கைதிகளுக்கு டெலிமெடிசின் வீடியோ கான்பரன்சிங்!  


சிறைக்கு வெளியிலிருந்து மருந்துகள்: சிறையின் மருத்துவமனைக்குள் மருந்து வழங்கும் இடம் உண்டு.  இதற்கு மருந்தாளர்  (Medical Store) ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். சிறைவாசிகளுக்குத் தேவையான மருந்துகள் இந்த மருத்துவக் கிடங்கில் x (Medical Store)   இருந்து வழங்கப்படும். சிறை விதி: 721/2024ன்படி, இந்த மருத்துவக் கிடங்கில் மருந்துகள் தீரத்தீர Tamil Nadu Medical Services Corporation-க்கு கடிதம் எழுதி மருந்துகள் வாங்கப்படும்.  சிறை விதி: 721/1983, 720/2024-ன்படி, சிறை மருத்துவமனையில் கிடைக்காத/இல்லாத மருந்துகள், சிறைவாசிகளின் உடல்நிலை குணமாக அவசரமாகத் தேவைப்படுமாயின்,G.O.Ms.No.1307, Home, நாள்: 30.04.1968-ன்படி சிறை மருத்துவரின் பரிந்துரையின் பேரில்  சிறைக் கண்காணிப்பாளர், வெளியிலுள்ள மெடிக்கல்ஸில் இருந்து, ஒரு மாதத்திற்கு ரூ.100 மதிப்புள்ள வெளி மருந்துகளை வாங்கிக் கொடுக்கலாம் என்றுதான் தொடங்கியது. இது தற்போது சிறைக் கண்காணிப்பாளர் ரூ.4,000, சிறை DIG ரூ.6,000, சிறை DGP ரூ.10,000 ஆகிய தொகைகளுக்கு,  ஒவ்வொரு மாதமும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளுக்கு வெளியிலிருந்து மருந்துகள் வாங்கிக் கொடுக்கலாம் என்னும் அளவுக்கு வந்துள்ளது.  ஆனால், பெரும்பாலும் இதனைப்  பயன்படுத்துவதில்லை.

Advertisment

சிறைவாசிகளை சிறைக்குள் அனுமதி எடுக்கும்போது, அந்த சிறைவாசி உட்கொள்வதற்காக மருந்துகள் வைத்திருந்தால், அதனைச் சிறையின் Gate Officer வாங்கி வைத்துக்கொள்வார். சிறை மருத்துவரிடம் உரிய அனுமதி பெற்று அதனை ஜெயிலர் மூலமாகத்தான் வழங்குவார். அது அந்தச் சிறைவாசியின் கைகளுக்குச் சென்று சேரவே 2 நாட்கள்  ஆகிவிடும். சிறைக்குள் இருக்கும் சிறைவாசிக்கு மருத்துவ காரணத்திற்காக FLASK  வேண்டுமென்றாலும், சிறை மருத்துவரிடம் துண்டுச் சீட்டில் எழுதி வாங்கி, அதனை கேன்டீன் காவலரிடம் கொடுத்து, சிறைவாசியின் PCP கணக்கில் கழித்து, வாங்கி வந்து ஜெயிலரிடம் காண்பித்து, அவரது முன் னிலையில்தான் சிறைவாசியிடம் ஒப்படைப்பார்கள். 

Advertisment

jail1

வெளி மருத்துவமனையில் சிறைவாசி: உடல்நலம் சரியில்லாத சிறைவாசிகளுக்கு அவசர சிகிச்சையளிக்க வெளி மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு, காவல்துறையிடமிருந்து வழிக்காவல் கோரி கடிதம் அனுப்பும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட மாநகர/மாவட்ட காவல் துறையினருக்கு கடிதம் அனுப்பினால்,  பெரும்பாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சனிக்கிழமை மட்டும் சில சிறைவாசி களுக்கு வழங்கிவிட்டு, மற்ற நாட்களில் அவசரத் தேவைகளுக்கு வழங்குவதில்லை. ஒவ்வொரு சிறை வாசியும் சனிக்கிழமைக்காகக் காத்திருக்க வேண்டி யிருக்கும். இந்தியா முழுவதுமுள்ள சிறைகளில் இதுபோன்ற நிலைமைதான் பல்வேறு விதங்களில் நடக்கின்றன.     

