ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்கும் விசாரணைக் கமிஷனில் அடுத்தகட்ட காட்சிகள் "தர்மயுத்த' நாயகன் ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக திரும்பத் தொடங்கியுள்ளது.

ops

கடந்த வாரம் விசாரணைக் கமிஷனில் ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உறவினர் கார்த்திகேயன் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அந்த குறுக்கு விசாரணை உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

deepakபூங்குன்றனிடம் ஜெ.வின் மரணத்தைப்பற்றி கேட்கும்போது பழைய சம்பவத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார் வழக்கறிஞர். ""நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால் ஜெ. சிறையில் அடைக்கப்பட்டபோது, நீங்கள் சிறை வாசலில் ஒரு டாடா சுமோ காரில் படுத்து தூங்கினீர்கள். அதில் பல நாட்கள் தங்கியிருந்து ஜெ.வுக்கு தேவையான உதவிகளை செய்தீர்கள்'' என தனது வாதத்தில் பதிவு செய்தபோது பூங்குன்றன் பழைய நினைவுகளில் கதறி அழுதார். அதேபோல் ஜெ.வின் அண்ணன் மகன் தீபக்கிடம், ""ஜெ.வின் ரத்த சொந்தம் நீங்களும் உங்க சகோதரியும்தானே? ஜெ.வுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவுக்கு சொந்தமான துணிமணிகள் இருக்கின்றன என்றாலும் "ஜெ.வின் சொத்தான போயஸ் கார்டன் உங்களுக்கும் உங்களது சகோதரியான தீபாவிற்கு மட்டும்தான் சொந்தம்' என வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பதிவு செய்தபோது தீபக்கும் கண்ணீர் விட்டார்.

Advertisment

இப்படி உணர்ச்சிவசப்பட்ட இருவரிடமும், ஜெ.-சசி உறவு எப்படி இருந்தது என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. ""ஜெ.வுக்கு நம்பிக்கைக்குரியவர் சசி. ஜெ., சசியை முழுமையாக நம்பினார். ஜெ.வின் மிகவும் விசுவாசமான தோழியாக இருந்த சசி அவருக்கு துரோகம் செய்வார், அவரது மரணத்திற்கு காரணமாக இருப்பார் எனச் சொல்லப்படுவதை நாங்கள் நம்பவில்லை'' என்கிற பாணியில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

lawyer-chendurpandi

""இதை நாங்கள் செய்வது ஓ.பி.எஸ்.சை விசாரணை கமிஷனில் எதிர்கொள்வதற்காகத்தான். ஓ.பி.எஸ்.சை விசாரணைக் கமிஷனில் ஆஜராகுமாறு நீதியரசர் ஆறுமுகசாமி முடிவு செய்துள்ளார். ஒருவேளை அவர் அழைக்கவில்லையென்றால் நாங்கள் சசிகலா தரப்பு சாட்சியாக ஓ.பி.எஸ்.சை அழைப்போம்'' என்கிறார் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.

Advertisment

ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் தனக்கு எதிராக நகர்ந்து வருவதை உணர்ந்த ஓ.பி.எஸ்.சும் சீனியர் வக்கீல்களான பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் மூலம் சசிகலாவுக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பு மோதலை ரசித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

-தாமோதரன் பிரகாஷ்