"ஊழலை ஒழிப்பேன்' என சொல்லிவரும் விஜய்யும், ஊழல்களுக்காக தண்டிக்கப்பட்ட வருமான செங்கோட்டையனும் கடந்த வாரம் கைகோர்த்திருக்கிறார்கள். இவர்களின் சேர்க்கைதான் தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.
விஜய்யின் த.வெ.க.வில் இணைந்ததையடுத்து கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் ஆகிய பதவிகள் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக சில அசைன்மெண்டுகளையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறார் விஜய்.
இதுகுறித்து த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்த போது, "விஜய்க்கு அடுத்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக் கியசாமி, அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார், விஷ்ணு ரெட்டி (விஜய்யின் நெருங்கிய நண்பர்) ஆகியோர் இருக் கின்றனர். இந்த ஆறு பேர்தான் செங்கோட்டையனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள். ஆறு முறை சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பில் சில நிபந்தனைகளை விதித்தார் செங்கோட்டையன்.
குறிப்பாக, கொங்கு மண்டலத்திலுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஒட்டுமொத்த பொறுப்பையும் என்னிடம் தரவேண்டும். அதாவது, கொங்கு மண்டல அமைப்புச் செயலாளராக நான் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலின்போது கொங்கு மண்டலத்தின் வேட்பாளர்கள் தேர்வில் என் யோசனையை ஏற்க வேண்டும். இதில் எனக்கு சுதந்திரம் இருந்தால், தமிழகம் முழுவதுமான அரசியல் வியூகங்களை கட்சியின் வளர்ச்சிக்காக நான் திட்டமிட முடியும். இதற்கான ஒப்புதலை விஜய் என்னிடம் தந்தால் த.வெ.க.வில் இணைவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை'' எனச் சொல்லியிருக்கிறார்.
அப்போது, "இதில் ஒன்றும் பிரச்சனை இருக்காது. ஆனால், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பை கொடுக்கும் நிலையில், கொங்கு மண்டலத்திலுள்ள தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் என்னவிதமான அரசியலை நீங்கள் முன்னெடுக்க முடியும்?' என பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு, "நான் இணைந்தால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் செல்வாக்கை உடைத்துவிட முடியும். என்னைப் பின்பற்றி பலபேர் த.வெ.க.விற்கு வருவார்கள். சமூகரீதியான (கொங்கு வேளாள கவுண்டர்) ஆதரவையும் த.வெ.க.விற்குத் திருப்ப முடியும்'' என்றிருக்கிறார் செங்கோட்டையன்.
இதனையடுத்து, விஜய்யுடன் தொலைபேசி வழியாக செங்கோட்டையனை பேசவைத்தனர். அவரின் எதிர்பார்ப்புக்கு விஜய் ஓ.கே.சொல்ல, த.வெ.க.வில் இணைய சம்மதித்தார். இணைந்ததும் அவர் எதிர்பார்த்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், விஜய்யுடன் ஒன் டூ ஒன் பேசும் வாய்ப்பும் அவருக்கு தரப்பட்டுள்ளது. அந்த வகையில், தினமும் ஒரு முறையாவது விஜய்யுடன் பேசுகிறார் செங்கோட்டையன். அப்படி பேசும்போது, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைமையால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஆளுமை மிக்க முக்கியஸ்தர்களை த.வெ.க.விற்குள் கொண்டுவரவேண்டிய அசைன்மெண்டை செங்ஸ்சிடம் கொடுத்துள்ளார் விஜய்.
