நிலச்சுவான்தார்கள் என்கிற பண்ணையார்கள் விவசாய மக்களை அடிமையாக நடத்தியதோடு, உழைப்பைச் சுரண்டியதால், மேற்குவங்கம் டார்ஜிலிங் சிலிகுரி பகுதியில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் 1967-ல் பண்ணையார்களுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. சாரு மஜும்தார், கனு சன்யால், முஜிபுர் ரகுமான் தலைமையில், உழுபவருக்கே நிலம் சொந்தம் என்கிற முழக்கத்தோடு நடந்த போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறி வெற்றிபெற்றது. 

Advertisment

மேற்குவங்கத்தில் தொடங்கிய இந்த புரட்சி இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியது. அதனால் இவர்களை நக்சலைட் என அழைத்தனர். 1969-ல் சி.பி.ஐ. (எம்.எல்.) கட்சியைத் தொடங்கினார் சாரு. சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களில் கனிமவளங்கள் அதிகம். இதனை பெருநிறுவனங்களுக்கு தருவதற்காக அங்கு வாழும் பழங்குடியின மக்களை வாழ்விடத்திலிருந்து துரத்தியது அரசாங்கம். இதனை எதிர்த்து குரல்கொடுக்கத் துவங்கியவர்களை யும் நக்சலைட் எனச் சொல்லி காவல்துறை சித்ரவதை செய்தது. இதனால் பழங்குடியின மக்கள் நக்சலைட் அமைப்பினரை நம்பினர். தங்களையும் அதில் இணைத்துக்கொண்டு ஆயுதங்களைத் தூக்கினர். இதனால் இவ்வமைப்பின் பலம் அதிகரித்தது.

Advertisment

வடஇந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டிலும் எம்.எல். மூவ்மெண்ட் பரவியது. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நக்சலைட் மையமாக இருந்தது. அன்றைய எம்.ஜி.ஆர். அரசாங்கம் அவர்களை மூர்க்கத்தனமாக வேட்டையாடியது. 

மலைகள், காடுகளிலிருந்து கனிம வளத்துக்காக பழங்குடியின மக்களை பெருநிறுவனங்கள் விரட்டும்போது மக்கள் போராட்டம் வெடித்தது. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அரசப் படைகள் வந்தன. மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் நக்சலைட்களுக்கு எதிராக பண்ணையார்களே கூலிப்படைகளை உருவாக்கினர். பீகாரில் ரன்வீர்சேனா என்கிற அமைப்பை நிலச்சுவான்தார்கள் உருவாக்கினர். இவர்களுக்கு அரசாங்கமே ஆயுதங்களைத் தந்தது. சத்தீஸ்கரில் கோண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த மகேந்திரா கர்மாவை தலைவராகக் கொண்டு சல்வா ஜுடும் என்னும் அமைப்பும் உருவாக்கப்பட்டது. 

Advertisment

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ் வொரு பெயரில் எம்.எல். இயங்கிவந்தது. சில அமைப்புகள் அடுத்தடுத்த மாநிலங்களிலும் இயங்கிவந்தன. தனித்தனியாக இயங்குவதற்குப் பதில் ஒன்றாக இயங்குவோம் என மகாராஷ் டிராவில் இயங்கிய மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் இயக்கம், மக்கள் யுத்தக்குழு, பீகாரில் செல்வாக்கோடு இருந்த இந்திய மவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் இணைந்து சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் 2004, அக்டோபர் மாதத்திலிருந்து இயங்கத்தொடங்கின. இவை ஆபத்தான அமைப்புகள் என இந்திய அரசு தடைசெய்தது. தடைசெய்யப்பட்ட இந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டில் சுமார் 200 மாவட்டங்கள் அதாவது 80 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு இருக்கிறது எனச்சொல்லி அப்பகுதிகளை ரெட் காரிடர் என அறிவித்தது ஒன்றிய அரசு.

இன்று? 

