கிட்டத்தட்ட சிலநூறு செய்தியாளர்களையும், மானுடத்தில் அக்கறையுள்ள சிலநூறு பேரைத் தவிர மற்றெல்லாரின் கவனத்திலிருந்து உக்ரைன் போரும், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் கொடுந்தாக்குதலும் மறைந்திருக்கும்.

ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேல் மீதான கொடுந் தாக்குதலைக் காரணம் காட்டித்தான் இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது. கிட்டத்தட்ட பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி முழுவதும் குண்டுமழை பொழிந்து தீர்த்துவிட்டது. பாலஸ்தீனர் களின் பகுதிகளில் மருத்துவ மனையே இல்லாமல் ஏவுகணை வீசி நொறுக்கித் தள்ளிவிட்டது. ஹமாஸின் சுரங்கப்பாதை இருப்பதாகச் சந்தேகித்த இடங்களையெல் லாம் நொறுக்கி அள்ளி விட்டது. இஸ்ரேலின் தினவு இன்னும் அடங்கவில்லை.

இதுவரை 36,000 பாலஸ்தீனர்கள் இறந்து போயுள்ளனர். அதில் 14,600 பேர் குழந்தைகள். இன்னும் 8000 பேர் காணவில்லை. அவர்களை உயிருடன் இருப்பவர்களின் கணக்கில் சேர்ப்பது சிரமம். அவர்கள் இறந்துபோயிருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனாலும் பாலஸ்தீன விவகாரத்தில் நம்பிக்கை தருவதுபோல் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கின்றன.

ஒன்று, அமெரிக்காவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இஸ்ரேலின் இனப் படுகொலைக்கு எதிராக மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் தன்னெழுச்சியான மாணவர்கள் போராட்டம் நடக்கத் தொடங்கியுள்ளது. நியூயார்க்கின் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய மாணவர்களை, போலீஸ் அதிரடியாகக் கைதுசெய்து வெளியேற்றியதைத் தொடர்ந்து ஹார்வர்டு, யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் பல்கலைக்கழகங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது.

Advertisment

அமெரிக்காவைப் பின்தொடர்ந்து பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத் தில் குதித்துள்ளது இஸ்ரேலை தர்மசங்கடம் அடையச் செய்துள்ளது.

போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், ஆயுதம் வழங்குவதை நிறுத் தல், போரால் பயனடையும் நிறுவனங்களிலிருந்து பல்கலைக்கழக முதலீட்டை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனத்துக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு எதிராக, தமிழகத்திலுள்ள இந்திய மாணவர்கள் சங்க அமைப்பினர், மே 8-ஆம் தேதி சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடக் கிளம்பினர். இவர்கள் வழியிலேயே மறித்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

மாணவர்களின் போராட்டம் இஸ்ரேல் போரை நிறுத்துமா…என தெரியாது. குறைந்தபட்சம் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் அநீதிக்குத் துணைநிற்கின்றன என்கிற உணர்வையாவது அந்நாட்டின் அரசியல்வாதிகளிடம் ஏற்படுத்தினாலே குறிப்பிடத்தக்கதுதான்.

மற்றொரு முக்கிய விஷயம், ஐ.நா. பொதுக்குழு வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்க சம்மதிக்கும் தீர்மானத்தின் மீது மே 10-ஆம் தேதி வாக்கெடுப்பு நடந்தது. தற்போதுவரை இந்நாடு வெறும் பார்வையாளராகவே நீடிக்கிறது. இதனால் பாலஸ்தீனம் எந்த ஒரு தீர்மானத்தையும் கொண்டுவர முடியாது. பிற நாடுகள் கொண்டுவரும் தீர்மானங்களின் மீது வாக்களிக்கவும் முடியாது.

ii

பாலஸ்தீனத்தை உறுப் பினராக்கும் தீர்மானத்தின் மீது மொத்தமுள்ள 192 நாடுகளில் 158 நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன. 34 நாடுகள் வாக்களிக்காமல் இருக்க, 9 நாடுகள் பாலஸ்தீனம் உறுப்பினராவ தற்கு எதிர்ப்புத் தெரிவித் துள்ளன. என்னதான் இந்தியா, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும் இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பாராட்டத்தக்கது.

ii

இத்தனை நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந் தாலும் அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட இதர நாடுகள் ஆதரவாக வாக்களிக்காததாலும், பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினராக ஆவது சந்தேகமே.

அமெரிக்க அரசியலில் யூதர்களின் செல்வாக்கு அதிகம். அவர்கள் பாலஸ்தீனத்தை ஐ.நா. உறுப்பினர் நாடாக்க அமெரிக்காவை சம்மதிக்கவிடாமல் எதிர்காலத்திலும் இழுத்துப் பிடிப்பார்கள். ஆனால், அமெரிக்க மக்கள் தொகையில் 1 கோடி பேர்கூட இல்லாத யூதர்கள், அமெரிக்க அரசியல் தீர்வுகளில் செல்வாக்கு செலுத்துவது தங்கள் நாட்டுக்கு நல்லதா என்பதை அமெரிக்கர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.

ii

மேலும், ஹமாஸைப் பழிவாங்குவதற்காக இஸ்ரேல் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையே கொன்று குவிப்பதை அமெரிக்கா வேடிக்கை பார்த்தது என்ற பழி, காலத்துக்கும் தன்மேல் விழுவதை அமெரிக்கா அனுமதிக்க வேண்டுமா என்றும் முடிவெடுக்க வேண்டும்.