தொலை மருத்துவ வசதி (Tele#Medicine Facility): இவற்றைக் கருத்தில்கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம்,  கடித எண். R-18/12/2020 -PRPP, நாள்: 08.09.2025-ல் இந்தியாவிலுள்ள அனைத்துச் சிறை DGP-களுக்கும் வழங்கியுள்ள அறிவுரையின்படி, தமிழகச் சிறை DGP வழங்கிய சுற்றறிக்கை எண். TNPCS/5936/2025-PW-2, நாள்: 22-10-2025-ல், சிறைக்குள் சிறைவாசிக்கு உடலிலுள்ள நோய்/பிரச்சினைக்கு, வெளியிலுள்ள சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை/ஆலோசனை பெற/கேட்க வேண்டுமென்றால், வெளியிலுள்ள மருத்துவருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்புகொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் கைதிகளுக்கு, தாமத மின்றி சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை பெறமுடியும். இந்தத் தொலை மருத்துவ வசதிகளை  (Tele-Medicine) சிறைவாசிகள் பெறுவதற்காக சிறை அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைகளின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ  இயக்குநரகத்திற்கு தெரிவித்து, ஒருங்கிணைத்து இணைப்பை ஏற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிறைவாசியை வெளியே கூட்டிச் செல்வது, அதற்குப் பாதுகாப்பு, போக்குவரத்துச் செலவு, அலைச்சல் என அனைத்தையும் தவிர்க்கமுடியும். 

Advertisment

சிறைவாசியின் உடலிலுள்ள பிரச்சினைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து தரமான சிகிச்சை வழங்கி, நோய்கள் அதிகரிப்பதை/பரவுவதை தடுத்து, கைதிகளின் மருத்துவ உரிமையை நிலைநாட்டுவதே இதன் நோக்கமாகும். எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்கள் சிறைகள், கிளைச் சிறைகள், சிறப்பு கிளைச் சிறைகள் மற்றும் திறந்தவெளிச் சிறைகள் என அனைத்துச் சிறைகளிலும், தொலை மருத்துவ வசதியானது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து  சிறைவாசி களுக்கும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டு மென, சிறை உயர் அதிகாரிகளுக்கு சிறை DGP உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து  அரசு மருத்துவமனைகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக,  சிறை DGP மருத்துவத்துறை இயக்குநருக்கு கடிதம் (TNPCS/5936/2025-PW-2  நாள்: 22-10-2025) எழுதியுள்ளார்.

ஈரானிய சிறைகளில் பாலியல் துன்புறுத்தல்: ஈரானின் சாஞ்சான் நகரில் 1972-ல் நர்கஸ் முகமதி பிறந்தார். பத்திரிகையாளராக, பெண்களின் உரிமைகளை ஆதரித்துப் பல கட்டுரைகளை எழுதினார். அதில் ஈரான் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்ததற்காக 1998-ல் முதன்முதலாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தார். 1999-ல் சீர்திருத்த ஆதரவு இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றிவந்த தாகி ரஹ்மானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு  இரட்டைக் குழந்தை பிறந்தது. 

2003-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஈரானியப் பெண்மணியான ஷிரின் எபாடியின்  தலைமையி லான மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மையத்தில்  (The Defenders Of Human Rights Center # DHRC)  சேர்ந்தார். பின்னர் அந்த அமைப்பின் துணைத் தலைவரானார். இவரும் இவரது கணவர் தாகி ரஹ்மானியும், அரசுக்கு எதிராகக் கடுமையாகச் செய்திகளை வெளியிட்டதாகவும்,  தேசியப் பாது காப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய தாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.  இவ்விருவருக் கும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஈரான் அரசு விதித்தது. 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, தாகி ரஹ்மானி 2012-ம் ஆண்டு தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்து, தற்போதுவரை அங்கு வசித்துவருகிறார். ஆனால் நர்கஸ்முகமதி ஈரானில் இருந்து மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். இவரது சமரசமற்ற போராட்டத்தால், ஈரான் அரசு இவரை 13 முறை கைது செய்து, 31 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதுவரை 154 கசையடிகள் வாங்கியுள்ளார்.