கடந்த நவம்பர் 22-ஆம் தேதி மாவோயிஸ்ட் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மண்டல கமிட்டியின் மண்டல செய்தித் தொடர்பாளர் ஆனந்த், மூன்று மாநில முதல்வர்களுக்கு அனுப்பிய செய்தியில், வரும் 2026 பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் ஆயுதங்களைக் கைவிடுவதாகவும், அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம், அதுவரை பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நிறுத்திவையுங்கள், நாங்களும் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மாவோயிஸ்ட்களின் இந்த கோரிக்கை மத்திய -மாநில ஆட்சி யாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

movist1

மாவோயிஸ்ட் அமைப்பின் இந்நிலைப்பாடு குறித்து மாவோயிஸ்ட் அமைப்பில் நிர்வாகியாக இருந்து பல நடவடிக்கையில் ஈடுபட்டவரும் பொடா சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் இருந்த பின் இயக்கத்தை விட்டு வெளியேறி அரசியல் களத்தில் இயங்குபவருமான ஒருவரிடம் பேசினோம்... “

"உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, மவோயிஸ்ட்களை ஒழிக்க "ஆபரேஷன் கிரீன் ஹண்ட்' (பச்சை வேட்டை) என்கிற நீண்ட கால திட்டத்தை உருவாக்கினார்கள். இதில் மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ -திபெத் எல்லை பாதுகாப்புப் படை, சாஸ்திர சீமாபால் படையைச் சேர்ந்த 1.2 லட்சம் பேரை களமிறக்கினார்கள். இவர்கள் ஆண்டுக்கு 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மாவோயிஸ்ட்களிடமிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். மீட்கப்படும் பகுதிகளில் புதிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடங்க வைப்பது, வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது, பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவது, அதிகபட்சம் 10 ஆண்டுகளில் மாவோயிஸ்ட்களை அழிக்கவேண்டும் என முடிவுசெய்தார்கள். 

இதற்காக எங்கள் அமைப்பில் இருந்தவர்களை ஐடியாலஜிகல் லீடர்ஸ், ஆர்கனைசேசன் லீடர்ஸ், ஃபீல்ட் லீடர்ஸ், லோக்கல் லீடர்ஸ் என நான்கு பிரிவாக பிரிச்சாங்க. அதேபோல் எங்கள் அமைப்பை முடக்க ட்ரிபிள் லேயர் ப்ளான் ஒர்க்கவுட் செய்தாங்க. முதலில் மாவோயிஸ்ட்கள் உருவாகும் தன்மையுள்ள பகுதிகளில் டெவலப்மெண்ட்களை உருவாக்குவது, லெட்டர்பேட் அமைப்புகளை உருவாக்கி இளைஞர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் ஆதரவு மாவோயிஸ்ட்களுக்கு கிடைக்காமல் செய்தார்கள். ஃபேஸ் ஏரியாக்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா பகுதிகளில் அமைப்பு மேலும் பலம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள். 

அதன்பின் மாவோயிஸ்ட் -அரசு நிர்வாகம் என சிக்கலான ஏரியாக்களில் கவனம்செலுத்தி அமைப்பின் நடவடிக்கைகளைக் குறைத்தார்கள். வார் ஜோன்களிலிருந்து ஆர்கனைசேசன் லீடர்ஸை வெளியே கொண்டுவந்தாங்க. அதுக்கு பிறகு ஃபீல்ட் லீடர்ஸை காலிசெய்ய ஆரம்பிச்சாங்க. களத்தில் உள்ளவர்களுக்கு ஆர்டர் போடும் லீடர்களை இல்லாமல் செய்து கம்யூனிகேஷன்  கேப் உருவாக்குனாங்க. அதோடு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு        வங்கம், பீகார் மாநிலங்களில் க்யூ ப்ராஞ்ச், நக்சல் தடுப்புப் படை, தீவிரவாத தடுப்புப் படைகள் ரெய்டுகள் செய்தன. இதில் விக்ரம்கவுடா என்கிற மாவோயிஸ்ட் தலைவர் கர்நாடகா உடுப்பி பீட்டோபைலு என்கிற மலை கிராமத்தில் வைத்து 2024 நவம்பரில் என்கவுன்டர் செய்யப்பட்டார். 2025 ஜனவரியில் மத்திய குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரரெட்டி, சலபதி என்கவுன்டர் செய்யப்பட்டதால் மற்றவர்கள் பயந்துபோய் பாதுகாப்பான பகுதின்னு இயக்கத்தின் இதயப்பகுதியான ஜார்கண்ட் நோக்கி             நகர்ந்தாங்க. மற்ற பகுதிகளில் நெருக்கடி அதிகமானபின் சத்தீஸ்கர், ஜார்கண்ட் பகுதிக்குதான் வருவார்கள் என அப்போதே முடிவுசெய்தார்கள். அதனால் அந்தப் பகுதியை கடைசியாக கைவைக்கலாம் என முடிவு செய்திருந்தார்கள், அதன்படியே இப்போது      அங்கே கைவைத்துள்ளார்கள். அதாவது, ஈழத்தில் எப்படி ஒவ்வொரு பகுதியாக பிடித்துக்         கொண்டே வந்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் வைத்து அழித்தார்களோ அதே பார்முலாதான் மாவோயிஸ்ட் அழிப்பு விவகாரத்திலும் செய்கிறார்கள்.

