நிதித்துறை என்பது முதல்வர் அல்லது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சரின் பொறுப்பில் என்பது வழக்கம். அதற்கு மாறாக, தி.மு.கவின் இளம் அறிவாற்றல் ஆளுமையாக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் நிதித்துறையை வழங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
தாத்தா பி.டி.ராஜனின் நீதிக்கட்சி பங்களிப்பு, தந்தை பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் தி.மு.கழக ஈடுபாடு, திராவிட சித்தாந்த வழி ஆன்மிக முன்னெடுப்பு என பி.டி.ஆர் குடும்பத்திற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. அதன் மூன்றாவது தலைமுறையான பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு மிகக்கடுமையான பேரிடரையும் கடன் சுமையையும் கொண்டிருக்கிற சூழலில் நிதி அமைச்ச ராகியுள்ளார். அத்துடன், ஆன்மிகத் தளத்தில் எதிரொலிக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை மையமாக வைத்து திராவிட ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுப்பப்படும் சர்ச்சைகளுடன் நக்கீரனுக்கான அவரது நேர்காணல் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள கோவில்களை பக்தர்கள்தான் நிர்வாகம் பண்ணணும். இந்து அறநிலையத்துறையை வைத்து நிர்வாகம் செய்வது தவறு என குரல் எழுகிறது. ஈஷா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ், தேர்தலுக்கு முன்பு இதே கோரிக்கையை வைத்து பெரிய அளவுக்கு வந்தார். அவர் "காவேரி காலிங்' என்ற இயக்கத்தை நடத்தினார். அவர்மேல் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு போடப் பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகக் கோவில்கள் பக்கம் பார்வையை அவர் திருப்பியபோது, நீங்க டிஃப்ரெண்ட்டா ரியாக்ட் பண்ணீங்க. இன்னும் அதே கோஷத்தை அவர்கள் தொடர்கிறார்களே?
ஜக்கி வாசுதேவை ஒரு நல்ல நபராகக் கருதவில்லை. அவர் ஒரு பிஸ்னஸ்மேன். சிவராத்திரிக்கு 5 ஆயிரம், 50 ஆயிரம் என டிக்கெட் விற்கிறார். அங்கு போய் என்ட்ரி போட்டால் 80 சி சர்டிஃபிகேட்டுக்கு எழுதிக் கொடுக்கிறார். அவர், இறைவன் பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் நபர். அவரை விட சிறந்த நபர்கள், எந்தத் தவறான லாப நோக்கமும் இல்லாத நபர்கள் சொல்வார்கள் என்றால் அவர்களிடம் கேட்போம், "எப்படி மாற்றுவது? இதைவிட சிறப்பாக என்னவெல்லாம் செய்யலாம்?' என்று. அவர்கள் பரிந்துரைகளை நானே முதல் ஆளாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபுவிடம் கொடுப்பேன். ஜக்கியின் நோக்கம் சரியில்லை. அவர்களுடன் என்றும் ஒரு ஒப்பந்தத்துக்கு வர முடியாது. ஜக்கி வாசுதேவும், இந்துத்துவா ஆட்களும் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை.
அதே நேரத்தில் அரசாங்க நிர்வாகத்தில் உள்ளதை இன்னின்ன வகையில் சீரமைக்கலாம், இதையெல்லாம் திருத்தலாம் என நினைத்தீர் கள் என்றால் எழுதிக் கொடுங்கள், நானே முதல் ஆளாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுத்து பரிந்துரை செய்து கொடுக்கிறேன். நல்ல எண்ணத்தோடு வர்றவங்களிடம் எப்படியாவது ஒரு முடிவுக்கு வந்திடலாம். தவறான எண்ணங்களுடன் வரு பவர்களிடம் எந்த ஒப்புதலுக்கும் வரமுடியாது.
அமைச்சர் சேகர்பாபு, "ஜக்கிவாசுதேவ் மீது பல்வேறு புகார்கள் இருக்கிறது. அது சம்மந்தமாக ஒரு விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டு, கருத்துருக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளாரே?
நிறைய குற்றச்சாட்டுக்கள் இருப்பது உண்மை. தனி நபர் புகார் அல்ல, மத்திய தணிக்கைக் குழு அறிக்கையான சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டில் உள்ளது. அதில் இருப்பதோடு அல்ல பல சமயங்களில் பொது விவாதத்திலும் வந்திருக்கிறது. அதனால் "அமைச்சர் ஆய்வு செய் வோம்' என்று சொல்கிறார்.
அந்த சி.ஏ.ஜி. ரிப்போர்ட் பப்ளிக் டாக்குமெண்ட்டாக ஆகிவிட்டது. என்ன தான் இருக்கிறது அதில்?
