வினோத டார்ச்சர்!
சென்னை-II மத்திய சிறையின் பிரதான வாயில் சோதனையில் சொதப்பல்: ஒவ்வொரு சிறைக்குள்ளும் தேங்கும் குப்பைகளை அள்ளுவதற்காக சம்பந்தப்பட்ட மாநகராட்சியிலிருந்து லாரி வரும். அதன் டிரைவர்களால் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கடத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால், லாரி டிரைவரை சிறையின் வாசலிலேயே இறக்கிவிட்டு, அந்த குப்பை லாரியை டிரைவர் டூட்டிக்கு ஒதுக்கப்பட்ட காவலர் சிறைக்குள் ஓட்டிச்செல்வார். வழக்கமான இந்த நடைமுறையின்படியே, சென்னை - ஒஒ மத்திய சிறைக்குள் முதல்நிலைக் காவலர் கருப்பையா, அந்த குப்பை லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அவர் பீடி பண்டல்களை லாரியில் மறைத்து எடுத்துச்சென்று, சிறையின் தொகுதி 9-ல் அறை எண்: 23-ல் உள்ள பிரேம்குமார், த/பெ. ரவி என்ற தடுப்புக்காவல் சிறைவாசியிடம் கொடுத்து, பீடி தேவைப்படுகின்ற மற்ற சிறைவாசிகளுக்கு விநியோகம் செய்துவிட்டு, அவர்களிடம் தனது மொபைல் எண்ணுக்கு ஜி-பே, போன்-பே மூலம் பணம் அனுப்பும்படி கூறியதாக, அச்சிறைவாசியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு) விதிகள் எண்:17(ங்)(1)(ண்)-ன் கீழ், சென்னை மத்திய சிறை-ஒஒ-ன் சிறைக் கண்காணிப்பாளரின் செயல்முறை ஆணை எண்: 3266/பொ.3/2025, நாள்:23.08.2025-ன்படி கருப்பையா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளர்.
அச்சிறையின் உயரதிகாரிகள் பீடி விற்று அதிகமாகப் பணம் சம்பாதித்துவரும் நிலையில், தங்களுக்குப் போட்டியாக காவலர்களும் விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் கருப்பையாவை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்கள். சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறைவாசியிடம் எழுதி வாங்கி அதை மட்டும் சாட்சியாக வைத்து ஒரு பணியாளர் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கையை எப்படி எடுக்கமுடியும்? என சக பணியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இரண்டாம் நிலை காவலராக 07-06-2006-ல் பணியில் சேர்ந்து, 19 ஆண்டுகளாக எவ்விதப் புகாருக்கும் இடம் தராமல் பணிபுரிந்து 2021-ல் முதலமைச்சர் நற்பணி விருது பெற்ற காவலரான பிரபு, தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர். பதவி உயர்வு பெற்றால் வேறு ஊருக்குச் செல்லவேண்டியது வரும், தனது இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாமல் போகும் என்றெண்ணி, பதவி உயர்வே வேண்டாம் என்று இருந்தவரை, மன்னார்குடி கிளைச் சிறையில் நீண்ட காலமாகப் பணிபுரிகிறார் என்று காரணம் கூறி, 300 கி.மீ. தொலைவிலுள்ள சென்னை -ஒஒ மத்திய சிறைக்கு 23-8-2024-ல் ட்ரான்ஸ்பர் செய்தனர். மாற்றலாகி சென்னை சிறைக்கு வந்ததிலிருந்தே அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21-02-2025 அன்று இரவு அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடமான தொகுதி 3-ல் பணிப் பொறுப்பினை எடுத்துக்கொண்டார். அப்போது அவர் மது அருந்தியுள்ளதாக தகவல் அறிந்து, அதனை சிறை மருத்துவர் மூலம் உறுதிசெய்து, ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவைக் கண்டறிய ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்றிரவே, சிறைக்கண்காணிப்பாளரின் செயல்முறை ஆணை எண்: 730/பொ.3/2025, நாள் : 21.02.2025-ன்படி