தேர்தல் அறிக்கையை முன் வைத்து நடைபெறும் பிரச்சாரமும் விவாதமும் சூடாகியுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், "அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு, சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்குத் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்த வசதி செய்து தரப்படும்' என்ற அறிவிப்பு, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. உபயம்: பேராவூரணி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.திலீபன்.
இத்திட்டத்தை விமர் சித்து பரப்புரை செய்த அவர், ""மாதாமாதம் நாப்கின் வாங்கிக் கொடுக்கக்கூட துப்பில்லாத வர்களா பெற்றோர்? இந்த நாப்கின் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் அவரது குடும்பத் தாருக்கு வழங்கித் தொடங்கி வைப்பாரா?'' என்றெல்லாம் வரிசையாகக் கேள்விகள் கேட்டு கைத்தட்டல்களை வாங்கியுள்ளார். இதற்கான எதிர்வினைகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.
நாகரிக-தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் மாதவிடாய் நாட்களைத் தீட் டென்று சொல்வதும், கடைகளில் நாப்கின் வாங்கும் போது-வெளியே தெரியாதவாறு கருப்பு நிறக்கேரிபேக்கில் ரகசியமாக வைத்துத்தருவதுமே நடைமுறையில் உள்ளது. மாதவிடாய் என்பது பெண்களின் உடல் சார்ந்த இயற்கையான நிகழ்வு. அதே நேரத்தில், நாப்கின் வாங்குவதற்கான பொருளாதார வசதியின்மை, அதை பிறரிடம் சொல்லி வாங்கிவர இயலாத மனத்தடை இவை நீடிக்கின்றன. செலவை யோசித்து பழைய துணிகளைப் பயன்படுத்தி, நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
பெண்களின் முன்னேற்றம் குறித்து சிந்தித்துச் செயலாற்றுவதில் பிற மாநிலங்களுக்குத் தமிழகம் முன்னோடியாகும். தி.மு.க ஆட்சியில் சென்னை மேயராக இருந்த மா.சுப்ரமணியன் மாநகராட்சிப் பள்ளிகளில் இலவச நாப்கின் திட்டத்தைத் தொடங்கினார். 2011-ல் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் தழுவி பள்ளி மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இலவச நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைச் சுகாதாரமான முறையில் அழிப் பதற்கான எந்திரமும் நிறுவப் பட்டுள்ளது. அதேபோல, கிராமப் புறப் பெண்களுக்கு, சுகாதாரத் துறைப் பணியாளர்கள், கிராமப் புறச் செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலம் இலவச நாப்கின்கள் வழங்கப்படும் திட்டம் ஓரளவுக்கு பயன்பாட்டில் உள்ளது. அடுத்த கட்டமாக, இத்திட்டத்தை விரிவுபடுத்தி, பள்ளி, கல்லூரிகளில் தானியங்கி எந்திரங்களின் மூலமாக நாப்கின் வினியோகிக்கப் படும் என்று தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நம் தமிழகத்தை முன்னு தாரணமாகக்கொண்டு, கேரளா, ஆந்திரா, திரிபுரா போன்ற மாநிலங்களிலும் இலவச நாப்கின் திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் இத்திட்டத்தை அறிமுகப் படுத்தும்போது, ""மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை'' என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார். ஆம், நம்மில் பலருக்கும் இலவசம் என்பதற்கும், உரிமை என்பதற்கு மான வித்தியாசமே தெரிவதில்லை. அதனால்தான் இட ஒதுக்கீடு குறித்தும் தவறான புரிதல்கள் பரப்பப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் மகளிர் தினத்தின்போது ஒரு நிமிட அவகாசத்தில் மகளிருக்கு வாழ்த்துச் சொல்ல அனு மதித்தபோது, தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, ""நீங்கள் உண்மையில் இந்த மகளிர் தினத்தில் மகளிருக்கு ஏதா வது பரிசுதர விரும்பினால், அவர்கள் அதிமுக்கியமாகப் பயன்படுத்துகிற சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டியில் வரி விலக்கு தாருங்கள்'' என்ற கோரிக்கையை வைத்தார். அவரது கருத்தை அவைத் தலைவரான வெங்கய்யா நாயுடு பாராட்டியதோடு, அடுத்த அறிவிப்பில் சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு தரப்பட்டது. இப்படி பெண்ணுரிமை சார்ந்து தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அனைத்துமே பாராட்டுக்குரியவை.
மலிவு விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக பத்மஸ்ரீ விருதுபெற்ற கோவைத் தமிழர் முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு, 2108-ம் ஆண்டில் வெளிவந்த 'Pad Man' இந்திப் படம் வெளியானது. அப்போது, நாப்கின் என்பது தீண்டத்தகாத பொருளல்ல என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக வலைத்தளங்களில் -padman challengeவைரலானது. அதன்படி, இந்தியாவிலுள்ள பிரபலங்கள் அனைவரும் ஆண், பெண் வேறுபாடின்றி, நாப்கினைக் கையில் பிடித்தபடி புகைப்படம் எடுத்துப் பதிவிட்டார்கள்.
பிரபலங்களைத் தொடர்ந்து பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு புகைப் படங்களை வெளியிட்டார்கள். அப்பா தன் மகளோடு இணைந்து நாப்கினைப் பிடித்தபடி போஸ்கொடுத்த புகைப்படங்களும் இதில் அடங்கும். இதன்மூலம் நாப்கின் மீதான தீண்டாமைப் பார்வையைத் தகர்த்தெறிந்தனர்.
காலங்கள் மாற மாற, கல்வியறிவு பெருகப்பெருக, நம்முடைய சமூகப் பார்வையிலும் மாற்றம் வரவேண்டும். பெண்கள் வேலைக்கு செல்வது மட்டுமல்லாது, தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் அதிகளவில் இருக்கின்றன காலகட்டம் இது. அவர்களின் தேவை, முன்னேற்றம், சுதந்திரம் இவற்றை முன்னிறுத்தாமல் பழைய பார்வையுடன் எந்த அரசியல் கட்சியும் செயல்பட முடியாது.
-தெ.சு.கவுதமன்