தமிழகத்தின் பழைய சிறை விதிகளில் திருநங்கைகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. ஆனால், புதிய சிறை விதிகள் 2024-ல் விதி: 3(2)(iii)(h)-ல் திருநங்கைகளை சிறையில் (பாதுகாப்பிற்காக) பிரித்துவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2018-ல், ஓய்வுபெற்ற நீதிபதி அமிர்தவ ராய் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை, சிறை சீர்திருத்தங்களுக்காக உச்ச நீதிமன்றம் அமைத்தது. அக்குழு, தனது இறுதி அறிக்கையை டிசம்பர் 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், திருநங்கை கைதிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறை, பாகுபாடு மற்றும் பிற தீங்குகளை ஒழிப்பதற்கு மாநில அரசும், சிறைத்துறையும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைத்தது.
மூன்றாம் பாலினத்தவரை சிறையில் அடைப்பது எப்படி? தமிழ்நாடு குற்றவியல் நடைமுறை விதிகள், 2019, பிரிவு 6 (11)-ன்படி, "ஒரு திருநங்கை ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டால், அவருக்கு/அவளுக்கு எந்தப் பாலினத்தன்மை அதிகமாக உள்ளது என்பதை மாவட்ட மருத்துவ அதிகாரி பதவிக்குக் குறையாத மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான மருத்துவ அறிக்கையைப் பெற உத்தரவிடவேண்டும். மேற்கூறிய மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், ஆண்கள்/பெண்கள் சிறையில் ரிமாண்ட் செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். மாவட்ட மருத்துவ அலுவலரால் திருநங்கையின் பாலினம் தீர்மானிக்கப்படும் வரை, அரசு மருத்துவமனைகளிலுள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கான சட்டப் பாதுகாப்பு: The NALSA (National Legal Services Authority) vs Union of India (நாள் :15.04.2014) என்ற வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை "மூன்றாம் பாலினமாக' அங்கீகரித்தது. திருநங்கைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019-ல் இயற்றப்பட்டு, ஜனவரி 2020-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் பிரிவு 2(k)-ல் திருநங்கை என்பதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. திருநங்கைக்கான சான்றிதழ் மாவட்ட மாஜிஸ்திரேட்/ஆட்சியரிடமிருந்து பெறப்பட வேண்டும் (பிரிவு-6). திருநங்கைகள் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதி மறுத்தல், திருநங்கைகளை அவர்களது வீடு, கிராமம் அல்லது பிற வசிப்பிடங்களை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துதல், பாலியல்/வாய்மொழி/உணர்ச்சி ரீதியாக/பொருளாதார ரீதியாக துஷ்பிரயோகம் செய்தல், ஆகிய குற்றங்களுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் (பிரிவு 18(d)). சிறைகளில் திருநங்கைகளின் உரிமைகள் மீறப்படுவது குறித்த புகார்களைக் கையாள இதுவரை 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் (UT) சிறை அதிகாரிகள் மட்டுமே "புகார் அதிகாரியை' நியமித்துள்ளனர் (பிரிவு 11) என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு விதிகளும் (2020) மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ளன.
இந்திய உள்துறையின் சுற்றறிக்கை எண்: 17013/26/2021-PR, நாள் : 10.01.2022-ல் மாநில அரசுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில், சிறைகளில் திருநங்கைகள் கண்ணியமாக நடத்தப்படவேண்டும் என்றும், சிறைத்துறையின் பதிவேடுகளில் ஆண், பெண் என்பதுடன் திருநங்கை எனும் மூன்றாவது பாலின வகையையும் சேர்க்கவேண்டும் என்றும், திருநங்கைகளை சிறைக்குள் அனுமதிக்கும்போது, அவர்கள் விரும்பும் 'பாலின' அதிகாரி அல்லது மருத்துவ நிபுணர் மூலம் அவரது உடலைச் சோதனை செய்யவேண்டும் என்றும் சிறைக்குள் திருநங்கை களுக்கு எனத் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் தன்மைகொண்ட திருநங்கைக்கு எதிராக ஏதேனும் குற்றம் இழைக்கப்பட்டால், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடைச்சட்டம், 2002-ன் கீழ் வழக்கு பதிவு செய்தால் அது பொருந்தும் என M.ஸ்ரீநிவாசன் யள் தமிழக அரசு(Crl.O.P.(MD) No. 11848 of 2020) என்ற வழக்கில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சமூக ஆர்வலரான கிரேஸ் பானு நடத்திய ஆய்வில், தமிழ்நாட்டில் நவம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை, 33 திருநங்கைகள் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப் பட்டதைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளார்.
