இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான போர் உச்சத்தை அடைந்துள்ளது. இஸ்ரேலைப் பொறுத்தவரை அதன் உளவு அமைப்பின் கட்டமைப்பு மிகவும் வலிமையானது. உளவு பார்ப்பது தொடர்பான மென்பொருட்கள் தயாரிப்பிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இஸ்ரேல் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் வாங்கியிருக்கின்றன. இதன்மூலம் யாருடைய அந்தரங்கத் தகவலையும் திரட்டவும், அவர்களுக்கே தெரியாமல் வேவு பார்க்கவும் இயலும். அதேபோல், எதிரி நாட்டுக்குள் ஊடுருவக்கூடிய திறன்வாய்ந்த உளவுப்பிரிவினரும் இஸ்ரேலுக்கு உண்டு. இஸ்ரேலின் ராணுவ அமைப்புக்கு இணையாக அதன் உளவுப்பிரிவான மொசாட்டின் செயல்பாடு இருக்கும்.
இவ்வளவு திறன்வாய்ந்த மொசாட் அமைப்பினுடைய பயிற்சி மையம், டெல் அவிவ் அருகிலுள்ள ஹெர்ஸ்லியாவில் இருக்கிறது. அந்த மையத்தின் மீது குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் அந்த மையம் தீப்பற்றி எரியும் காட்சி, இஸ்ரேலை மட்டுமின்றி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சென்று சந்திப்பதற்கு இணையான தாக்குதல் இது. இத்தாக்குதல் குறித்து ஈரானின் புரட்சிகர காவல் படை உறுதி செய்துள்ளது. இத்தாக்குதல் குறித்த வீடியோவுடன் ஈரானின் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. அச்செய்தியில் "இஸ்ரேலின் ராணுவ புலனாய்வு மையமான அமானையும், டெல் அவிவில் உள்ள பயங்கரவாத நடவடிக்கை திட்டமிடல் மையமான மொசாட்டையும் தாக்கினோம். அவை தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன'' என்று தீப்பிடித்தெரியும் கட்டடங்களோடு செய்தி வெளியிட்டது.
'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3' என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களின் மீது ஈரான் பலத்த குண்டுமழை பொழிந்தது. இத்தாக்குதல் குறித்து ஈரானின் காவல் படை மூத்த தளபதி மோசேன் ரெஸேய் கூறுகையில், "ஈரானின் ராணுவ பலத்தில் 30% அளவுக்கு தான் பயன்படுத்தியுள் ளோம். அதேபோல், ஈரானின் மொத்த திறனில் 5% மட்டுமே தற்போதைய போரில் பயன்படுத்தியிருக்கிறோம். தேவைக்கேற்ப முழுபலத்தையும் பயன்படுத்து வோம்'' என்று எச்சரித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலும் அதிகப்படுத்தியுள்ளது. மேற்கு ஈரானிலுள்ள ராணுவ இலக்குகள் மீது குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் விரிவான தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதல்களில் ஈரானிலுள்ள ஏவுகணை சேமிப்பு மற்றும் ஏவுதல் உள் கட்டமைப்புகள் தாக்கப்பட்டன என்றும், மேற்கு ஈரானில் தரையிலிருந்து வான் நோக்கி தாக்கும் ஏவுகணைகள் மற்றும் யு.ஏ.வி. சேமிப்பு தளங்கள் தாக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் வசமுள்ள மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிப்பதன்மூலம் தங்களுக்கு எதிரான அச் சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவர முடியுமென்றார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. மேலும், ஈரானின் உயரிய தலைவரான அயதுல்லா கமேனியை நவீனகால ஹிட்லரோடு ஒப்பிட்ட நெதன்யாகு, கமேனி கொல்லப்பட வேண்டு மென்றும், அதன்பின் போர் முடிவுக்கு வருமென்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் - இஸ்ரேல் போர்ப்பதற்ற சூழலில், பாதியிலேயே முடித்துக்கொண்டு மாநாட்டிலிருந்து வெளியேறினார். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ட்ரம்புக்கு பதிலடியாக நாட்டு மக்களிடம் வீடியோவில் பேசிய கமேனி, "ட்ரம்பின் அச்சுறுத்தும், அபத்தமான அறிக்கைகளை நிராகரிக்கிறேன். ஈரான் ஒருபோதும் அடிபணி யாது. இதில் அமெரிக்கா தலையிட்டால் ஈடுசெய்ய முடியாத சேதத்தை அமெரிக்காவும் சந்திக்க வேண்டியிருக்கும்'' என்று அமெரிக்காவுக்கும் சேர்த்தே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த போரில் ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமோ என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், பதிலுக்கு பாகிஸ்தான் மூலமாக அணு ஆயுதத்தை நாங்களும் பயன்படுத்துவோம் என்று அதிரடியாகக் கூறி இஸ்ரேலை மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்தையும் ஈரான் பதட்டத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்த போரில், இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா, செக் குடியரசு, ஸ்லோவாகியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிலுள்ள தங்கள் தூதரகங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடியுள்ளன.
இந்நிலையில், ஈரானில் வசித்துவரும் 4000க்கும் மேற்பட்ட இந்தியர்களில், முதற்கட்ட மாக 110 பேர், அர்மீனியா, தோகா வழியாக டெல்லி வந்தடைந்தனர். அடுத்தகட்டமாக ஈரானின் மஹான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் மூலமாக இந்திய மாணவர்களையும், ஆன்மிக யாத்திரை சென்றவர்களையும் அழைத்துவர இந்தியா ஏற்பாடு செய்தது. அதன்படி இரண்டாம் கட்டமாக 290 பேர் ஈரானின் டெஹ்ரானிலிருந்து பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். ஈரானிலிருந்து இந்தியா வுக்கு வரவிரும்பும் அனைத்து இந்தியர்களும் மீட்கப்படுவார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.