சிறைகளில் பீடி விற்பது கைதிகளிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இரண்டு கொலைச் சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
கடந்த 10-05-2017 அன்று புதுச்சேரியைச் சேர்ந்த வினோத் (24) மற்றும் தாஸ் (17) ஆகிய இருவரையும் திருட்டு வழக்கில் காவல் துறையினரிடம் காட்டிக் கொடுத்ததற்காக, தங்களது நண்பனான சுவேதனின் (17) தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர். இவர்களது வாக்குமூலத்தில், "புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் பீடி, கஞ்சா எதுவும் கிடைக்காது. கடலூர் சிறையிலோ இவையனைத்தும் கிடைக்கும். மேலும் இரண்டு காவல்நிலைய எல்லைகள் சந்தித்துக்கொள்ளும் பகுதியில் கொலை செய்யப்பட்டு உடல் கிடந்தால், அதன் தலை எந்தத் திசையை நோக்கி இருக்கிறதோ, அந்தக் காவல்நிலைய அதிகாரியே அவ்வழக்கினை விசாரிக்க வேண்டும் என்ற சட்ட நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான், சுவேதனின் தலையை, கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ரெட்டிச்சாவடி காவல்நிலைய வாசலில் உருட்டிவிட்டோம்'’எனத் தெரிவித்துள்ளனர். வினோத்தும் தாஸும் தற்போதுவரை புதுச்சேரி சிறையில் அடைபட்டுள்ளனர்.
கடந்த 09-01-2019ல் கோவை மத்திய சிறையின் கைதிகளான ராமசாமிக்கும், அவருடன் அடைக்கப்பட்டிருந்த சுரேஷுக்கும், பீடி கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை எழுந்தது. ராமசாமியைக் கல்லால் அடித்தே கொலை செய்துவிட்டார் சுரேஷ். சிறைகளில் இதுபோன்ற கொடூரங்கள் நடந்த வண்ணம் உள்ளன. சிறையில் பீடியே பணமாகக் கருதப்படுவதால், பீடி புகைக்காத கைதிகளுக்கும் பீடியின் தேவை உள்ளது. அதிகாரிகள் மூலம் சிறையில் பீடி கிடைத்துவிடும். ஆனால், தீப்பெட்டி கொடுக்க மாட்டார்கள். அது ஏன் தெரியுமா? தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த, வேதியியலில் பொறியியல் பயின்ற தமிழரசன், புலவர் கலியபெருமாள் 1980-களில் திருச்சி மத்திய சிறையிலிருந்து தப்பிக்க முயற்சித்தபோது, தடுத்த காவலர்கள் மீது தீக்குச்சியின் முனையில் உள்ள மருந்துகளை ஒன்று சேர்த்து தயாரித்த வெடி குண்டை எறிந்து பிடிபட்டனர். அச்சம்பவத் தையும் ஒரு காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
பிறகு எப்படி நெருப்பை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள்? சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மற்றும் சிறையிலிருந்து வெளியே செல்லும் சிறைவாசிகள் விட்டுச் செல்லும் துணிகளைச் சேகரித்து சிறிய டப்பாவில் பாதி எரிந்த நிலையில் அடைத்து வைத்துக்கொள்வர். சிறிய இரும்புக் கம்பிகளை தரையில் வேகமாக உரசி, அந்த தீப்பொறியை டப்பாவில் உள்ள துணியின் மீது விழச் செய்து, அதனை ஊதி நெருப்பாக மாற்றி பயன்படுத்துவர். மொத்த போர்வையையும் ஜடை போல் பின்னி, அதன் முனையில் நெருப்பைப் பற்றவைத்து, அதைப் பெரிய பிளாக்குகளின் ஒரு ஓரத்தில் தொங்க விடுவர், வெளிக் கடைகளில் கொச்சைக் கயிறைத் தொங்கவிடுவது போல.
அரசாணை நிலை எண்: 1139 உள் (சிறை -V) துறை நாள் : 31.12.2009ல் குறிப்பிட்டுள்ள நிகழ்வின்படி, மதுரை மத்திய சிறையில் 06.02.2007 அன்று 8ஆம் தொகுதியில், தண்டனைச் சிறைவாசி (எண்: 9625) புலிப்பாண்டி யின் உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றபோது, வழியிலேயே அவர் இறந்துபோனார். இச்சிறைவாசியின் இறப்பு குறித்து CBCID-ன் கூடுதல் காவல்துறை இயக்குநர் விசாரணை மேற்கொண்டதில், புலிப்பாண்டி கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் உள்ளவர் என்றும், அவர் இறந்த 06.02.2007 அன்று சிறைக்குள் இருந்தபோது, தொடர்ந்து மூன்று கஞ்சா சிகரெட்டுகளை உபயோகித்ததால் வாந்தி எடுத்து கான்கிரீட் படியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் எனவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பகாலத்தில் தலைமைக் காவலர்களே சிறைகளில் பீடியை நேரடியாக விற்பனை செய்து வந்தனர். அந்த நடைமுறையை மாற்றி ஒழுங்குபடுத்தி, PCP கேன்டீன் மூலம் ‘பீடி விற்பனையைச் சிறைக் காவலர்கள் சுழற்சி முறையில் செய்ய வேண்டும்’ என்ற தற்போதைய நடை முறையை, இன்றைய சிறைத்துறை ஐ.ஜி. கனகராஜ், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது உருவாக்கினார்.