அந்த முயற்சியில் சீக்ரெட்டாக தீவிரம் காட்டிவருகிறார் செங்கோட்டையன். இப்போது வரை இந்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆனால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் பேசியுள்ளார். அதற்கு பலன் கிடைத்துள்ளது. அதிகாரிகளும் சில எதிர்பார்ப்பு களை முன்வைத்துள்ளனர். அதற்கு விஜய்யிடம் அனுமதி கிடைத்ததும் த.வெ.க.வில் அதிகாரிகள் இணைவது நடக்கும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அதி காரிகள் சிலர் செங்கோட்டையனின் பின்புலமாக இருந்து இயங்குவதால் அவர்களின் மூலமாக இந்த முயற்சியை மேற்கொண்டுள் ளார்” என்று விரிவாக சுட்டிக் காட்டுகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/02/vijay1-2025-12-02-10-56-41.jpg)
இது ஒருபுறமிருக்க, செங்கோட்டையன் இணைந்ததில் விஜய்க்கு மகிழ்ச்சி என்றாலும் திடீரென அவ ரிடம் அதிருப்தி உருவாகியிருப்பதாக ஒரு தகவல் த.வெ.க.வில் உலாவருகிறது. இது குறித்து விசாரித்தபோது, "செங்கோட்டையன் இணையும்போதே, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வின் பொறுப்புகளிலுள்ள பிரமுகர்கள் பலர், அ.தி.மு.க. பதவியை ராஜினாமா செய்து விட்டு செங்கோட்டையன் பின்னால் அணிவகுத்து வருவார்கள் என விஜய்க்கு சொல் லப்பட்டிருக்கிறது. ஆனால், செங்கோட்டையன் உட்பட அ.தி.மு.க.விலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட சிலர் (முன்னாள் எம்.பி. சத்யபாமா உட்பட) மட்டும்தான் நம் கட்சிக்கு வந்துள்ளனர்.
அ.தி.மு.க. கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு யாரும் வரவில்லையே? என்னிடம் சொல்லப்பட்டதும், நான் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டதும் நடக்கவில்லையே! இனியாவது நடக்குமா? என்று தனது அதிருப்தியை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் விஜய். செங்கோட்டையனை நம்பி அ.தி.மு.க. முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் யாரும் ராஜினாமா செய்துவிட்டு வருவதற்கு தயாராக இல்லை என்கிற நிலைதான் இப்போதைக்கு இருப்பதாக விஜய்யிடம் சொல்லப்பட்டுள்ளது. இதையறிந்து மேலும் அப்-செட்டாகியிருக்கிறார் விஜய்''’ என்கிறார்கள் த.வெ.க.வின் மாநில நிர்வாகிகள்.
கொங்கு மண்டலத்திலே அ.தி.மு.க.வை உடைக்க செங்கோட்டையனால் முடியாதபோது, தி.மு.க.வில் எப்படி முடியும்? தி.மு.க.வில் சின்ன சிராய்ப்புகளைக்கூட ஏற்படுத்த முடியாது. அமைச்சர்கள் முத்துச்சாமி, சக்கரபாணி, சாமிநாதன் மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோரால் கொங்கு மண்டலம் கட்டமைக்கப்பட்டிருப்பதால், இவர்களைக் கடந்து தி.மு.க.வில் குறைந்தபட்ச சலசலப்புகளைக் கூட செங்கோட்டையனால் ஏற்படுத்த முடியாது என்பதே கள நிலவரமாக இருக்கிறது.
இந்த நிலையில், ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஈரோடு வந்திருந்தார் எம்.ஜி.ஆர். விசுவாசியான முன்னாள் அ.தி. மு.க.காரரும், தற்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பவருமான சீனியர் லீடர் திருநாவுக்கரசர். அதே விழாவுக்கு செங்கோட்டையனும் வந்திருந்தார். இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டனர். த.வெ.க.விற்கு வருமாறு திருவை அழைத்துள்ளார் செங்ஸ். ஆனால், திருநாவுக்கரசர் சம்மதிக்கவில்லை.
அதேபோல, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அரசியல் சாணக்கியர் பண்ருட்டி ராமச்சந்திரனிடமும் பேசியுள்ளனர். உங்கள் கட்சிக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் கேளுங்கள்; சொல்கிறேன். கட்சியில் இணைவதற்கு வாய்ப்பில்லை எனச்சொல்லி இவரும் மறுத்துவிட்டார். இப்படி அ.தி.மு.க.வின் முன்னாள்களும் மறுப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்யன் போல முயற்சியை கைவிடவில்லை செங்கோட்டையன்.
