"பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சுந்தர்ராஜனை சந்தித்து பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றத் துடிப்பதற்கான காரணம் என்ன?

soundrajசுந்தர்ராஜன்: இது ‘பாரத் மாலா’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2017ஆம் ஆண்டு நவம்பரில் முதல்வர் மத்திய அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில், இந்தத் திட்டம் குறித்த ஒரு குறிப்புகூட கிடையாது. ஆக, கடந்த நான்கு மாதங்களுக்குள்ளாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கஞ்சமலை, கவுத்தி வேடியப்பன் மலையின் கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்காகவும், இராணுவத் தளவாடங்கள் அமைப்பதற்கான தாழ்வாரத்திற்காகவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். என்ன காரணத்திற்காக இருந்தாலும், ஏன் இந்தத் திட்டம் என்பது மட்டுமே நம் கேள்வி. மதுரை - சென்னை இடையே அவசியமாக இருக்கவேண்டிய சாலை விரிவாக்கம், எதற்காக நெரிசலற்ற சேலம் - சென்னை வழித்தடத்தில் அமைக்கப்பட வேண்டும்?

இந்தத் திட்டத்தின்மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்கிறார்களே?

Advertisment

சுந்தர்ராஜன்: 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி, 40ஆயிரம் வீடுகளை இடித்து, 19 கி.மீ. இடைவெளியில் 9 காப்புக்காடுகளை அழிப்பதன்மூலம் எவ்வளவு பெரிய அழிவை நாம் எதிர்நோக்குகிறோம். அதேபோல், கையகப்படுத்தப்படும் நிலத்தைவிட 3 மடங்கு நிலம் பயனற்றுப்போகும் என்றால், இதன்மூலமாக என்ன வேலைவாய்ப்பு கிடைக்கும்?

திட்டம் சரியானது, நிலம் கையகப்படுத்தும் அணுகுமுறைதான் தவறு என்று சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சுந்தர்ராஜன்: திட்டமே தவறானதுதான். ஏற்கெனவே இருக்கும் சாலையை மேம்படுத்தாத, பயண தூரத்தை பாதியாகக் குறைக்காத நிலையில் இந்தத் திட்டம் எப்படி சரியானதாக இருக்கும்? வளர்ச்சி என்பதன் சித்தாந்தமே இன்று மாறியிருக்கிறது. சுற்றுச்சூழலை மேம்படுத்தாத எந்த வளர்ச்சியும் தேவையற்றதுதான்.

Advertisment

இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்துகிறார்களே?

சுந்தர்ராஜன்: நாங்கள் தேசத்தை நேசிக்கிறோம். சுற்றுச்சூழலை நாசம் செய்கிற எந்தவொரு அரசு திட்டத்தையும் வெறுக்கிறோம். நிச்சயமாக எதிர்த்து கேள்வியெழுப்புவோம். அறவழியில் போராடுபவர்களைத்தான் கைதுசெய்து அராஜகம் செய்கிறது அரசு. மக்களுக்காகத்தான் திட்டமே ஒழிய, திட்டங்களுக்காக மக்கள் கிடையாது. மக்கள் நினைத்தால் அதை நிறைவேற்றத் துடிக்கும் அரசைத் தூக்கியெறிந்து விடுவார்கள்.

சந்திப்பு - சி.ஜீவாபாரதி

தொகுப்பு - ச.ப.மதிவாணன்