Skip to main content

எப்படி இறந்தார் ஜெ.? தினுசு தினுசாக வாக்குமூலம்! திணறும் ஆறுமுகசாமி ஆணையம்

"கோழி முதலா… முட்டை முதலா' என்பதற்குக்கூட விடைகிடைத்துவிடும்போல,… ஆனால் ஜெ. மரண விஷயத்தில் என்ன நடந்தது என்ற கேள்விக்குத்தான் ஒன்றரை வருடமாக விடைகிடைத்தபாடில்லை.

jayalalithaகடந்த மார்ச் 27-ஆம் தேதி ஆணையத்தில் சாட்சியமளித்த ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாளிடம், "ஜெ. மருத்துவமனையிலிருந்தபோது அமைச்சர்களில் யாரையாவது அழைத்துப் பேசியதைப் பார்த்தீர்களா?' என ஆணையம் கேட்டது. முதலில் பார்த்ததாகக் குறிப்பிட்ட வீரபெருமாள், அடுத்த இரண்டுமணி நேரத்திலேயே சாட்சி ஆவணத்தில் கையெழுத்திடும்போது, “""தலைமைச் செயலகத்தில் வைத்துதான் பார்த்தார். மருத்துவமனையில் வைத்து பார்த்ததாகப் புரிந்துகொள்ளக்கூடாது''’ என அந்தர்பல்டியடித்தார்.

ஏப்ரல் 7-ஆம் தேதி சாட்சியமளித்த முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகனராவ், அவர் டெல்லி சென்றிருந்தபோது ஜெ. அமைச்சர்களை வரவழைத்து விசாரித்ததாக சாட்சியமளித்தார். ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ""முதல்வரை அமைச்சர்கள் பார்த்ததாக நான் சாட்சியமளித்ததாக வந்த செய்தி தவறானது''என பின்வாங்கினார்.
jayadeath
2016, செப்டம்பர் 22-ஆம் தேதி போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோவுக்கு ஜெ.வைக் கொண்டுவந்த ஆம்புலன்சில் வந்த மருத்துவர் சினேகாஸ்ரீ, ஜூலை 3-ஆம் தேதி தனது சாட்சியத்தில், “""உடல்நலக்குறைவு என தகவல் வர போயஸ்கார்டன் சென்றேன். ஜெ. அப்போது மயக்கநிலையில் ஒரு நாற்காலியில் இருந்தார். சசி, மருத்துவர் சிவக்குமார் உடன்வர ஆம்புலன்சில் ஏற்றிவந்தோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்வரை ஜெ. மயக்கநிலையிலேயே இருந்தார். காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார் என்பது தவறானது'' என்று கூறியுள்ளார்.

மாறாக சசி அளித்த வாக்குமூலத்தில், ஆம்புலன்சில் போகும்போதே "நான் எங்கிருக்கிறேன்' என ஜெ. கேட்டதாக கூறியுள்ளார். மருத்துவர் சிவக்குமாரோ, அப்பல்லோ வந்ததும் "நான் எங்கிருக்கிறேன்' என ஜெ. கேட்டதாகக் கூறியுள்ளார். மூன்று பேரின் சாட்சியங்களும் முரண்படுகின்றன.
jayadeath
ஜூலை 5-ல் சாட்சியமளித்த எக்கோ டெக்னீசியனான நளினி, ""டிசம்பர் 4-ஆம் தேதி 3:50 மணியளவில் ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எக்கோ பரிசோதனைக்காக என்னை அழைத்தார்கள். இதயம் செயலிழந்தபின்தான் எனக்கு அழைப்புவந்தது. மசாஜ்மூலம் இதயத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர மருத்துவர்கள் முயற்சித்தனர். எக்கோ பரிசோதனையில் இதயம் செயலிழந்தது தெரியவந்தது'' என்றார். அப்பல்லோ நிர்வாகம் 4:20 மணி எனத் தெரிவிக்கிறதே என கேள்வியெழுப்பியபோது, மூத்த மருத்துவர்கள் சொன்னதன் அடிப்படையில் அப்படி எழுதியிருக்கலாமென நளினி தெரிவித்தார்.