செங்ஸிடம் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் குறித்து அவரது ஆதரவாளர்களிடம் நாம் பேசியபோது, "ஜனவரி முதல்வாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க. வுக்கும் கொடுக்கப்போகிறார். அது விஜய்க்கு பொங்கல் பரிசாக இருக்கும். கொங்கு மண்டலத்தில் செங்கோட்டை யனின் சீக்ரெட் பாலிடிக்ஸ் அப்போது புரியும். பொறுத்திருந்து பாருங்கள்''’ என்கிறார்கள்.
இதற்கிடையே, த.வெ.க.வில் செங்கோட்டையன் சேர்ந்தது பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா விவாதித்ததாக அ.தி.மு.க.வில் பரவி வருகிறது. இது குறித்து விசாரித்தபோது, ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை உருவாக்குவதில் எடப்பாடி பிடிவாதமாக இருந்து வருவதால் அவருக்கு நெருக்கடியைக் கொடுக்க செங்கோட்டையனை பயன்படுத்திக் கொண்டது பா.ஜ.க. ஆனால், அ.தி.மு.க.விலிருந்து செங்கோட்டையனை எடப்பாடி நீக்கியபோது, செங்ஸ்சிற்காக கொஞ்சம் கூட அமித்ஷாவோ பா.ஜ.க.வோ கவலைப்படவில்லை.
இதனால் தனக்கு ஏற்பட்ட அதிருப்தியை பா.ஜ.க. தலை மைக்கு பாஸ் செய்தார் செங்கோட்டையன். அப்போதும் அவருக்காக கவலைப்படவில்லை பா.ஜ.க. இந்த நிலையில் தான், த.வெ.க. வில் கடந்த வாரம் இணைந்தார் செங்கோட் டையன். இதனை உற்றுக்கவனித்த அமித்ஷா, கடந்த 28-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, அ.தி.மு.க.வை பொறுத்தவரை செங்கோட்டையன் என்பவர் தனி நபர். அவருகென்று எப்போதும் மக்கள் செல்வாக்கு இருந்ததில்லை. அதனால்தான், விஜய் கட்சிக்கு அவர் செல்வதாக முடிவெடுத்ததையறிந்த தி.மு.க., அவரை தங்கள் பக்கம் இழுக்க பெரிய அளவில் முயற்சிக்கவில்லை. ஜஸ்ட் லைக் தட் எனப் பேசிப் பார்த்தார்கள்... அவ்வளவுதான். ஏன்னா, செங்கோட்டையனுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பது ஸ்டாலினுக்குத் தெரியும்.
"என்னை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும்தான் அவரின் (செங்ஸ்) நோக்கம். தி.மு.க.வுக்குள் நுழைந்து என்னை வீழ்த்த திட்டமிட்டார். அதற்கு தி.மு.க. ஒத்துழைக்கவில்லை. அதனால், விஜய் கட்சிக்குப் போயிருக்கிறார். செங்கோட் டையன் விசயத்தில் அந்த தம்பி (விஜய்) ஏமாந்து விட்டார்னுதான் நான் நினைக்கிறேன். செங்கோட்டையனால் தனக்கோ, தனது கட்சிக்கோ அரசியல் ரீதியான லாபமில்லை என்பதை விஜய் விரைவில் புரிந்துகொள்வார்' என விவரித்திருக்கிறார் எடப்பாடி.
அப்போது, செங்கோட்டையனை மையப்படுத்தி கொங்கு மண்டல அரசியல் குறித்த ஒரு ரிப்போர்ட் எனக்கு வேண்டும் என அமித்ஷா கேட்க, "கோபி தொகுதியில் 30-ந்தேதி பிரச்சார பொதுக்கூட்டம் வைத்திருக்கிறேன். அதனை முடித்துவிட்டு, ஒரு ரிப்போர்ட் அனுப்புகிறேன். அதில் பல உண்மைகள் புரியும் என பதில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி''’என்கிறார்கள் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள்.
இந்த நிலையில், செங்கோட்டையனின் கோபி தொகுதியில் 30-ஆம் தேதி மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, செங்சிற்கு எதிராக வாள் சுழற்றியிருக்கிறார்.
ஆக... "செங்ஸின் வருகை த.வெ.க.வின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? விஜய்க்கு பலமா? பலவீனமா? என்பது விரைவில் தெரியும்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/vijay-2025-12-02-10-56-19.jpg)