""ஹலோ தலைவரே, காவிரி உரிமைக்காகத் தமிழகத்தில் பொங்கி வழியும் உணர்வு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆழிப் பேரலையா உருவானதை கவனிச்சீங்களா?''’
""ஆமாம்ப்பா. அனைத்து தமிழுணர்வு அமைப்பினரும் ஐ.பி.எல்.லுக்கு எதிராக வரிந்து கட்டியதைப் போல், திரைப் பிரபலங்களும் கூட தங்கள் உணர்வுகளை அவரவர் பாணியில் வெளிப்படுத்தி இருக்காங்களே.''’’
""உண்மைதாங்க தலைவரே, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஐ.பி.எல்.லை நடத்தவிடமாட்டோம் என்றும், "சென்னையில் நடமாடும்போது கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல' என்றும் அதிரடியாவே எச்சரிச்சார். ஜனநாயக மக்கள் கட்சி தமீமுன் அன்சாரியோ, "கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்து, வீரர்களை நாங்கள் சிறைப் பிடிப்போம்'ன்னு ஹைவோல்ட் ஷாக் கொடுத்தார். நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ, "ஐ.பி.எல்.லை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்'ன்னு உணர்ச்சிக்குரல் எழுப்பினார். காவிரி உரிமை மீட்பு இயக்கத்தின் பெ.மணியரசன் "மைதானத்தில் நுழைவோம்'னு எச்சரிச்சாரு. இதற்கிடையே 7-ந் தேதி திரைப்பட இயக்குநர்களான பாரதிராஜா, தங்கர்பச்சான், அமீர், வி.சேகர் ஆகியோர், முதல்வர் எடப்பாடியையே நேரில் சந்திச்சி, "காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தத் தடை விதிக்கணும்'ன்னு கேட்டுக்கிட்டதோட, கூட்டுப் பேட்டி மூலமும், ஐ.பி.எல்.லுக்கு எதிரான தங்கள் கோபத்தைக் கொட்டினார்கள். நடிகர் ரஜினிகாந்த்தோ, "சி.எஸ்.கே. வீரர்கள், கருப்பு பேட்ச் குத்திக்கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தணும்'னும் வாய்ஸ் கொடுத்தார். கடைசி நிமிடம்வரை ஐ.பி.எல்.லுக்கு எதிரான முற்றுகை முயற்சிகள் சென்னையில் தீவிரமாகவே இருந்துச்சு.''
""எடப்பாடி அரசின் ஆக்ஷன் எப்படி?''
""வழக்கம் போல டெல்லிகிட்ட ஆலோசனை கேட்டுச்சு. டெல்லியோ, "ஐ.பி.எல். மேட்ச் நடந்தாகணும். யாராவது தடுக்க நினைச்சா கைது பண்ணி உள்ளே போடுங்க'ன்னு எடப்பாடி அரசை எச்சரிக்கவே, சேப்பாக்கத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு கடும் கெடுபிடி ஆரம்பமானது''.’
""தமிழகமே வலிமையாகப் போராடிக்கிட்டிருக்கும் நேரத்தில், மத்திய அரசு சைலண்ட்டா, இந்தித் திணிப்பு முயற்சியிலும் இறங்கியிருக்கே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் இருக்கும் வானொலி நிலைய நிகழ்ச்சிகளில், தமிழுக்கான நேரத்தைக் குறைச்சி, இந்தி நிகழ்ச்சிகளை அதிகரிச்சிருக்கு. ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்தியை ரத்து பண்ணிட்டு, அதுக்கு பதிலா சந்தோஷ் டூ சோல்ஜர்ஸ்’ என்ற இந்தி நிகழ்ச்சியை இப்ப ஒளிபரப்புது. இதையெல்லாம் கடுமையாகக் கண்டித்திருக்கும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "திடீர் திடீர் என்று மோடியின் இந்தி உரையை ஒலிபரப்பி, தமிழ் நிகழ்ச்சிகளை ஓரம் கட்டுகிறார்கள்' என்றும் சுட்டிக்காட்டி கண்டனத்தைத் தெரிவிச்சிருக்கார்.''’
""இதை எதிர்த்தும் போராட்டம் நடந்ததே?''’
