ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் தமிழக அரசியலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
உச்சநீதிமன்றம் சொன்னபடி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு டாக்டர்கள் குழுவை நியமித்திருக்கிறது. அந்த குழு, கமிஷனின் விசாரணையை வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பார்த்துக்கொண்டிருக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் ஆறுமுகசாமி கமிஷனில் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் நெருங்கியவர்கள் ஊழியர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மாற்றப்பட்டு, புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்களாக கமிஷனில் செயல்பட்டவர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
அப்பல்லோ மருத்துவர்கள் பாபுமனோஜ், அருள்செல்வம் ஆகியோர் அளித்த சாட்சியம் இதில் மிக முக்கியமானது. "ஜெ.வுக்கு அளவுக்கு அதிகமான சர்க்கரை வியாதி பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அது எந்தவிதத்திலும் குறையவே இல்லை. அது ஜெ.வின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதித்தது. அவருக்கு ரத்தக்கொதிப்பும் அதிகமாக இருந்தது. அவருக்கு மலச்சிக்கல் மோசமாக இருந்தது. அத்துடன் தோல்வியாதியும் இருந்தது. அதைவிட மிக மோசமாக மூச்சுவிடுவதில் பிரச்சினை வந்தது. அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்கவே அவர் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது போயஸ் கார்டனில் இருந்து டாக்டர் சிவகுமார், அப்பல்லோ மருத்துவமனைக்கு தொடர்பு கொள்வார். நாங்கள் போய் அவருக்கு சிகிச்சை அளிப்போம். 2016-ஆம் ஆண்டே அவர் மிக மோசமான உடல்நிலையோடுதான் இருந்தார்.
முதல்வர் பதவி ஏற்படுத்திய பணிச்சுமையை தவிர்த்துவிட்டு நீங்கள் ஓய்வெடுங்கள் என நாங்கள் சொல்லும் அளவுக்கு தலைசுற்றல், மூச்சுத் திணறல் என அவர் அடிக்கடி பாதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவருக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்தோம். அதையெல்லாம் மருந்து மாத்திரைகள் மூலம் சமாளிக்கலாமா? என அவர் கேட்டார். நிலமை சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கிறது, மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது, உங்களுக்கு ஓய்வு வேண்டும் என கூறினோம். அவர் அதைக் கேட்கவில்லை. எனக்கு தினசரி 14 மணி நேரம் வேலை இருக்கிறது. அதை நான் தள்ளிவைக்க முடியாது என்றார். அவரது உடல்நிலையை சரியாக பராமரிக்காததால்தான் அவர் உடல் நலிவுற்றார்'' என்றார்.
இந்த சாட்சியத்தை கேள்விகள் மூலம் பெற்றவர் சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டி.
"2016 தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதையும் மீறித்தான் அவர் தேர்தலை சந்தித்தார்'' என்கிறார்.
ஜெ. மரணம் அடைந்தபோது உடனிருந்த மதன்குமார் என்கிற டாக்டர் அடுத்த நாள் சாட்சியம் அளித்தார்.
"மரணத்திற்கு முன்புவரை அவர் நன்றாகத்தான் இருந்தார். அவருக்கு திடீரென்று இதயத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே நாங்கள் சிகிச்சையளித்தோம். இதயத்தின் இயக்கம் நின்றுபோனது. அவரது இதயத்தை மின்சார ஷாக் கொடுத்து இயக்க நினைத்தோம். அந்த முதலுதவி சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. அதன்பிறகு எக்மோ சிகிச்சை அளித்தோம். அதுவும் பலன் அளிக்கவில்லை'' என்றார்.
தற்பொழுது ஜெ.வின் மரணத்தின்போது நடந்தவை வரை கமிஷன் வந்திருக்கிறது. அடுத்தகட்டமாக ஜெ.வின் மரணத்தில் மர்மம் உள்ளது என குற்றச்சாட்டை கிளப்பிய ஓ.பி.எஸ். இந்த மாதம் 21-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"ஓ.பி.எஸ்.ஸுடன் இதுவரை கமிஷனில் சாட்சியம் அளித்துள்ள இளவரசியையும் கமிஷன் அழைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்.ஸுடன் இணைந்து ஜெ.வின் மரணத்தில் மர்மம் என சொன்ன எடப்பாடியையும் அழைத்து விசாரிக்க, கமிஷன் ஆலோசித்துள்ளது' என்கிறார்கள் கமிஷனுக்கு நெருக்கமானவர்கள்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு இதுவரை 8 முறை கமிஷன் சம்மன் அனுப்பியும் அவர், எடப்பாடி ஆட்சியின் போது ஆஜராகவில்லை. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்., ஜெ.வின் சாவுக்கு சசிகலாதான் காரணம் என ஏன் சொன்னார் என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஓ.பி.எஸ். இப்பொழுது சசிகலாவுக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளார். எனவே அவர் சசிகலாவை கமிஷனில் குற்றம் சுமத்தமாட்டார் என்கிறது ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான வட்டாரங்கள். ஆனால் அவர் மாற்றிச் சொன்னாலும் அவர் தர்மயுத்தம் நடத்தும் போதும் முதலமைச்சராக இருந்தபோதும், ஜெ.வுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது என்ன நடந்தது என்பதை அவரே சொல்லும் அளவிற் கான கேள்விகள் கமிஷனில் தயாராகிவருகிறது என்கிறார்கள் கமிஷனைச் சேர்ந்தவர்கள்.
நீதிபதி ஆறுமுகசாமியே இந்தக் கேள்வி களை ஓ.பி.எஸ்.ஸிடம் கேட்டால், அந்த கேள்வி களுக்கு என்ன பதில் சொல்வது என ஓ.பி.எஸ். வீட்டில் விவாதங்கள் நடந்துவருகிறது. எதற்கு இந்த வம்பு, கமிஷனில் ஆஜராவதை தவிர்க்கலாம் என்ற யோசனையும் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருக்கிறது என்கிறது அவரது வட்டாரங்கள்.