விரும்பியபடி வாழும் வி.வி.ஐ.பி. கைதிகள்!


சிறப்பு சலுகைகள்: தமிழகச் சிறைகளில் VIP சிறைவாசிகளுக்கு சிறப்பு கவனிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு சிறைவாசி,  சிறையில் சுகமாக வாழ, சிறையில் உயரதிகாரிகளுக்கு மாதாமாதம் அல்லது ஒரே செட்டில்மெண்டாக பணம் கொடுப்பார்கள்.  தண்டனை பெற்ற சிறை வாசிக்கு தனி ரேட், விசாரணை சிறைவாசியாக வருபவர்களுக்கு தனி ரேட். பணம் பெறுவது இரண்டு விதம், ஒன்று - சிறைக்குள் இருக்கும் சிறைவாசி வெளியில் உள்ள தனது உறவினர்/நண்பரிடம் பணம் பெற்றுக் கொள்ளச் சொல்வார்.  அவரிடம் போய் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.  மற் றொன்று-  சிறையில் இருக்கும்போது நன்றாகக் கவனித்துவிட்டு, பிணையில் வெளியே சென்றபின், சிறையில் கட்டுமான வேலைகள் செய்ய வேண்டியுள்ளது,  அதற்குப் பணம் தேவைப்படுகிறது என ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, உதவி கேட்பதுபோல் பணம் வாங்குவது. இதில் இன்னொரு மோசடியும் நடக்கும்.  சிறைக்குள் ஒரு இடத்தில் ஏதாவது கட்டுமானம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அதைக் காண்பித்து நான்கைந்து VIP சிறைவாசிகளிடம் கட்டுமானச் செலவுக்கு ஸ்பான்சர் வேண்டும் என்று கூறி பணத்தைக் கறந்துவிடுவார்கள். பணத்தைக் கொடுத்த ஒவ்வொருவரும் நாம் கொடுத்த பணத்தில்தான் இந்த வேலை நடைபெறுகிறது என்று நினைத்துக்கொள்வார்கள்.    

Advertisment

சிறப்பு கவனிப்புக்காக சிறை மருத்துவமனையைப்  பயன்படுத்துவது: சிறைக்கு வரும் VIP சிறைவாசிகளுக்கு உடலில் இயல்பாகவே இருக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை யை சிறை மருத்துவரிடம் கூறி, கைதியைக்  குறிப்பிட்ட நாட்கள் சிறை மருத்துவமனையில் தங்கவைக்க வேண்டுமென எழுதவைத்து,   சிறை மருத்துவமனையில் தங்கவைப்பார்கள். சிறை மருத்துவமனையில் படுக்கை வசதி உண்டு, TV வசதி உண்டு, சிறப்பு உணவு உள்ளிட்ட அனைத்துமே வழங்கப்படும். இந்த VIP சிறைவாசிகளை கவனித்துக்கொள்ள, துணிகளை துவைத்துத் தர,  வேண்டிய அனைத்தையும் செய்து தர ஆர்டர்லிகள் இருப்பார்கள். சில குறிப்பிட்ட காவலர்கள் மட்டும் சிறை மருத்துவமனையில் பல வருடங்களாகத் தொடர்ந்து  டியூட்டி பார்ப்பார்கள். இந்தக் காவலர்கள் மற்றும் சில MNA-க்கள்  மருத்துவமனையில் உள்ள VIP-க்கும், வெளி உலகத்திற்கும் தகவல் பரிமாறும் கருவிகளாகச் செயல்படுவார்கள். இதுபோன்ற VIP-களை கவர்வதில் இவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக மாறியிருப்பார்கள்.  இதில் ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி ரேட்.    

Advertisment

பெரும்பாலும் சிறை மருத்துவர்கள் இதுபோன்ற அற்ப விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டார்கள். இவர் எனக்கு வேண்டப்பட்டவர்/உறவினர்/ஊர்க்காரர்/நண்பர் என ஏதாவது காரணம் கூறி, ஏதாவது உடல் உபாதையைக் காரணமாக வைத்து, இவரைச் சிறை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று சில கடைநிலைப் பணியாளர்களும் கோரிக்கை வைப்பார்கள். சிறை மருத்துவரும் தனது medical journal-லில் உடல் நலம் சரியில்லாதது போல் எழுதிவைத்து, மருத்துவமனையில் தங்கவைத்து,  சிறப்பு சலுகைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்துவிடுவார்.    