இவ்வமைப்பினர் ஆயுதப் பிரிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தனர். அமைப்பின் மாணவர் பிரிவு, இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவுகள்               மக்கள் மத்தியில் இயங்கவில்லை. ஆயுத போராட்டம் மட்டும் வெற்றியைத் தராது, அரசியல் ஆதரவு வட்டம் உருவாக வேண்டும். பழங்குடியின மக்களுக்கு அரசுகள் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராததால் நம்மை ஆதரிக்கிறார்கள், நம் இயக்கத்தில் இணைகிறார்கள். சமதளப் பகுதியில், நகர்மயமாக்கல், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கி வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதால் நமக்கு ஆதரவில்லை. அதனால் நமது செயல்திட்டங்களை மாற்றி மக்களிடம் செல்லவேண்டும் என மையக்குழு கூட்டத்தில் சொன்னதை அப்போது ஏற்காமல் ஒதுக்கினார்கள். நாங்கள் தமிழ்நாட்டில் சில அரசியல் போராட்டங்களை முன்னெடுத்த போது ஷோகேஸ் நோட்டீஸ் தந்து விசாரித் தார்கள். என்னைப்போன்று போராட்ட வடிவத்தை மாற்றவேண்டும் எனச் சொன்னவர் களை ஒதுக்கினார்கள். ஆயுதங்கள் மட்டுமே விடுதலை பெற்றுத்தரும் என நம்பினார்கள். ஆயுதப் போராட்டம் இந்தியாவில் வெற்றி பெறாது எனத் தெரிந்தபின், இப்போது சரண்டராகிறார்கள்''’என்றார். 

"2026 மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என கடந்தாண்டு அறிவித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதன்பின் பஸ்தர் பட்டாலியன், தண்டேஷ்வரி படை, கோப்ரா பட்டாலியன் இணைந்து "ஆபரேஷன் காகர்' (பிளாக் பாரஸ்ட்) என்கிற பெயரில் தீவிரமானது. இயக்கத்தின் இதயம்,       மூளை என அழைக்கப்படும் பகுதியில் தாக்குதல் நடத்துகிறது. 

இதில் ஆந்திராவில் மக்கள் யுத்தக்குழு தொடங்கிய காலத்திலிருந்து சிறப்பு கொரில்லா படையின் தலைவராக, பயிற்சியாளராக இருந்தவர் நம்பல்லா கேசவராவ் என்கிற பசவராஜு. பின்னர் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவர் கடந்த மே மாதம் சத்தீஸ்கர் நாராயண்பூரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டது பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. இவரின் மரணத்துக்குப் பின்னர் இயக்கம் தடுமாற்றத்திலுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் மல்லோஜுலா வேணுகோபால் ராவ், கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா அரசிடம் சரணடைந்தார். இப்படி சிசி மெம்பர்கள் படுகொலையாவது, வெளி யேறுவது அமைப்பை சிதைத்துள்ளது. அதனாலயே ஆயுதங்களை கை விடுகிறோம் என அறிவித்துள்ளது' என்கிறார்கள்.

புரட்சி குழுக்களின் 60 ஆண்டு கால போராட்டம் முடிவை எட்டியுள்ளது. இது மீண்டும் புதிய வடிவில் எழுமா என்பது காலத்தின் கைகளிலும், அரசின் செயல்பாடுகளிலுமே உள்ளது.