சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள ஜோடுகுளியில் டேனீஷ்பேட்டை வனச்சரகத்தற்கு உட்பட்ட காப்புக்காடு உள்ளது. செப்டம்பர் 23-ஆம் தேதி மாலை, அந்தப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற சிலர், இளம்பெண் ஒருவர் உயிருடன் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து வனத்துறைக்கு தகவலளித்தனர். '108' ஆம்புலன்ஸ் அங்கு வந்து பார்த்தபோது, இளம்பெண் தீயில் எரிந்து சடலமாகிவிட்டார்.

தகவலறிந்த ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகர், காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

dd

தடயவியல் நிபுணர்கள் சடலம் கிடந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். சடலத்தின் அருகில் சிதறிக்கிடந்த ஒரு ஜோடி காலணி, தாலிக்கொடி, துப்பட்டா, ரத்தம் தோய்ந்த கல் ஆகிய தடயங் களைச் சேகரித்தனர். இது 'பலான' சமாச் சாரத்திற்காக நடந்த கொலையாக இருக்கலாம் என்றுதான் காவல்துறையினர் ஆரம்பத்தில் கருதினர்.

Advertisment

செப். 24-ஆம் தேதி காலை யில், இளைஞரொருவர், தனது தாயாருடன் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஆஜரானார். 'காப்புக்காட்டில் சடலமாகக் கிடந்த பெண்ணை நான்தான் உயிருடன் எரித்துக் கொன்றேன்,' என்று கொஞ்சமும் பதற்றமில்லாமல், அந்த இளைஞர் சொன்னதைக் கேட்டு காவல் துறையினர் ஒரு கணம் அதிர்ந்து போயினர்.

விசாரணையில் அவர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள பரப்பன அக்ர ஹாராவைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் மகன் முரளி கிருஷ்ணன் என்றும், ஐ.டி. நிறுவன ஊழியர் என்பதும் தெரியவந்தது. கொலையுண்ட பெண், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கேசவராஜ் மகள் கோகிலவாணி. அரியானூரிலுள்ள விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., பார்மசூட்டிகல் இன்ஜினியரிங் நான்காமாண்டு படித்துவந்தவள்.

நம்முடைய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன...

Advertisment

கோகிலவாணியின் தாய்வழிப் பாட்டி பெங்களூருவில் வசிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய தாயாரும், முரளிகிருஷ்ணனின் சித்தியும் பெங்களூருவிலுள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்துவந்தனர். இரு குடும்பத்தாரும் தூரத்து உறவினர்களும்கூட.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கோகிலவாணி யின் பெற்றோர் அழைத்ததன் பேரில் முரளி கிருஷ்ணனின் பெற்றோர், சித்தி குடும்பத்தினர் சேலம் மாவட்டம் மேச்சேரியிலுள்ள பத்ரகாளி யம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர்.

அந்த கோயிலில் வைத்துதான் கோகிலவாணி யும், முரளிகிருஷ்ணனும் முதலில் சந்தித்துக் கொண்டனர். பிறகு அவர்கள் தினமும் செல் போனில் பேசி வந்ததில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் இரு தரப்பு பெற்றோ ருக்கும் தெரிய வந்ததையடுத்து, அவர்களின் காதலுக்கு 'ரெட் கார்டு' போட்டனர்.

ss

காதலில் உறுதியாக இருந்த அவர்கள், கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, பெற்றோருக்குத் தெரியாமல் சேலத்திலுள்ள ஒரு கோயிலில் வைத்து, தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு காதலர்கள் எதுவும் நடக்காததுபோல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். வார இறுதி நாட்களில் முரளிகிருஷ்ணன் சேலத்திற்கு வந்து கோகிலவாணியை ரகசியமாக சந்தித்துவிட்டுச் செல்வார். சிலமுறை, அவரை மோட்டார் சைக்கிளிலேயே பெங்களூருக்கு அழைத்துச் சென்று விடுதியில் அறையெடுத்தும் 'ஒன்றாகத்' தங்கியுள்ளார்.

திடீரென்று காதல் கணவரான முரளி கிருஷ்ணனுடன் கோகிலவாணிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அவருடன் பேசுவதையும், சந்திப்பதை யும் தவிர்க்கத்தொடங்கினார். தனது படிப்புக் கான புராஜக்ட் ரிப்போர்ட் தயாரிப்பது தொடர்பாக சக மாணவர் ஒருவருடன் கோகிலவாணி நெருங்கிப் பழகிவந்துள்ளார். இதில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதை மோப்பம் பிடித்துவிட்ட முரளி கிருஷ்ணன், புதிய காதலனையும், பிற ஆண்களுடன் பேசுவதையும் உடனடியாக கைவிடுமாறு எச்சரித்தார். இதுதொடர்பாக செல்போனில் எப்போது பேசினாலும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், சம்பவத்தன்று சேலம் வந்த முரளிகிருஷ்ணன், இருவருக்கும் இடையேயான பிரச்னையை சுமூகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, கோகிலவாணியை அழைத்துள்ளார்.

முரளிகிருஷ்ணன், கோகிலவாணியுடன் ஜோடுகுளி வனப்பகுதிக்குச் சென்றார். அங்கு சென்றபிறகும் இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோகிலவாணியோ, "ஆமாம்... எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிப்பேன். இனிமேல் நீ தேவை இல்லை,' என்று அலட்சிய மாக தாலியை கழற்றி அவர் முகத்தில் வீசியெறிந் துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளி கிருஷ்ணன், தான் மறைத்துவைத்திருந்த டெஸ்டர் போன்ற சிறிய ஸ்க்ரூ டிரைவர் மற்றும் கூர்மை யான கட்டிங் பிளேயரால் கோகிலவாணியின் கழுத்திலேயே குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார் கோகிலவாணி. கழுத்தில் ஆழமாக ஸ்க்ரூடிரைவர் பாய்ந்ததால் அவரால் கத்திக் கூச்சல் போடமுடிய வில்லை. ஆத்திரம்தீராத முரளிகிருஷ்ணன், அருகில் கிடந்த கல்லால் அவருடைய முகத்தைச் சிதைத்துள்ளார். தான் வாங்கி வந்த ஒரு லிட்டர் பெட்ரோலை அவருடைய முகத்தில் ஊற்றி உயிருடனே தீவைத்து எரித்துள்ளார்.

கோகிலவாணி தன்னை அழகி என்று அடிக்கடி கூறுவாராம். அதனாலேயே அழகு முகத்தை சிதைக்க, பெட்ரோல் ஊற்றி எரித்ததாகச் சொல்லியிருக்கிறார் முரளிகிருஷ்ணன்.

வீட்டிற்குச் சென்றபிறகுதான், நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் புலம்பியுள்ளார். இதைக் கேட்டு பதறிப்போன தாயார், உடனடியாக காவல் நிலையத்தில் சரணடையச் சொல்லியிருக்கிறார். அதையடுத்தே முரளிகிருஷ்ணன் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

முரளிகிருஷ்ணனை கைது செய்த காவல் துறையினர், ஓமலூர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.