திட்டக்குடி நகராட்சி தலைவர் பதவி, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலினத் தவருக்கு ஒதுக்கப் பட்டது. அதன் அடிப் படையில் வெண்ணிலா கோதண்டம் என்பவர் பெரும்பான்மை கவுன் சிலர்கள் ஆதரவோடு தலைவராகவும், துணைத் தலைவராக பரமகுருவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெண்ணிலா தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக கவுன்சிலர்களுக்கும், அதிகாரி களுக்கும், தலைவிக்குமிடையே முட்டல் மோதல் போக்குகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.
இந்நிலையில் ஏற்கனவே மூன்று முறை வெண்ணிலாவை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தனர். தகவலறிந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் தலையிட்டு, வெண்ணிலாவின் பதவியைக் காப்பாற்றினார்.
மேலும், இந்த நகராட்சிக்கு ஆணையராக வந்த பலரும் உட னுக்குடன் பணி மாறுதல் பெற்று சென்றனர். இத னால் திட்டப் பணிகளில் அவ்வப் போது சுணக்கம் ஏற்பட்டது. தற்போது ஆணையராக முரளி தரன், மேலாளராக பார்த்திபன் ஆகியோர் உள்ளனர். பட்டியலினப் பெண் என்பதால் அதிகாரிகள், அலுவலர்கள், கவுன்சிலர்கள் தன்னை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வெண்ணிலா தெரிவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்த வெண்ணிலா, 3 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரே போராட்டத்தில் இறங்கியதால் பதறிப்போன லோக்கல் தி.மு.க.வினர், வெண்ணிலாவிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள். அப்படியும் போராட்டத்தை கைவிடவில்லை.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் அமைச்சர் கணேசனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் செல்பேசி மூலம் வெண்ணிலாவிடம் பேச முயன்றபோது வெண்ணிலா மறுத்துவிட்டாராம். பின்னர், மண்டல இயக்குனர் லட்சுமி, வெண்ணிலாவை தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரணை செய்வதாகக் கூறியபின்னரே போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
இவரது போராட்டம் குறித்து கவுன் சிலர்களிடம் விசாரித்ததில், "இவரது பயன்பாட்டுக்கு அரசாங்கம் கார் வழங்கியுள்ளது. அதனை சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தக் கூடாதென்பது விதி. காரை ஓட்டுவதற்கு தற்காலிக ஓட்டுனராக இளையராஜா என்பவரை தலைவி தரப்பில் நியமித்துள்ளனர். அரசு வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்ற அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவினால் கோபமடைந்த இளையராஜா, மேனேஜர் பார்த்திபனை கெட்ட வார்த்தைகளால் திட்டி வாட்ஸ்ஆப் அனுப்ப, இளையராஜா மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதையடுத்து, இளையராஜாவுக்கு பதில் வேறு ஓட்டுநரை நியமித்துக்கொள்ளுமாறு வெண்ணிலாவுக்கு வாய்மொழியாகத் தெரி வித்துள்ளனர். எனினும், இளையராஜாவை கார் ஓட்டுநராக வைத்து, கரூரில் தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு சென்றுள்ளார். இதில், கார் சாவியை எடுத்துக்கொடுத்த பதிவர் சிவசக்திக்கு மெமோ தரப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தான் தலைவி வெண்ணிலா தர்ணாவில் ஈடுபட்டி ருக்கிறார். அப்போது, பட்டியலினப்பெண் என்பதால் தன்னை பணிசெய்ய விடாமல் நகராட்சி அதிகாரிகள் நெருக்கடி தருவதாகவும், வாகனத்தை பயன்படுத்தக்கூடாதென அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டிருப்பதாகவும், ஓட்டுநரையும் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு ஒத்துழைப்பு தராததால்தான் தனக்கு நெருக்கடி தருவதாகக் கூறியுள்ளார்'' என்றனர்.
மேலும், "நகராட்சியில் பணிகள் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் பார்ப்பது குறித்து கவுன்சிலர்கள் பலமுறை எதிர்த்தபோதும் பட்டியலினப்பெண் என்பதால் எதிர்ப்பதாகக் குற்றம்சாட்டினார். அதிகாரிகளிடமும் இதேபோல் குற்றம்சாட்டுகிறார். உண்மையில் அவருக்கான மரியாதையை கவுன்சிலர்களும் அதிகாரிகளும் வழங்குகிறார்கள். எனவே இவர் தலைவர் பதவியில் தொடரக்கூடாதென முடிவெடுத்துள்ளோம். தற்போது தி.மு.க., அ.தி.மு.க. உட்பட மொத்தமுள்ள 23 கவுன்சிலர்களில் 18 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிகாரி யிடம் மனு அளித்துள்ளோம்'' என்கிறார்கள். இதுகுறித்து நகர்மன்றத் தலைவி தரப்பில் கேட்டால், இரண்டு நாட்களில் விளக்கம் அளிக்கிறோம் எனக்கூறி முடித்துக் கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரமன்றத் தலைவியான உமாமகேஸ்வரியின் செயல்பாடுகளில் அதிருப்தி காரணமாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, 30 பேரில் 28 பேர் ஆதரிக்க, அவரது பதவி பறிபோனது. அதையடுத்து, தி.மு.க.வைச் சேர்ந்த கௌசல்யா நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோன்று திட்டக்குடி வெண்ணிலாவின் பதவியும் பறிபோகுமென்று எதிர்பார்க்கிறார்கள்.
-எஸ்.பி.எஸ்.