உப்புக்குப் பெறாத விஷயங்களைக்கூட, நோண்டி நொங்கெடுத்து, கிண்டிக் கிழங்கெடுத்து, காய்ச்சி வறுத்தெடுப்பதுதான் தமிழகத்தில் பெரும்பாலோரின் பொழுதுபோக்காக இருக்கிறது. மக்களின் மனநிலையை அறிந்தோ என்னவோ, மேடைகளும் பொதுவிவாதங்களும் அந்த ரசனைக்கு ஏற்றாற்போல் அமைந்துவிடுகின்றன. ஆனாலும், முக்கியமான ஒரு விஷயத்தை எதிர்க்கட்சியினரோ, எதற்கெடுத்தாலும் வாய்நீளம் காட்டும் அரசியல் தலைவர்களோ கண்டுகொள்ளவில்லை. அது என்னவென்று பார்ப்போம்...
2017 பிப்ரவரி 14-ஆம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என, கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.100 கோடியை வசூலிப்பதற்காக, அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டது. மற்ற மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு அபராதம் என்று தீர்ப்பு வெளிவந்த ஒ

ஜெயலலிதாவுக்கு அபராதம் என்று தீர்ப்பு வெளிவந்த ஒரு வாரத்திலேயே, அவருடைய அண்ணன் மகன் தீபக் "போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமையாளர்கள் நானும் தீபாவும்தான். என்னுடைய அத்தை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடியை கடன் வாங்கியாவது நான் கட்டுவேன்'’ என்று கூறினார். அப்போதே தீபக்கை கலாய்த்து "ஜெ. தீபக் தம்பி... டின்னருக்கு காசு இருக்கா? இல்ல... அம்மா உணவகமா?'’என்று மீம்ஸ்கள் வந்தன. நெட்டிசன்கள் கிண்டலடித்தது போலவே, அபராதத் தொகையைக் கட்டுவதற்கு, தீபக் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை.
ஜெயலலிதாவின் சொத்துகள் எவை?
1991-96 காலக்கட்டத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, பல ஊர்களில் நிலங்களை வாங்கினார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமாக 68 சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ளன. போயஸ் கார்டன் வீட்டின் இரண்டு தளங்கள் முன்பே கட்டப்பட்டவை. 31-ஆ எண் கொண்ட கட்டடம்தான் 1991-க்கு பிறகு கட்டப்பட்டது. ஹைதராபாத் திராட்சை தோட்டமும் செகந்திராபாத் வீடும் ஜெயலலிதாவின் பழைய சொத்துகள் என்பதால், ஏலம் விட முடியாது. அதே நேரத்தில், 1996-ல் போயஸ் கார்டன் வீட்டில், கலர் டி.வி. வழக்குக்காக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட்டு கைப்பற்றி, சென்னை ரிசர்வ் வங்கி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள அசையும் சொத்துகளான 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி காலணிகள், 10,500 புடைவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் ஏலத்துக்கு விடமுடியும். 68 சொத்துகள் என்பது ஒரு கணக்காக இருந்தாலும், சிறுதாவூர், கொடநாடு, பையனூர், கருங்குழிபள்ளம், ஈஞ்சம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர், வேலகாபுரம், செய்யூர் போன்ற இடங்களில் உள்ள நிலங்களும், கட்டடங்களும், பல வங்கிகளில் உள்ள இருப்புத்தொகை என அரசுத் தரப்பு அப்போது தாக்கல் செய்த சொத்துப் பட்டியலில் 306 வகையிலான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஜெயலலிதா சொத்துகள் எப்போது ஏலத்துக்கு விடப்படும்?
2017, மே இறுதியில், தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, வழக்கு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த விவரங்களை உள்ளடக்கிய, சொத்துகளைக் கையகப்படுத்த வேண்டிய கடிதங்களை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவிட்டன. பறிமுதல் செய்ய வேண்டிய சொத்துகள் குறித்து ஆட்சியர்கள் ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். இதனை தனி அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். சொத்துகளை பராமரிப்பது, தேவைப்பட்டால் அரசே அதனை உபயோகிப்பது அல்லது ஆட்சியர்/நீதிபதி முன்னிலையில் ஏலம்விடுவது என தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். தமிழக அரசோ, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபராதத் தொகைக்காக, ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதாவின் நகைகளை ஏலம்விட, ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆமாம். இதுகுறித்து எந்தவித தகவலும் அரசுத் தரப்பில் இருந்து தங்களுக்கு வரவில்லை என்கிறது ரிசர்வ் வங்கி வட்டாரம்.
ஊழல் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், ஜெயலலிதா’என்ற லேபிள், எடப்பாடி அரசுக்கு இன்றும் தேவையாக உள்ளது. அதனால்தான், எந்தக் கூச்சமும் இல்லாமல், "அம்மாவின் அரசு'’என்று மார் தட்டுகிறார்கள். அப்புறம் எப்படி, இந்த அரசு ஜெயலலிதா முறைகேடாகச் சேர்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்து ஏலத்துக்கு விடும் என்று எதிர்பார்க்க முடியும்?
தமிழகத்தின் முதலமைச்சர் என்ற அதிகாரத்தை வைத்து, ஊழல் செய்து கோடிகளில் சொத்துகளைக் குவிப்பார்களாம். வழக்கை 21 ஆண்டுகள் இழுத்தடிப்பார்களாம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவே ஆனாலும், கிடப்பில் போடுவார்களாம். இறுதித் தீர்ப்பு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன. சிறைத்தண்டனை அனுபவிக்கின்ற சசிகலாகூட தனக்கு விதிக்கப்பட்ட 10 கோடி அபராதத்தை கட்டவில்லை. இளவரசி, சுதாகரன் நிலையும் அதுதான். இதையெல்லாம் செயல்படுத்த வேண்டியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். அங்கும் அசைவு இல்லை. இந்த விவகாரம் குறித்து, தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., அட... கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட இதுவரை எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. எல்லாம் அரசியல்தானோ?
-சி.என்.இராமகிருஷ்ணன்