அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ, "தி.மு.க.வுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அரசியல் தளத்தில் தன்னை நிலைநிறுத்தி தமிழகத்தின் அடுத்த முதல்வராக அமரவைக்கும்' என நம்பியிருக்கிறார். தாமரை இலைத் தண்ணீராக ஒட்டியும் ஒட்டாமலும் பி.ஜே.பி.யுடன்  கூட்டணி, கூட்டணியிலிருந்த தே.மு.தி.க.வுடன் புகைச்சல், இதர கூட்டணிக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு போன்றவற்றால் அ.தி.மு.க.வின் எதிர்காலம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் பலரும் ஆருடம் கூறிவருகிறார்கள். 

"கரையேறுவாரா பழனிச்சாமி?' என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்துவரும் நிலையில், இதை எதையுமே கண்டுகொள்ளாமல் வாரம் ஒரு போராட்டம், மாதம் ஒரு ஆர்ப்பாட்டம் என "ஷெட் யூல்' போட்டு இம்மாதமே தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு தனது வாகனத்தை தயார் செய்துள் ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

ஜெயலலிதா பாணியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி கையிலெடுத் திருக்கும் இந்த வியூகங்கள் அவருக்கு கைகொடுக்குமா என்பது குறித்து அரசியல் வல்லுனர்கள் சிலரிடம் பேசினோம்...

Advertisment

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் ஆளுமையை  எடப்பாடியாரின் ஆளுமை யுடன் ஒப்பிடுவதே தவறு என்பது அக்கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும். மக்களுக்கும் புரியும். தவிர, 2011 தேர்தலில் ஜெயலலிதா எடுத்த வியூகங்கள் வேறு. அப்போதிருந்த சூழ்நிலையும் வேறு. 

அன்றைய கலைஞர் ஆட்சியில் கவுன்சிலர் களின் அராஜகங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. தவிர, தென்மண்டலத்தில் அழகிரியின் அராஜகப் போக்கும், திருச்சியில்  அமைச்சர்  கே.என். நேரு வின் சகோதரர் குறித்த சர்ச்சைகளும், தென் மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தன.  இது அத்தனையையும் கையி லெடுத்துத்தான் தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கியிருந்தார் ஜெயலலிதா. 

அதேபோல, சமூகரீதியாக மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.க.வையும் கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. "மோடியா இந்த லேடியா?' எனக்கேட்ட அவரின் வார்த்தைகளுக்கு அந்த பிரச்சாரத்தின்போது, "லேடிதான், லேடிதான்' என்ற குரல்கள் பொதுமக்களிடமிருந்து வெளிப்பட்டது. 

Advertisment

அந்த நேரத்தில், கலைஞர் ஆட்சி தந்த இலவசங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய சமூகப் பணிகள் பெரிய அளவில் பேசும்படி இருந்தாலும், ஊழல், அராஜகம்         என்ற இரட்டை ஆயுதத்தை கையிலெடுத்து, மிகச்சரியான கூட்டணி அமைத்து, பி.ஜே.பி.யை தில்லாக எதிர்த்த அவருக்கு அந்த தேர்தலில் வெற்றியைப் பரிசளித்தனர் பொதுமக்கள். 

ஆனால், தற்போதைய சூழலே வேறு. தொழில்துறையில் முதலிடம், வேலைவாய்ப்பில் முதலிடம், பொருளாதார வளர்ச்சியில் முதலிடம், கல்வியில் முதலிடம், பெண்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் முதலிடம், போட்டித் தேர்வுகளுக்கான கட்டமைப்பில் முதலிடம், விளையாட்டுத் துறையில் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டுவதில் முதலிடம் என பல்வேறு பெருமைகளை நிகழ்த்திக் காட்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழகத்தை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்துள்ளார் ஸ்டாலின். 

கடவுள் மறுப்புக் கொள்கை இருந்தாலும், தி.மு.க.வின் இந்த ஆட்சி செய்ததுபோல திருக் கோவில் புனரமைப்புப் பணிகளை ஜெயலலிதா ஆட்சியில்கூட செய்தது கிடையாது என்பதை பலரும் அறிவார்கள். இவை அனைத்தையும் தாண்டி, "மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்வி நிதி ஒதுக்குவோம்' என அடம்பிடிக்கும் பி.ஜே.பி.யின் அராஜகப்போக்கையும், ஜி.எஸ்.டி. வருமானத்தை தமிழகத்திற்கு ஒதுக்கித் தருவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசின் பிடிவாதத்தையும் மக்கள் அறிவார்கள். 

மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் இதுபோன்ற  நடவடிக்கைகளும், மதரீதியான மோதல்களை தமிழகத்தில் கட்டவிழ்த்துவிடுவதில் பி.ஜே.பி. எடுக்கும் முயற்சிகளையும் மக்கள் வெறுப்புக் கண்ணோட்டத்தோடு தொடர்ந்து கவனித்துவருகிறார்கள். இவை அனைத்துமே,  பி.ஜே.பி.க்கு எதிரான மனநிலையை தமிழகம் முழுக்க உருவாக்கி வைத்திருக்கும் நிலையில்தான், பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. அமைத்திருக்கும் கூட்டணி, கட்டாயத் திருமணம் போல இருப்பதாக பொதுமக்களில் பலரும் பார்க்கிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிவிட நினைக்கும் பி.ஜே.பி.க்கு வழிவிடுவது போல அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதும், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்' என அமித்ஷா அடிக்கடி கூறிவருவதும் திராவிட சித்தாந்தத்தை சிதைக்கும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளார்கள். 

அதேநேரத்தில், "நான்தான் முதல்வர் வேட் பாளர்' என எடப்பாடி பழனிச்சாமி கூறிவந்தாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்கூட இன்னமும் குழப்பம் இருப்பதாகவே அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை உணர்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், "அண்ணன் எப்படா சாவான், திண்ணை எப்படா காலியாகும்' என அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர் காத்திருப்பதையும் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் அறிவார்கள். 

இது எல்லாவற்றையும் தாண்டி, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனமும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அ.தி.மு.க.வில் இரண்டு மூன்று அணிகளை உருவாக்கி ஒருவருக்கொருவர் காலை வார நேரம்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில்தான், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்துவிட்டு, "தமிழகத்தை மீட்போம்' என்ற குரலோடு தனது சுற்றுப்பயணத்தை தொடங் கியிருக்கிறார். 

பா.ஜ.க.விடமிருந்தே கட்சியை மீட்க முடியாத நிலையில், ஜெ. பாணியில் தன்னை பில்டப் செய்யும் எடப்பாடியை, தொண் டர்கள் நம்பத் தயாரில்லை என்பதையே அவரது சுற்றுப்பயணத்திற்காக அழைத்து வரப்படும் கூட்டம் எதிரொலிக்கிறது''  என்கிறார்கள் அவர்கள்.