வனத்துறை பாதுகாப்பு விதிமுறை களை மீறி பல பத்தாயிரம் சதுர அடி கட்டப் பட்டிருக்கிறது. எங்கு கட்டக்கூடாதோ அங்கு கட்டப்பட்டிருக்கிறது. தணிக்கை அறிக்கையில் இருப்பது உண்மை. தணிக்கை அறிக்கையில் ஏறிவிட்டது என்றால் திருத்த முடியாது.
ஜக்கி வாசுதேவுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது. மோடி, அமித்ஷா போன்றவர்கள் அவருடன் போனில் பேசுவார்கள். இந்த செல்வாக்கை பயன்படுத்தி அறிக்கையில் ஏதாவது பண்ணமுடியுமா?
அறிக்கை வந்துவிட்டது. அறிக்கை வெளிவந்த பிறகு டெல்லிக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. அறிக்கையில் வருவதற்கு கையெழுத்து போட வேண்டியது டெல்லி. தமிழ்நாட்டின் பொதுக்கணக்குக் குழுவும், சட்டமன்றமும் மட்டுமே தவறான காரணத்துக்காக அறிக்கையில் இருக்கிறது என அகற்றலாம் அல்லது நடவடிக்கை எடுத்தே ஆகணும் என்று சொல்லலாம்.
ஜக்கி வாசுதேவ் போல நிறையபேர் வனங்களை அபகரித்துள்ளனர். இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை வருமா?
யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எங்கள் முதலமைச்சர் தெளிவாகக் கூறியிருக்கிறார். "செய்ய வேண்டி யதைச் செய், செய்யக் கூடாததை செய்யாதே'. இரண்டு பேர் ஒரே தவறு செய்திருக்கிறபோது ஒருவரை விட்டுவிட்டு இன்னொருவரை தண்டிப்பது நியாயமாகாது. அது யாராக இருந்தாலும் சரி. ஜக்கிவாசுதேவாக இருந்தாலும் சரி. யாரெல் லாம் தவறு செய்திருக் கிறார்களோ அவர்களெல் லாம் தண்டிக்கப்பட வேண்டும்.
கோவில்களை பக்தர்கள்தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என்கிற கோஷத்தை ஜக்கியைப் போன்றே பலரும் எழுப்பி வரு கிறார்களே...
கோவில்கள் மன்னர்களாலும் பேரரசர்களாலும் கட்டப்பட்டவை. அவை யாருக்குச் சொந்தம்? அதை பக்தர்களிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது சரியா? தவறா? என்பதை மறந்துவிடுவோம். எந்த பக்தர்களிடம் நீங்கள் கோவில்களை கொடுப்பீர்கள். கோவில்களை கட்டிய மகாராஜாவின் நேரடி வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களிடம் கொடுக்க முடியுமா? அல்லது ஒரு நிர்வாகக் குழுவிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க முடியுமா? அந்த கோவிலை நிர்வாகிக்கும் குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது? அன்னை மீனாட்சிக்கு ஏகப்பட்ட பக்தர்கள் இருக்கிறார்கள். அதில் பலர் மதுரையில் இருக்கிறார்கள். சென்னையில் இருக்கிறார்கள். இவர்களில் யார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை நிர்வகிக்க தகுதிபெற்றவர்கள். கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிவிட்டால், அதில் ஒரு தனி அமைப்பாக மாற்ற வேண்டும். அதை ஒரு அறக்கட்டளையாக மாற்றமுடியுமா? அந்த அறக்கட்டளைக்கு சில சட்டதிட்டங்கள் வேண்டும். அந்த சட்ட திட்டங்களை யார் முறைப்படுத்துவார்கள்? கோவில் வருமானத்தை யார் தணிக்கை செய்வார்கள்?
கோவிலை நிர்வாகிக்க ஒரு குழுவை அமைத்தால் அவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப் படுவார்கள். உயிரோடு இருக்கும்வரை அவர்கள் நிரந்தரமாக கோவில் நிர்வாகிகளாக இருப் பார்களா? ஒரு கோவிலை நிர்வாகிக்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் என ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது. ஆகவே கோவில் என்பது அரசு சொத்தாக அறநிலையத்துறை யின் கீழ் நீடிப்பதுதான் அந்த கோவிலை பாதுகாக்கும். அறநிலையத்துறையில் இருந்து கோவிலை நீக்கிவிட்டால் இன்று நடப்பதை விட அதிகமான தவறுகள் கோவில் நிர்வாகத் தில் நடக்கும்.
தொகுப்பு: வே.ராஜவேல்