சாதாரண மனிதர்களைவிட திருநங்கை களுக்கு 18 மடங்கும், சாதாரண சிறைக் கைதிகள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு 9 மடங்கும் HIV தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக India Gender Report# 2024 கூறுகிறது.
மேலும், மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கு (W.P.No.7284,4, நாள்: 07.06.2021) உத்தரவுகளின்படியும், சிறை DGP-யின் சுற்றறிக்கை எண் : 8468/PW3/2021,, நாள்: 20.10.2021-ல் கூறியிருப்பதன்படியும், சிறையில் ஓரினச்சேர்க்கை யாளர்களை எவ்வாறு கையாள வேண்டு மென்பதை சிறைப் பணியாளர் களுக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திரு நங்கைகளும் மற்ற கைதிகளும் தனித் தனியாக தங்க வைக்கப்படுவதை உறுதி செய்யவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து மத்திய சிறைகளிலும், விழிப்புணர்வுக் கூட்டம் கடந்த 21.10.2021 & 22.10.2021 அன்று நடத்தப்பட்டது. அதில் திருநங்கைகள் சமூகத்தில்/சிறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திருநங்கைகளே நேரடியாக சிறைக்குள் வந்து விளக்கிக் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் இவ்வாறிருந்தும் சிறையில் நடந்த அத்துமீறல்கள் - திருச்சி மத்திய சிறை: கடந்த ஜூலை 2024-ல் திருச்சியைச் சேர்ந்த திருநங்கை சாரங்கன் (32), த/பெ வித்யாசாகர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் திருநங்கையிடம் இரவு பாதுகாப்புப் பணியிலிருந்த சிறைக்காவலர் மாரீஸ்வரன் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகியோரிடம் சாரங்கன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், தனது வழக்கறிஞர் ஈ.பாலகிருஷ்ணன் மூலம் சாரங்கன் புகார் அளித்தார். இப்புகார் குறித்து திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் வழக்கறிஞர் சுப்புராஜ் விசாரணை நடத்தியதில், சாரங்கனின் புகார் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, காவலர் மாரீஸ்வரன் மீது திருச்சி K.K.நகர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு (எண்: 283/2024) பதிவு செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மத்திய சிறை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வல்லரசு என்ற சிறைவாசி, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிவ்யா என்கிற ஜெகநாதன் என்ற திருநங்கையின் அறைக்குள் 07.03.2024-ல் திடீரெனப் புகுந்தார். அவரைப் பார்த்த நிவ்யா அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் செந்தில்குமார், வல்லரசுவை வெளியே இழுத்துவந்தபோது, கைதி வல்லரசு காவலர் செந்திலின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். செந்திலின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த வார்டன்கள் அவரை மீட்டனர். இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ததால், வல்லரசு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை -புழல் மத்திய சிறை-II: அகல்யா, த/பெ. விநாயகம் மற்றும் சாரங்கன், த/பெ. வித்யாசாகர் (ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் பாலியல் தொல்லைக்குள்ளான இவர் பிணையில் வெளியே சென்று மீண்டும் வேறொரு வழக்கில் விசாரணைக் கைதியாக புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்) ஆகிய திருநங்கை சிறைவாசிகளிடம், மாசிலாமணி என்ற முதல் நிலைக் காவலர், 30.07.2025-ல் இரவுப் பணியின்போது தவறாக நடந்ததாகப் புகார் கூறப்பட்டு, தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். மேலும், இவர் மீது M3 புழல் காவல் நிலையத்தில் குற்ற எண்:669/2025 என்ற வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட குற்ற நிகழ்வு குறித்து கணேசமூர்த்தி என்ற காவலருக்குத் தெரிந்திருந்தும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூறவில்லை என்பதால், அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு, திருநங்கைகளை G.O. (Ms.) No.28, சர்.28, நாள்: 06.04.2015-ன்படி MBC’” பிரிவில் சேர்த்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. தமிழக அரசு உருவாக்கிய, தமிழ்நாடு மாநில திருநங்கை யர் கொள்கை 2025-ஐ 01.08.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆனால், திருநங்கைகளைச் சிறையில் பாதுகாப்பதற்கான எந்த நெறிமுறை களையும் தமிழக அரசும்/சிறை DGP-யும் உருவாக்கவில்லை. அதனை உருவாக்கினால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் சிறையில் நடக்காமல் தடுக்கமுடியும்.
(ஊழல் தொடர்ந்து கசியும்)