பட்டால், அந்தக் கைதிக்கு, அவரது நண்பர்கள் அல்லது உறவினர்களால் தகுந்த முறையில் பரா மரிப்பு வழங்கப்படும் என்ற சான்றிதழ்,  சிறைக் கண்காணிப்பாளர் அர சாங்கத்திற்கு அனுப்பப் படும் ஆவணத்துடன் இணைக்கப்படவேண்    டும். இந்த விதியின் கீழ் விடுவிக்கப்பட்டு மரணம் அடையும் கைதிகள் குறித்த நிலைப்பாடு,  சிறையின் புள்ளிவிவரப் பதிவுகளில்  மரணமாகவே கணக்கிடப்படும். 

மேற்கண்ட சிறை விதிகள் 631, 632 மற்றும் 633 ஆகியவற்றின் கீழ் தண்டனைச் சிறைவாசி களை முன்விடுதலை செய்ய, சிறைவாசியின் முழு மையான மருத்துவ அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட சிறைவாசியை விடுதலை செய்யவேண்டும் என்று மருத்துவ வாரியம் நம்புவதற்கு வழிவகுத்த காரணங்களை இந்தச் சான்றிதழில் குறிப்பிட வேண்டும். 

மேற்கண்ட நேர்வுகளில் மருத்துவ வாரியத் திடமிருந்து கைதியின் மருத்துவச் சான்றிதழை சிறைக் கண்காணிப்பாளர் பெற்றவுடன், அந்தக் கைதியின்  சொந்த மாவட்டத்திலுள்ள ஆட்சியரிடம் கைதியை முன்விடுதலை செய்வது குறித்த அறிக்கையினைப் பெறவேண்டும். மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறைவாசியை முன்விடுதலை செய்வதற்குச் சாதகமான அறிக்கை பெறப்பட்டால், அந்த அறிக்கையுடன் சிறைவாசியுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து,  சம்பந்தப்பட்ட ரேஞ்ச் DIG  மூலமாக சிறை DGP -க்கு அனுப்பிவைக்கப்படும்.  சிறை DGPதனது கருத்துகள் அடங்கிய கடிதத்தையும், இந்த அறிக்கைகளையும், தமிழக அரசிடம் உரிய உத்தரவிற்காக சமர்ப் பிப்பார். இவ்வாறு செய்யப்படும் அனைத்துப் பரிந்துரைகளும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளால் அனைத்து நிலைகளிலும் மிகவும் அவசரமான வையாகக் கருதப்பட வேண்டும். ஆனால்,   நடைமுறையில் அவ்வாறு கருதப்படுவதில்லை. 

இந்த ஆவணங்கள் அனைத்தையும் அரசு பரிசீலித்து முன்விடுதலை செய்யலாம்/மறுக்க       லாம். சிறைவாசி விடு விக்கப்பட்டால், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சிறைக் கண்காணிப்பாளர் தகவல் தெரிவிக்கவேண்டும். 

தமிழகத்தில் இந்த விதிகளின் கீழ் முன்விடுதலை செய்து விடுவிக்கப்பட்ட சிறை வாசிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அரசு இந்த நடைமுறையை எளிமைப்படுத்த  நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு எளிமைப்படுத்தப்பட்டால்,  இறக்கும் தறுவாயி-ருந்து மரணிக்கும் தண்டனைக் கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பயனடைவார்கள். அதனால், சிறைத்துறைக்கும், தமிழக அரசுக்கும் மற்றும் மாநில/தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் பணிச்சுமை குறையும்.  

(ஊழல் தொடர்ந்து கசியும்..,)



_______________
லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட சிறை மருத்துவர்கள்!

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மத்திய சிறையில், மருத்துவ காரணங்களின் அடிப்படை யில் 65 வயதுக்கு மேலுள்ள ஒரு கைதிக்கு,  சிறையி-ருந்து விடுவிப்பதற்குத் தகுதியானவர் என்று மருத்துவச் சான்றிதழ் வழங்க, சிறை மருத்துவர்கள் அபித் அபு அத்தாரும், பிரசாந்த் ஏக்நாத் கைர்னாரும் சிறைவாசியின் உறவின ரிடம் ரூ.30,000 லஞ்சம் கேட்டுள்ளனர். இதை யடுத்து, சிறைவாசியின் உறவினர் லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகினார். கடந்த 14 ஜூலை 2024-ல், மும்பையின் கோவிந்த நகர் பகுதியில் வைத்து லஞ்சம் வாங்கியபோது அந்த இரண்டு மருத்துவர்களும் கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.