jail2

சிறையில் அடைபட்டுள்ள பெண்களின் தன்னம்பிக்கையை உடைக்க ஈரானிய சிறை அதி காரிகள் பாலியல் துஷ்பிரயோகம்/துன்புறுத்தலை பயன்படுத்துகிறார்கள் என்றும், தானும் அதனால் பாதிக்கப்பட்டவள் என்றும் கூறிய நர்கஸ் முகமதி, பெண் கைதிகளின் மோசமான அனுபவங்களை ஆவணப்படுத்துவதற்காக  எழுதிய 'hite Torture: Interviews with Iranian Women Prisoners'’’  என்ற இவரது புத்தகம்,  மனித உரிமை மன்றத்தில் சிறந்த புத்தகம் என்ற விருதையும், 2023-ல்  The UNESCO # Guillermo Cano World Press Freedom Prize  விருதையும் வாங்கியுள்ளது. 

இந்நிலையில், 2022 செப்டம்பர் மாதம், மாஷா அமினி   (Mahsa Amini) என்ற இளம்பெண் ஒழுங்காக “ஹிஜாப்” அணியவில்லை எனக்கூறி,   ஈரான் நாட்டின் கலாச்சாரக் காவல்துறை அவரைக் கைது செய்தது. காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் மாஷா அமினி 16.09.2022-ல் உயிரிழந் தார். இம்மரணத்துக்கு நீதி கேட்டும், ஹிஜாப் மற்றும் கலாச்சாரக் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹிஜாப்பை எரித்தும், முடிகளை வெட்டியும், ஈரானியப் பெண்கள் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 500-க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், மரண தண்டனை விதித்தும் அட்டூழியம் செய்தது ஈரான் அரசாங்கம். அந்தச் சூழலில் நர்கஸ் முகம்மதி, சிறையிலிருந்தபடியே போராட்டங்களை ஒழுங்கமைத்தும், போராடும் மக்களுக்கு தனது ஆதரவினை வழங்கியும், "பெண், வாழ்க்கை, சுதந் திரம்' (Woman, Life, Freedom movement)  இயக்கப் போராட்டத்தை நடத்தினார். அதனால் சிறையில் அவருக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

நர்கஸ் முகம்மதி, எவின் சிறையில் (Evin prison)பல கொடுமைகளை அனுபவித்து வந்த நிலையில், 2023-ம் ஆண்டின்  அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. பரிசு வாங்குவதற்குக்கூட சிறையிலிருந்து வெளியே விடவில்லை. இவருடைய இரண்டு குழந்தைகளும் இவர் சார்பாக ஒஸ்லோவில் நோபல் பரிசைப் பெற்றனர். 12 ஆண்டுகளுக்கும் மேலாக நர்கஸ் முகம்மதி தனது குழந்தைகளைப் பார்க்கவில்லை. 30 வருடங்களுக்கும் மேலாக அனுபவித்துவரும்  கடுமையான சிறை சித்திரவதைகளின் விளைவாக உடல்நிலை மோசமானதால்,  கடந்த டிசம்பர் 2024-ல் மருத்துவக் காரணங்களுக்காக பரோலில் வந்து சில அறுவை சிகிச்சைகளைச் செய்துவிட்டு, மீண்டும் சிறை சென்றுள்ளார். இன்றுவரையிலும் எவின் சிறையில் உள்ள இவர், மனித உரிமைகளுக்கான போரட்டத்தை விடாமல் தொடர்கிறார். சிறையும் இவரை விட்டபாடில்லை.

(ஊழல் தொடர்ந்து கசியும்...)