பொதுவாக அடிதடி/கொலை முயற்சி வழக்குகளில், பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகாத வரை, நீதித்துறை நடுவர்கள் பிணை வழங்கமாட் டார்கள். இது எழுதப்படாத சட்டமாகவே நடைமுறைபடுத்தப்படுகிறது. இதுபோன்ற பிணை கிடைக்காத பெரும்பாலான வழக்கு களில், இந்த மருத்துவ ஆவணங்களை வைத்து, மருத்துவக் காரணங்களைக் காட்டி BNSS பிரிவு 480 & 483-ன்படி நீதிமன்றங்களில் பிணை பெற்றுவிடுவார்கள்.  

Advertisment

பொதுவாக அமைச்சர்களாக இருந்தவர் கள் சிறைக்கு வருவார்கள், அல்லது சிறைக்கு வந்துசென்ற பின் அமைச்சராவார்கள். ஆனால், சென்னை II  மத்திய சிறையில், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு உள்ளேயே  இலாகா இல்லாத அமைச்சராக நீண்டநாள் ஒருவர் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறி,  ஒரு வருடத்துக்கும்  மேலாக சிறை மருத்துவமனையில் அவர் தங்கவைக்கப்பட்டு,  மிகவும் சிறப்பாகக்  கவனிக்கப்பட்டார். அப்போது சிறை மருத்துவ ராக Dr.கீர்த்திவாசன் பணிபுரிந்துவந்தார். சிறை அதிகாரிகளுக்கும், சிறை மருத்துவருக்கும் ஏற்பட்ட ஈகோ மோதலால், அவர் அக்டோபர் 25, 2023-ல் பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சிறையில் இருந்த அந்த VVIP சிறைவாசியின் பரிந்துரையின் பேரில்,  அடுத்த வாரத்திலேயே மீண்டும் அதே சென்னை II  மத்திய சிறையின் சிறை மருத்துவராக, அதே பணியிடத்தில் பணியமர்த்தப்பட்டார். சிறைக்கு வரும் VIP சிறைவாசிகளின் அதிகாரத்தை,  இந் நட வடிக்கையின் மூலம் அறிந்துகொள்ளமுடியும். இதே சிறையில் ஜனவரி 2022-ல், Dr.நவீன் மற்றும் அதிகாரிகளுக்கிடையே நடந்த ஈகோ மோதலால், மானாமதுரை அரசு மருத்துவ மனைக்கு அவர் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் எப்போதாவது விதிவிலக்காக நடப்பது. இவற்றை தவிர சிறை அதிகாரிகள் மருத்துவர்களை டிரான்ஸ்பர் செய்ததெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை. 

jail1

சிறை மருத்துவரின் அறிக்கை புத்தகம் (Report Book):  சிறை விதி: 98/1983, 107/2024-ன்படி சிறை மருத் துவர், முதன்மை மருத்துவ அதிகாரி யின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பும் அனைத்து முக்கிய விஷயங் களையும்  அறிக்கை புத்தகத்தில் பதிவு செய்து அவரிடம் சமர்ப்பிக்க  வேண்டும். சிறை விதி: 91/1983, 99/2024-ன்படி,  medical journal-ஐ Chief Medical Officer எழுதவேண்டும். சிறையில் Chief Medical Officer-ஐ யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். ஆக மொத்தத்தில் சிறை மருத்துவர் எழுதுவது Report book தானா? அல்லது Report book  ஆக இருக் குமா?  என்பது சிறையில் யாருக்கும் தெரியாது. ஒரு பெரிய நோட்டில் சிறை மருத்துவர் எழுதுவார். அது மட்டுமே உண்மை.  

