இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லைகளில் கடந்த ஒருவாரமாக ராக்கெட்டுகளும் குண்டுகளும் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். காயம்பட்டவர்களின் எண்ணிக்கையே ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஆகாயத்திலிருந்து பறந்துவந்து விழும் ராக்கெட் மற்றும் குண்டுகளுக்குப் பயந்து 10,000 பேர் காசா பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருக் கின்றனர். இதுவரை இஸ்ரேல் அரசிடமிருந்தோ, ஹமாஸ் அமைப்பினரிடமிருந்தோ போர் நிறுத்தத்திற்கான குரல் எழவில்லை.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை, இரண்டாம் உலகப்போருக்குப் பின் எழுந்த ஒன்று. அச்சமயம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கை ஓங்கியிருந்ததால், பாலஸ்தீனத்தில் இருந்த அரேபியர்களின் கருத்தைக் கேளாமல் யூதர்களை அங்கு குடியமர்த்தி இஸ்ரேல் என்ற தனி நாட்டை ஏற்படுத்தினர். ஜெருசலேம், யூதர்களின் சொந்த நில மானாலும் வெகுகால மாக அவர்கள் அப் பகுதியில் வசித் துவரவில்லை. பாலஸ்தீனிய பூர்வகுடிகளுக் கும் இந்த நிலத்தில் உரிமை இருப்பதால், இஸ்ரேலை ஏற்க மறுத்து, கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக பாலஸ்தீன பகுதி மக்கள் போராடி வருகின்றனர்..
ஆரம்பகட்டத்தில் தங்களின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை நம்பி யிருந்த இஸ்ரேலியர்கள், விரைவிலேயே பொருளா தாரத்திலும் தற்காப்பிலும் தங்களைக் காத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமான பிரச்சினை தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாளாக நாளாக பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் மெதுமெதுவாக விழுங்கிவருவதாகவும் பாலஸ்தீனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
"சரி இப்போது என்னதான் பிரச்சனை?'
கிழக்கு ஜெருசலத்தின் அல்-அக்சா மசூதி, யூதர்களுக்கும் அரேபியர்களுக் கும் புனிதத்தலமாக கருதப்படுகிறது. இங்கு அரேபியர்களை தொழுகைக்கு வருகை தருவதற்கு, யூதர்கள் அனுமதிக்க மறுத்தது பாலஸ்தீனர் களின் கோபத்தைத் தூண்டியது. மேலும் இங்குள்ள ஷேக் செரா பகுதியிலுள்ள பாலஸ்தீனர்களை யூதர் கள் அங்கிருந்து அப் புறப்படுத்தியதும் சேர்ந்துகொள்ள பிரச்சினை வெடித்துக் கிளம்பியது. இஸ்ரேலிய போலீசாரின் கெடுபிடிகளைக் குறைக்கவும், போலீசார் அல்-அக்சா மசூதியிலிருந்து செல்லவும், தங்களது எதிர்ப்பைக் காட்டும்விதமாக ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவினர். கிட்டத்தட்ட இந்த ஒருவார காலத்தில் ஹமாஸ் அமைப்பினர் 1200 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளனர். ஹமாஸின் ராக்கெட்டுகளிடமிருந்து காத்துக்கொள்ள இரும்பாலான குவிமாட பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலைத் தாக்கவில்லை.
பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும், ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதலை நடத்தியது. தொழில்நுட்பமும் பொருளாதார வசதியும்மிக்க இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல், பாலஸ்தீனத் தரப்புக்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. 6 விமானத் தளங்களிலிருந்து 160 போர் விமானங்கள் 150 இலக்குகளைத் தாக்கியுள்ளதாகவும், 450 ஏவுகணை கள் வீசப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பாலஸ்தீனர் தரப்பில் 119 பேர் இறந்துள்ளனர். எனினும் இறந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களே. ஹமாஸ் தரப்பில் 20 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. ரம்ஜான் நாளிலும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஆதரவற்ற குழந்தைகளுக்கான மையமும் தாக்கப்பட்டதில், 31 குழந்தைகளும், 19 பெண்களும் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 8 பேர் மட்டுமே இறந்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் முயற்சி மற்றும் வலியுறுத்தலால், 2014 முதல் இப்பகுதியில் ஓரளவு சமாதானம் நிலவிவந்தது. 2014-க்குப் பிறகு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே நிலவும் மிகப்பெரிய தாக்குதல் இதுவெனச் சொல்லப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவம் ராக்கெட், விமானத் தாக்குதலுடன் நில்லாமல்... வடக்கு மற்றும் கிழக்கு காசா பகுதிகளில் தரைப்படை கொண்டும் தாக்கியது. பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலியப் படை நுழைந்ததாகச் சொல்லப்பட்டாலும் அதனை இஸ்ரேல் மறுக்கிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எங்கள் நாட்டைத் தாக்கியவர்களை அத்தனை எளிதில் விடமாட்டோம், நாங்கள் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை'' என அறிவித்திருக்கிறார். இஸ்ரேல், யூதர்களின் நாடானாலும் அதற்குள் 20 சதவிகித அரேபியர்களும் வசிக்கின்றனர். போர்ச்சூழலுக்குப் பின் ராணுவமும், போலீஸும் மிகுந்த கெடுபிடிகளை அரேபியர்கள் மீது விதித்து வருவதாகவும் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
மாறாக, அரேபியர்கள்தான் யூதர்களைத் தாக்கியதாகவும் உள்நாட்டுக் கலவரம் ஏற்படக் கூடா தென்பதாலே கலவரக்காரர்கள் அடை யாளம் காணப்பட்டு கைது செய்யப் பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது.
வழக்கம்போல், இந்தப் பிரச் சினையில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரவுத் தரப்பையே எடுத்துள்ளது. ஐ.நா. சபையோ இது முழுமையான போராக மாறிவிடக்கூடாது என கவலைப்படுகிறது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஷ், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து அங்கு அமைதி நிலவச்செய்வதில் மும்முரம் காட்டிவருகிறார்.
இஸ்ரேலைக் குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் ஏவிய ராக்கெட்டில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா சந்தோஷ் உயிரிழந்துள் ளார். அவரது உடலை இந்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் டெல்லிக்குக்கு கொண்டுவந்து, பின் அங்கிருந்து கேரளாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
நிலமும், அதற்கான அதிகாரமும் தான்... ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதனின் உயிர்குடிக்கும் பூதமாக விளங்கிவருகிறது.
-சூர்யன்