மற்றொரு அப்பல்லோ மருத்துவரான ரமா, மறுநாள் ஆணையத்தில் ஆஜராகிப் பதிலளிக்கையில், ""டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 4.20-க்கு ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 40 நிமிடம் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டோம். மசாஜ், ஓபன் ஹார்ட் சர்ஜரி பலனளிக்காத நிலையில் எக்மோ சிகிச்சையளிக்கப்பட்டது'' என தெரிவித்திருக்கிறார்.
jayadeath
ஜூலை 10-ஆம் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், நவம்பர் 22-ல் ஜெ., ஜிலேபி, ரசகுல்லா, பாதுஷா சாப்பிட்டது ஏன் என்ற கேள்விக்கு, ""தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக இனிப்பு எடுத்துக்கொண்டார். அதுவும் அளவாகத்தான்'' என்றுகூற, ஆணைய வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதி, "அன்று மட்டுமின்றி பல நாட்கள் திராட்சை, மாம்பழம், மலைவாழை சாப்பிட்டதாக மருத்துவ அறிக்கையில் இருக்கிறதே' என கேட்க, "அதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்தான் பதிலளிக்கவேண்டும்' என கூறினார்.

ஜூலை 12-ல் ஆணையத்தில் மருத்துவர் ஷில்பாவும் செவிலி ஹெலனாவும் சாட்சியமளித்தனர். அதில் செவிலி ஹெலனா, மருத்துவர் ஜெயஸ்ரீயின் சாட்சியத்துக்கு முரணாக ""எனக்குத் தெரிந்து ஜெ.வுக்கு இனிப்போ, பழங்களோ கொடுக்கப்படவில்லை'' என்றார்.

மேலும் "டிசம்பர் 2-ல் ஜெ.வுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதேபோல டிசம்பர் 4-ஆம் தேதி காலை ஜெ. காபி மட்டுமே குடித்தார். வேறெதுவும் சாப்பிடவில்லை' எனச் சொல்கிறார்.

jayadeathமருத்துவர் ரமாவோ டிசம்பர் 4-ஆம் தேதி மதியம் சாப்பாடு சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டில் எது உண்மை? மருத்துவர்கள் அறிக்கையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் ஜெ. உடல்நிலை நார்மலாக இருந்ததாகவே குறிப்பிட்டுள்ளனர். வெண்டிலேட்டர் பொருத்தியது பற்றிய எந்தக் குறிப்பும் மருத்துவ அறிக்கையில் இல்லை.

அதேபோல ஜெ.வுக்கு சிகிச்சையளித்த சர்க்கரைநோய் மருத்துவர் சாந்தாராமன், “ஜெ. பெங்களூரு சிறையிலிருந்தபோது அவரது சர்க்கரை சீராக இருந்தது. ஆனால் போயஸ் கார்டன் வந்ததும் அதிகரித்து உடல்நிலை சரியில்லாமல் போனது’’ என்றிருக்கிறார்.

இப்படி வாக்குமூலமளித்தவரே தனது வாக்குமூலத்தை மறுப்பதும் அல்லது ஒருவரது வாக்குமூலத்துக்கு முரணாக மற்றவர் வாக்குமூலம் அளிப்பதுமாக ஜெ. மரண மர்ம விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது. தினுசு தினுசாக வரும் முரணான வாக்குமூலங்களால் மர்மம் விலகுவதைவிடவும் அதிகமாவதாகத்தான் தெரிகிறது. இந்த நிலையில், 29-ந்தேதி அப்பல்லோவில் ஆய்வு செய்யப் போகிறது ஆறுமுகசாமி கமிஷன். சிகிச்சையையே மர்மமாக வைத்திருந்த அப்பல்லோ, மரணத்தை வெட்ட வெளிச்சமாக்க ஒத்துழைக்குமா?

-தொகுப்பு: க.சுப்பிரமணி
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்