பணமும் பீடியைப் போல் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள் என்பதால், பணத்தைக் கொடுத்துப் பொருள் வாங்குவதற் குப் பதிலாக, ஒவ்வொரு சிறை வாசிக்கும் ஒரு அட்டை போடப் பட்டு, அவர்களது அட்டைக் கணக்கில் பணம் ஏற்றப்படும். சிறைவாசிகள் பொருள் வாங்கியதும் அந்த அட்டையில் பற்று வைக்கப்படும். இவ்வாறு தான் சிறைக்குள் பணம் ஒழிக்கப் பட்டது.
ஒரு சிறைவாசி ஒரு மாதத் திற்கு அதிகபட்சம் ரூ.4000-க்குள் சிறைக்குள் பொருள்களை வாங்க முடியும். கேன்டீன் பணியிலிருக்கும் காவலரிடம் சிறைக்கு வெளியே பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும். சிறைக்குள்ளே எவ்வளவு பொருள்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். புழல்-II மத்திய சிறையை ஆறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் தலா 6 காவலர்கள் வீதம், சுழற்சி முறையில் கேன்டீன் காவலராகப் பணி நியமனம் செய்யப்படுவர்.
புழல்-II சிறையில் ஒரு முறை கேன்டீன் எடுத்தால், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுடன், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பல (சுமார் 50-க்கும் மேற்பட்ட) காவலர்கள், டிரான்ஸ்பருக்கு ரூ.2 லட்சமும், கேன்டீனுக்கு ரூ.3 லட்சமும் சிறை உயரதிகாரிகளுக்கு கொடுத்து, புழல் II மத்திய சிறைக்கு வந்து கேன்டீன் பார்த்துவிட்டு, மறுபடியும் சொந்த ஊருக்கு டிரான்ஸ்பரில் சென்றுவிடுவர். அங்கேயே பணிபுரியும் காவலர்களும் தலா ரூ.3 லட்சம் கொடுத்து கேன்டீன் பார்ப்பார்கள்.
சிறைத்துறை டி.ஜி.பி. புழல் II சிறையில் 22.03.2024ல் சுற்று வந்தபோது திடீரென டஈட கேன்டீன்களை சோதனை செய்து, சுற்றறிக்கை (எண்: 1104/ஈந.4/2024, நாள்: 23.04.2024) அனுப்பி, தேநீர் விடுதி (டஈட கேன்டீன்) செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தினார். இதனை எதிர்த்து பக்ருதீன் என்ற கைதி, மீண்டும் சிறைக்குள் கேன்டீன் நடத்த வேண்டி சென்னை உயர் நீதி மன்றத்தில் (ர.ட.சர்.14402 ர்ச் 2024) வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை அம்பத்தூர் நீதிமன்ற நடுவர், சிறையில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார். சிறை விதிகளில் குறிப்பிட்டுள்ள பொருள்களை மட்டும் வழங்குமாறு கூறி வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
அதன்பின் சிறைவாசிகள் பீடி கேட்டு தொடர்ந்து பிரச்சனை செய்ததால், சிறை நிர்வாகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. சில சிறைவாசிகள் தங்கள் உடம்புகளில் கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு கிழித்துக் கொண்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து புழல் சிறையில் நடைபெற்றதால், தற்போது புழல் சிறையில் ஒரு கட்டு பீடி ரூ.500-க்கும், தமிழகத்தின் மற்ற சிறைகளில் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
PCP கேன்டீனில் பணியாற்றிய காவலர்களின் வங்கிக் கணக்குகளைத் தனித்தனியாக சிறை டி.ஜி.பி. ஆய்வு செய்தபோது, அளவுகடந்த பணப் பரிமாற்றம் நடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.க்கு புகாரும் அனுப்பிவைத்தார். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை அலுவலகத்தில் வைத்து, இதுவரை 80க்கும் மேற்பட்ட காவலர்களிடம், பெண் ஆய்வாளர் விசாரணை நடத்திவருகிறார். 2024ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து 5 வருடங்களுக்கு அந்தக் காவலர்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
காவலர்களிடம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் எதற்கு இவ்வளவு பணம் பெறப் பட்டது எனக் கேட்டபோது, காவலர்கள் கூறிய ஒரே பதில் பீடி. சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடியை எப்படி சிறைக்குள் எடுத்துச் சென்று விற்பனை செய்தீர்கள்? என்ற கேள்வியை காவலர்கள் எதிர்கொண்ட போது, திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த ஊழல்கள் அனைத்திற்கும் சிறைத்துறை உயர் அதிகாரிகளும், தணிக்கை குழுக்களும், சிறை உளவுப் பிரிவினருமே காரணகர்த்தாக்களாக உள்ளனர். சிறை DGP மகேஸ்வர்தயாள் இப்போது கண்டுபிடித் ததை, ஏன் இவர்கள் முன்பே கண்டறிந்து தடுக்கவில்லை? இந்த மூன்று துறையினருக்கும் எதுவுமே தெரியாதா? காவலர்களின் "ஜி பே', "போன் பே' எண்களை சிறையில் சுவரொட்டியாக ஒட்டியிருந்தார்களே, அதுவும் தெரியாதா? காவலர்களிடம் முடிந்தமட்டிலும் பணத்தைக் கறந்துகொண்டு, PCP கேன்டீனில் நடக்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டாததால், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் குடும்பங்கள் இப்போது நெருக்கடிக்கு ஆளாகி, வீதிக்குத் தள்ளப்பட்டதற்கு, இந்த மூன்று துறையினர்தான் காரணம்.
அதுவும் சிறைத் துறையின் உளவுப் பிரிவினர் இருக்கின்றார்களே? அவர்களின் செயல்பாடு(?) இருக்கிறதா?
(ஊழல் தொடர்ந்து கசியும்..)