தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் சாவில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம், ஜெ.வின் சாவுக்கு யார் காரணம் என்பதைச் சொல்வோம்'' என்றனர். ஜெ.வின் மர்ம மரணத்தைப் பற்றி விசாரித்த ஆறுமுகசாமி கமிஷன், கிணற்றில் போடப்பட்ட கல்லாக உள்ள நிலையில், தி.மு.க அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றுமா என அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான அடையாறு சீனிவாசன், "அம்மாவின் மரணம் அ.தி.மு.க. தொண்டர்களை பொறுத்தவரை மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். ஜெ. சிகிச்சை பெறும்போது அவரை வெகுசிலர்தான் சந்தித்தார்கள். அவர்கள் யார் என கண்டுபிடித்து கேட்க முடியாதா? அப்பல்லோவில் சி.சி.டி.வி. இல்லையா? நேற்று ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்தவனையெல்லாம் சி.சி.டி.வி. மூலமாக கைது செய்கிறார்கள். அம்மாவின் சிகிச்சையின்போது என்ன நடந்தது என கண்டுபிடிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. தர்மயுத்தம் நடத்தி சசிகலாவுக்கும் இ.பி.எஸ்.ஸுக்கும் எதிராக வரிந்து கட்டிய ஓ.பி.எஸ்.தான் முதலில் அம்மாவின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினார்.
பிறகு அவர் பா.ஜ.க மேலிட சிபாரிசால் அ.தி.மு.க.வில் இணைந்தபோது வைக்கப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில், அம்மாவின் மரண மர்மம் பற்றி விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் பத்துமுறை ஓ.பி.எஸ்.ஸுக்கு சம்மன் அனுப்பியது. சாட்சி விசாரணைக்கு அழைத்தது. அவர் அதை அலட்சியம் செய்தார். கடைசியில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஜெ.வின் மரணம் தொடர்பாக சகிகலாவை நான் சந்தேகப்படவில்லை எனத் தெரிவித்தார். இப்படி அந்தர்பல்டி அடிக்கும் அ.தி.மு.க. தலைவர்களால் அம்மாவின் மரணத்தில் இருந்த மர்மம் வெளிவராமலேயே இருக்கிறது. இன்று கொரோனா நோய் ஒழிப்பில் பிஸியாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் சொன்னது போல அம்மாவின் மரணத்தில் இருக் கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும்'' என்கிறார்.
"ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனோடு எடப்பாடி ஆட்சியில் நடந்த கொடநாடு கொலை தொடர்பாகவும் விசா ரித்து உண்மை கண்டறியப்படும் என்றார் மு.க.ஸ்டாலின். 2019 ஏப்ரல் மாதம் சுப்ரீம்கோர்ட் ஆறுமுகசாமி கமிஷனின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்தது. அந்தத் தடையை நீக்க எடப்பாடி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தடை வந்து ஒரு வருடம் கழித்து ஆறுமுகசாமி, எடப்பாடி அரசு எந்த வழக்கறிஞரையும் நியமித்து தடையை நீக்க முயற்சிக்கவில்லை என தனது செயலாளர் மூலம் கடிதம் எழுதினார். உடனே எடப்பாடி, ஒரு வழக்கறிஞரை நியமித்து, தடையை நீக்க முயற்சி செய்தார். அதை சுப்ரீம்கோர்ட் கண்டுகொள்ளவில்லை'' என் கிறார் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி.
இதில் சசிகலா மீது பழிவரும் என்றால் அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்கிறது சசிகலா தரப்பு. தூத்துக்குடி சம்பவத்துக்கு நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக் கமிஷனின் இடைக்கால அறிக் கையைப் பெறுவதில் முந்தைய அ.தி.மு.க அரசு அலட்சியம் செய்து வந்த நிலையில், ஆட்சிக்கு வந்த வேகத்திலேயே தி.மு.க. அரசு அந்த இடைக்கால அறிக்கையைப் பெற்று பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் வழங்கியது. அதுபோல "ஆறுமுக சாமி கமிஷனின் இடைக்கால அறிக்கையை, சுப்ரீம்கோர்ட் விதித்துள்ள தடையை சட்டரீதியாக நீக்கச் செய்து வெளியிடலாம்' என்கிறார்கள் தமிழக வழக்கறிஞர்கள்.
ஆறுமுகசாமி கமிஷன் தனது விசாரணையை 99 சதவிகிதம் முடித்துவிட்டது. அப்பல்லோ மருத்துவர்களை விசாரிக்கும் நிலை வந்தபோதுதான் அப்பல்லோ நிர்வாகம் சுப்ரீம்கோர்ட் சென்று தடையைப் பெற்றது. விசாரணை கமிஷனில் அப்பல்லோ கொடுத்த ஜெ.வின் சிகிச்சை விவரங்களில் உள்ள பல சந்தேகங்களைக் கிளறியது, கமிஷனுக்கு உதவு வதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவக்குழு.
ஜெ.வின் உடலில் அளவுக்கதிகமாக இருந்த பொட்டாசியம்தான் அவரது மாரடைப்புக்கும் அதன் மூலம் வந்த இறப்பிற்கும் காரணம் என ஆறுமுகசாமி கமிஷன் கண்டுபிடித்தது. அந்த உண்மை குறித்த விசாரணையில், ஜெ.வின் உடலில் பொட்டாசியம் அதிகரித்ததற்கான காரணம் என்னவென விளக்க முடியாமல்தான் அப்பல்லோ நிர்வாகம் சுப்ரீம்கோர்ட்டை நாடி, கமிஷன் விசாரணைக்குத் தடை கோரியது என்கிறார்கள் சட்டப் பின்னணி அறிந்தவர்கள்.
மொத்தத்தில் ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மம் தி.மு.க. ஆட்சியிலும் மர்மமாகவே தொடர்கிறது. ஜெ.வின் மரணத் தில் உள்ள மர்மத்தை தி.மு.க அரசு வெளியே கொண்டுவர வேண்டும் என்பதுதான் அ.தி .மு.க.காரர்களிடம் உள்ள எதிர் பார்ப்பு. ஸ்டாலின் அடிக்கடி சொல்வதுபோல, ஓட்டுப் போடாதவர்களும் பாராட்டும் அரசாக தி.மு.க செயல்படும் என்ற வார்த்தைகளைக் காப்பாற்ற, ஜெ. மரண மர்மம் வெளிப்பட்டே ஆக வேண்டும் என்கிறார்கள் தங்கள் தலைவிக்கு என்ன நேர்ந்தது என்பதை 5 ஆண்டுகளாக அறிய முடியாமல் தவிக்கும் அ.தி.மு.க.வினர்.