காவலர் பிரபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு 20.05.2025 அன்று விசாரணை நடத்தப்பட்டு, சிறைக்கண்காணிப்பாளரின் செயல்முறை ஆணை எண்:730/பொ.3/2025, நாள் : 23.07.2025-ன்படி பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலால், 12.10.2025 அன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவலர்களின் ட்ரான்ஸ்பருக்கான கவுன்சிலிங் நடத்தப்படாதது, பிரபுவின் உயிரிழப்புக்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
சிறை விதி: 59/1983, 68/2024, சிறை உஏட சுற்றறிக்கைகள் எண்: 39128/ஈந.4/2012, நாள்:08.11.2012 மற்றும் எண்:19283/ஈந.3/2015, நாள்:12.05.2015 ஆகியவற்றின்படி கருப்பையாவையும் பிரபுவையும் சிறையின் பிரதான வாயிலிலேயே சோதனை நடத்தி, பீடி பண்டல்களையும், மது அருந்தியதையும் கண்டுபிடித்து சிறைக்குள் விடாமல் தடுத்திருக்க/திருப்பி அனுப்பியிருக்க வேண்டுமல்லவா? அந்தக் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
கவனிப்பால் காக்கப்படும் அதிகாரி: ஜாதகம் பார்ப்பதில் தீராத மோகம் கொண்ட, சென்னை-ஒஒ சிறையின் உயர் அதிகாரி, பணியாளர்களை ஆபாசமாகப் பேசுவதையும், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் துடிப்பதையும் வழக்கமாகக் கொண்டவர். இவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணிபுரிந்தபோதுதான் 22.04.2021-ல் முத்துமனோ என்ற சிறைவாசி, சிறைக்குள்ளேயே சக சிறைவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அதற்கான சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, அப்போதைய சிறை-உஏட-யிடம் ரூ.5 லட்சம் கொடுத்து கவனித்த லீலைகள் எல்லாம் சிறைத்துறை வட்டாரம் அறிந்த ரகசியம்தான். மேலும் 2016 - 2021 காலகட்டத்தில், மதுரை மத்திய சிறையின் தொழிற்கூட ஊழலைப்போல், பாளையங்கோட்டை மத்திய சிறையின் தொழிற்கூடத்திலும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. இதிலும் தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்காக, சிறை ஐ.ஜி.க்கு ரூ.11 லட்சம் வரை செலவு செய்து, இன்றுவரையிலும் நடவடிக்கை எடுக்கவிடாமல் தன்னைக் காத்துக்கொள்கிறார். தனக்குக் கீழுள்ள பணியாளர்கள் மீது அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்கும் இவர், தன் மீது நடவடிக்கை எடுக்க வரும்போது மட்டும் கரன்ஸி கட்டுகளை விசிறியடித்து தப்பித்துக்கொள்வதுதான் நேர்மையா? முதலில் தான் யோக்கியமாக இருந்துவிட்டு அல்லவா மற்றவர்களின் குறைகளைப் பார்க்கவேண்டும்? சிறை நிர்வாகமே பீடி விற்பனை செய்கிறது. சிறைச்சாலைக்குள் திரும்பிய பக்கமெல்லாம் ஊழல் நடக்கிறது. இப்படி இருக்கும்போது, சிறைத்துறையின் நேர்மையையும் ஒழுக்கத்தையும் பற்றி இவர் பேசுவது கண்டு, "தான் திருடி, பிறரை நம்பாள்'’ என்ற சொலவடையைச் சொல்லி சிரிக்கின்றனர்.
கோவை சரகம்: இச்சரகத்தில் உள்ள பணியாளர் களுக்கு இன்னும் சாப விமோசனம் கிடைத்தபாடில்லை. அதே காலை 6 மணிக்கு ஏன்ஹழ்க் உன்ற்ஹ் மாற்றும் கொடுமையை அனுபவிக்கின்றனர். இந்தக் கொடுமைகள் மேலதிகாரிகளுக்குத் தெரியாமலே நடக்கிறது என்று பணியாளர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நக்கீரனில் செய்தி வெளிவந்தது. இந்த நடைமுறையை மாற்றினால், பணியாளர்களை அவ்விதம் நடத்தியது தவறென்றாகிவிடும் என்று சிறை ஐ.ஜி. சாமர்த்தியமாகக் கூறியதன் பேரில், அதே கொடுமை இன்றும் தொடர்கிறது.