சிறை மருத்துவர் பதிவேடு:  சிறை மருத்துவர் ஒரு பெரிய நோட் டில், அன்றாடம் மேற்கொள்ளும் பணிகளையும், வெளி மருத்துவ மனைக்கு எந்தெந்த சிறைவாசியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண் டும் என்பதையும், யார் யாருக்கெல் லாம், எவ்வளவு நாட்களுக்கு  என் னென்ன சிறப்பு உணவு வழங்கவேண் டும் என்பதையும் எழுதிவைப்பார். இந்த நோட்டை சிறை மருத்துவர், MNA/Staff nurse  மூலம் சிறைக் கண்காணிப்பாளருக்கு  அனுப்பி வைப்பார். சிறைக் கண்காணிப்பாளர் அதனைப் படித்துப்பார்த்து, அவர் தெரிந்துகொண்டதை அடையாளப்படுத் தும் விதமாக அதில் கையெழுத்திடுவார்.   

வெளி மருத்துவமனை சிகிச்சை: அதன் பின் வெளி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்ப்பதற்கு எந்தெந்த சிறைவாசிகளை அனுப்பவேண் டும் என்கிற பட்டியல் சிறையின் தண்டனைக் குறைப்பு அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு, அந்தப் பட்டியலில் சிறைக் கண்காணிப்பாளர் கையெழுத்திட்டு, அதனை மாநகர ஆணையர்/ மாவட்ட காவல் கண்காணிப்பாள ருக்கு அனுப்பிவைப்பார். அவர்கள் ஆயுதப்படை பிரிவுக்கு அனுப்பி, எத்தனை சிறைவாசிகளுக்கு எத்தனை காவலர்களை,  எந்தப் பதவி வகிக்கும் அதிகாரியிடம் ஒப்படைத்து அனுப்பலாம் என்பது குறித்த பட்டியலை வழங்குவார்கள். அதன்பிறகு,  சிறையின் தண்டனைக் குறைப்பு பிரிவுக்கும் ஆயுதப்படை பிரிவுக்கும் பேச்சு வார்த்தை நடக்கும். சிறையிலுள்ள 40 சிறைவாசிகளுக்கு வெளி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டுமென, காவல்துறை வழிக்காவலுக்கு கேட்டால், 10 சிறைவாசி களுக்குத்தான் தரமுடியும் எனப் பேசி, முடிவாக 15 சிறை வாசிகளுக்கு வழங்குவதாகப் பேசி முடிக்கப்படும். அதனடிப்படையில் சனிக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு சிறைக்கு வரும் ஆயுதப்படை குழுவிடம் 15 சிறைவாசிகளை ஒப்படைப்பார்கள். இவ்வாறு வெளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளை  அட்மிஷன் போட்டு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சில சமயங்களில்  மருத்துவர் கூறினால், ஆயுதப்படை அதிகாரி/காவலர்கள் அந்த மருத்துவரிடம் கேட்டுக்கொண்டு/சண்டையிட்டு, டிஸ்சார்ஜ் செய்ய வைத்து,  சிறைக்குள் அடைத்துவிடுவார்கள். ஏனென்றால்,  ஆயுதப்படை காவலர்கள் சிறைவாசியை வைத்துக் கொண்டு வெளி மருத்துவமனையில் டியூட்டி பார்ப்பது விரும்பத்தகாத செயலாகக் கருதப்படுகிறது. இதுவே பணம் செலவழிக்கும் சிறைவாசி என்றால்  ஆயுதப்படை யும் வளைந்து கொடுக்கும். வெளி மருத்துவமனைக்கு அனுப்புவதில் முறைகேடு நடப்பதால், உண்மையாகவே சிகிச்சை தேவைப்படும் சிறைவாசியை மட்டும் அனுப்ப வேண்டும் என, சிறை DGP  சுற்றறிக்கை எண்: 69975/E.1(2)/1998, நாள்: 25.08.1999 & 14.10.1999 மற்றும் அரசு கடித எண்: 88180/Prison.III/1999, உள் (சிறை.III) துறை, நாள்: 08.10.1999 ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஊழல் தொடர்ந்து கசியும்..,)