புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆண்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் 61 வயது பன்னீர்செல்வம். பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவர் கோவையை சேர்ந்த ராயல் கேர் மருத்துவமனை விரி வாக்கத்திற்காக அதன் தலைவர் டாக்டர் மாதேஸ்வரனிடம் ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி அதற்கு கமிசன் தொகையாக ரூ.2 கோடி பணமாகவும், ரூ.85 லட்சத்திற்கு காசோலையாகவும் மொத்தம் ரூ.2.85 கோடியை முன்பணமாக பெற்றுக் கொண்டு பல ஆவணங்களில் கையெழுத்து களையும் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாநகர துணை ஆணையர் (குற்றம்) பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டார்.
கடந்த மாதம் இறுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று சென்னை அடையாறில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது, அங்கிருந்த சிலர் போலீசாரை திசை திருப்பிய சில நிமிடங்களில் பன்னீர்செல்வம் தப்பிச் சென்றுவிட்டார். கடந்த ஜூலை 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆண்டிகுளத்தில் உள்ள வீடு மற்றும் மற்றொரு வீடு, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அலுவலகம், பண்ணை, பெட்ரோல் நிலையங்களில் தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் ஏராளமான நிரப் பப்படாத முத்திரைத்தாள்கள் மற்றும் புரோ நோட்டுகள், காசோலைகள், பல நபர்களுடன் பெற்ற ஒப்பந்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஆனால் ஒரு இரும்புப் பெட்டகம் திறக்க முடியாததால் பூட்டு தயாரித்த நிறுவனத்தின் உதவியை போலீசார் நாடினார்கள். அவர்களாலும் திறக்க முடியாததால், மும்பையிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்துள்ளனர். அதனால் வருவாய்த் துறையினர் முன்னி லையில் அறைகளை பூட்டி சீல் வைத்த போலீசார் சீல் வைக்கப்பட்ட அறைக்கு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் கோவை போலீசார் மற்றும் ஆலங்குடி போலிசார் 2 பேர் என 6 பேர் துப்பாக்கியுடன் கடந்த 6-ந் தேதியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 நாட்களாக பெட்டகம் திறக்கும் மும்பை குழுவினர் வரவில்லை.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு 14-ந் தேதி மோசடி மன்னன் பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருந்த புரோக்கர் செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த இரண்டு சொகுசு கார்கள், மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயருக்கு அகமதாபாத் ஆக்சிஸ் வங்கியில் பெறப்பட்ட தாக ரூ.49.85 கோடி மற்றும் ரூ.49.95 கோடிக் கான போலி வரைவோலையையும் கைப்பற்றி னார்கள்.
கைது செய்யப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகிய இருவரையும் கோவைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு, 21-ந் தேதி நீதிமன்ற காவலில் எடுத்து ஆலங்குடிக்கு அழைத்துவரப்பட்டனர். வீடுவரை வந்தவர், பெட்டகம் திறக்க சாவி இல்லை என்று சொன்னதால் கடுப்பான போலீசார் கவனிப்புடன் மீண்டும் அழைத்துச் சென்றனர்.
இந்த பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே கள்ளநோட்டு மாற்றிய வழக்குகள், கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பலரையும் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த வழக்குகள் ஆலங்குடி, புதுக்கோட்டை, நமணசமுத்திரம், சென்னை, ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி மாணிக்கம் என்பவரிடம் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டு, திருப்பிக் கேட்ட போது ரூ.5 லட்சத்திற்கு கள்ளநோட்டு கொடுத்து மோசடி செய்த வழக்கு என தமிழகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களை தனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்த பன்னீர் செல்வம், தனது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்துக்கொண்டே தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர். 2013-ல் இவருக்கு துணையாக செயல்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பிறகு பணிக்கு வந்துள்ளனர்.
தனது உயிர் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசன்ஸ் வாங்கி வைத்திருந்ததை நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது. சில நீதிமன்றங்களில் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டபோது புகார்தாரர் களுக்கு பணம் கொடுத்து சமாதானமாக செல்வதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கலும் செய்திருந்தார்.
இவரைப் போன்ற மோசடி நபர்கள் தங்களின் கெத்தைக் காட்டுவதற்காக, ஜெ.வுடன் இருந்த ஒருவரின் பணத்தை குறைந்த வட்டிக்கு கொடுப்பதாக கூறி ஏமாற்றி வருகிறார்கள்.
தொடக்க காலத்தில் கள்ள நோட்டு மாற்றும்போது இவர்களது ஆட்களே போலீஸ் போல வந்து நோட்டு மாற்ற வருபவர்களை பிடிப்பதால் பயத்திலேயே பலர் ஓடி இருக்கிறார்கள் என்றனர் விபரமறிந்த போலீசார்.
இரும்புப் பெட்டகம் திறக்கப்படும் போது கூடுதல் அதிர்ச்சிகள் வெளிப்படலாம்.