சேலம் மத்திய சிறை: இச்சிறையின் உயர் அதிகாரி, தன்னை ஆகச்சிறந்த பாடகராகவும், பேச்சாளராகவும் கற்பனை செய்துகொண்டு ஓயாமல் பேசியும், பாடியும், சிறைத்துறையினரை வினோதமாக டார்ச்சர் பண்ணுகிறார். அவரும் பெண் பணியாளர்களிடம், “ஒரு மூஞ்சியாவது பார்க்கிற மாதிரி இருக்கா?'’என்று கமெண்ட் அடிப்பதெல்லாம் வக்கிரத்தின் உச்சம். சிறைவாசி ஒருவருக்கு ஊதியம் போட கணக்காளரால் தாமதம் ஆகிவிட்டது. அதற்காக, நிர்வாக அலுவலரிடம் அந்தப் பெண் பணியாளர் குறித்து மிகவும் ஆபாசமாகப் பேசிவிட்டார். வேறு சில புகார்களும் வரிசைகட்டி நிற்க, 10-11-2025 அன்று கோவை சரக உஒஏ, சேலம் மத்திய சிறையின் அந்த உயர் அதிகாரியிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். அதனால் எரிச்சலாகி “அரசியல் செய்கின்றனர்; ஜாதி பார்த்து செயல்படு கின்றனர்” என்று அவர் புலம்பியதைக் கேட்டு, உள்ளுக்குள் சந்தோஷப் பட்டுள்ளனர் அச் சிறைத்துறையினர்.
பாளையங்கோட்டை மத்திய சிறை: பெண் பணியாளர்களை சினிமா பாடல் பாடவைத்து, தாமரை போல் முகம் விரிய ரசிக்கும் சிறை அதிகாரி குறித்து நக்கீரனில் செய்தி வெளிவர, எந்த உயர் அதிகாரி மீது புகார் வந்ததோ, அவரே விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டு, அங்கு பணிபுரியும் அனைத்துப் பெண் பணியாளர்களிடமும் “இது தவறான செய்தி” என்று எழுதி வாங்கி, அதை சிறை ஐ.ஜி.க்கு அனுப்பி பெருமூச்சு விட்டிருக்கிறார்.
சிறைத்துறை என்ன செய்திருக்க வேண்டும்? புகாருக்கு ஆளான உயர் அதிகாரியின் பதவிக்கு மேலான பதவியிலுள்ள ஒரு பெண் அதிகாரியை விசாரணை அலுவலராக நியமித்து, தனித்தனியாக விசாரித்திருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு விசாரணை நேர்மையாக நடந்திருந்தால், பாடல் பாட வற்புறுத்தியது, “மாலை 5-45 மணி வரையிலும் அலுவலக நேரம், அதற்குப் பின் என் நேரம்” என்று தெனாவட் டாகப் பேசி, அலுவலக நேரம் கடந்து அனைத்துப் பெண் பணியாளர்களையும் தனது அறையில் அமரவைத்து இம்சித்த நிஜமெல்லாம் வெளி வந்திருக்கும்.
"சேலம் மத்திய சிறைக்கு மட்டும் விசாரணை அலுவலரை நியமித்து விசாரித்துள்ளனர். பாளையங்கோட்டை மத்திய சிறைக்கோ, குற்றச்சாட்டுக்கு ஆளானவரையே விசாரணை அலுவல ராகச் செயல்பட வைத்தது எந்தவிதத்தில் நியாயம்?'' என்று கேட்கின்றனர், நேர்மையான சிறைத்துறையினர்.
(ஊழல் தொடர்ந்து கசியும்)