""மக்கள் அதிகாரம் அமைப்பினர் மத்திய அரசின் இதுபோன்ற செயல்களைக் கண்டித்துப் பல இடங்களிலும் போராட்டங்களை நடத்தறாங்க. திருச்சி இந்தி பிரச்சார சபையை முற்றுகையிட்டும் அங்கிருந்த இந்திப் பெயர்ப் பலகைகளை அழித்தும், பா.ஜ.க. கொடியை எரித்தும் போராட்டம் நடத்திய ’மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்த போலீஸ், அவர்களில் ஐவரைக் கடுமையாகத் தாக்கியதோடு, சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என 85 பேரை சிறைக்கு அனுப்பியிருக்கு. இதேபோல் திருவாரூர் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு, காவிரிக்காகக் குரல் கொடுத்த இதே அமைப்பைச் சேர்ந்த 35 பேரையும் கைது பண்ணியிருக்கு போலீஸ்.''’
""இத்தனை போராட்டங்களுக்கு நடுவே ஏப்ரல் 12-ல் சென்னைக்கு பிரதமர் வர்றாரே?''
""காவிரி விவகாரம் தொடர்பா பேச அப்பாயிண்ட்மெண்ட் தர மறுக்கும் மோடி, மாமல்லபுரம் அருகே இருக்கும் திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சியைத் திறந்து வைக்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை விழாவில் பங்கேற்கவும் 12-ந் தேதி வர்றார். எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், மோடி சென்னை வரும்போது, அவரை ஏர்போர்ட்டில் வரவேற்கும் நேரத்தில், மோடியிடம் காவிரி குறித்த கோரிக்கை மனுவை கொடுக்க 5 நிமிடம் அனுமதி கேட்டு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டனர். ஆனால் இதையும் மோடி அலுவலகம் ஏற்க மறுத்துடுச்சு. கடைசி முயற்சியாக கேரள கவர்னரான சதாசிவம் மூலம், இருவரும் 9-ந் தேதி இரவுவரை பிரதமரின் சந்திப்பிற்காக டெல்லியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாங்க.''’
""டெல்லியிடம் பம்மிப் பதுங்கி பவ்வியம் காட்டும் எடப்பாடி அரசு, கருத்துரிமைக்காகவும், சமூக உரிமைக்காகவும் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குறதில் ஆர்வம் காட்டுதே?''’
""தலைவரே, மக்கள் பிரச்சினைக்காகப் போராடுகிறவர்களைத் தாக்கிக் கைது பண்ணி சிறை வைப்பதில் இந்த அரசு ரொம்பவே ஆர்வம் காட்டுது. காவிரி உரிமைக்காக, திருச்சியில், மணலில் புதைந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவைக் கைதுசெய்திருக்கு எடப்பாடி அரசு. இதே கோரிக்கைக்காகக் குரல் கொடுத்த திருவாரூர் முன்னாள் கவுன்சிலர் ஜி.வரதராஜனை, முன்னெச்சரிகைக் கைதுங்கிற பேர்ல, நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து, தன் கஸ்டடியில் வச்சிருக்கு. அதேபோல், முதல்வரையும் அமைச்சர்களையும் அவதூறா விமர்சிச்சி, கலவரத்தைத் தூண்டும் விதமா பேசியதா, தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மீதும், அவதூறு வழக்கு போடப்பட்டிருக்கு. உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களை அடக்கும் விசயத்தில் ஜெ.’வின் பாணியையே அப்படியே பின்பற்றுது எடப்பாடி அரசு.''’
""கருத்துரிமைக்கான குரல் இப்ப உச்சநீதி மன்ற வளாகத்திலேயே கேட்குதேப்பா?''’
""உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர் விவகாரத்தை சுட்டிக்காட்டறீங்கன்னு புரியுதுங்க தலைவரே, டெல்லியில் ஒரு விவாத நிகழ்ச்சியில் பிரபல ஊடகவியலாளர் கரன்தாப்பர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொன்ன செலமேஸ்வர், ஜெ.’வின் சொத்துக் குவிப்பு வழக்கில், அதன் விசாரணை முடிஞ்சி ஏறத்தாழ ஒருவருட காலம் தீர்ப்பு நிலுவையில் இருந்ததைச் சுட்டிக்காட்டினார். இதை வைத்து அந்தத் தீர்ப்பு குறித்த சந்தேகத்தை செலமேஸ்வர் கிளப்பறாரோங்கிற சந்தேகம் சிலருக்கு வந்தது. இதையும் புரிஞ்சிக்கிட்ட அவர், "எனக்கு அப்படிப்பட்ட நோக்கம் இல்லை. ஒரு வழக்கை ஒரு அமர்வுக்கு அனுப்பும் உரிமை தலைமை நீதிபதிக்கு இருக்கிறது என்றாலும், அந்த வழக்கை சமூகக் கண்ணோட்டத்தோடு அணுகி, அதன் அடிப்படையில் அமர்வுக்கு அனுப்பணும். ஆனால் அப்படி நடப்பது போல் தெரியவில்லை. அதனால் வழக்குகளை அமர்வுகளுக்கு அனுப்ப, அதற்கான குழு இருக்கவேண்டும்னு சொன்னார். தலைமை நீதிபதி பதவியை, ஒரு மயிரிழை பீரியாரிட்டியில் தீபக் மிஸ்ராவிடம் பறிகொடுத்தவர் செலமேஸ்வர். அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் இந்திய அளவில் அதிர்வலைகளை உண்டாக்குது.''’
""அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பா நியமனத்திற்கு எதிரா மாநில அமைச்சர்கள் சி.வி.சண்முகம், மாஃபா பாண்டியராஜன் இருவரும் கவர்னர் மீது அதிருப்தி தெரிவித்தனர். இதில் தன் தலையீடு இல்லைன்னு சொல்லியிருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், சர்வதேச அளவிலும் அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற சட்டவிதியின் படி, முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார்ன்னு சொல்லியிருக்கிறாரே?''’
""தலைவரே விவரமாவே சொல்றேன். ஜெ.’ மருத்துவமனையில் மோசமான நிலையில் இருந்தபோது, அவரது துறைகள், ஆக்ட்டிவ் முதல்வரான ஓ.பி.எஸ்.சிடம் மத்திய அரசின் விருப்பப்படி கொடுக்கப்பட்டிருந்தது. அவர் மூலம் மத்திய அரசின் எந்தெந்தத் திட்டத்தை ஜெ. எதிர்த்தாரோ, அவற்றுக்கெல்லாம் மோடி அரசு ஒப்புதல் பெற்றுடுச்சு. குறிப்பா, உதய் மின் திட்டம், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி. மசோதா, உணவுப் பாதுகாப்பு மசோதான்னு தமிழகத்துக்குப் பாதிப்பான திட்டங்களில் எல்லாம் ஒப்புதல் வாங்கி, அதையெல்லாம் தமிழகத்தின் தலையில் ஒட்டுமொத்தமா கட்டிடிச்சி. போன பிப்ரவரியில் எடப்பாடி முதல்வரானதும், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடிய தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை வெளியே அனுப்பிவிட்டு, பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமனங்களில் சர்வதேச மற்றும் வெளிமாநில அளவிலும் உரிய நபர்களை நியமனம் செய்யலாம்ங்கிற ஒரு சட்ட மசோதாவையும் அவசர கதியில் டெல்லியின் உத்தரவுப்படி நிறைவேத்திட்டாங்க.''’
""அடக் கொடுமையே...''’
""கொடுமைதான். இதன் மூலம் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களா ஆர்.எஸ்.எஸ். ஆட்களை உட்காரவைத்து, கல்வியை காவிமயமாக்குவதுதான் மோடி அரசின் நோக்கம். அதைப் பக்காவா இப்ப நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்காங்க. அந்த சட்ட திட்டத்தைக் காட்டிதான், இசைப் பல்கலைக் கழகத்துக்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா குருமூர்த்தியையும், சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவைச் சேர்ந்த தம்ம சூரிய நாராயண சாஸ்திரியையும், இப்ப அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவையும் துணைவேந்தரா நியமிச்சிருக்காங்க.''’
""இந்த சட்ட மசோதாவை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்படி கவனிக்காமல் விட்டது?''’
""அரசை எதிர்த்து வெளிநடப்புப் போராட்டங்களில் கவனம் செலுத்தும் எதிர்க்கட்சிகள், வெளிநடப்பு நேரத்தில் நிறைவேற்றப்படும் சின்னச்சின்ன மசோதாக்களில் கவனம் செலுத்தாமல் போனது தமிழ்நாட்டோட துரதிர்ஷ்டம்தான். மோடி அரசு இதோடு விடுவதாக இல்லை. மிச்சமிருக்கும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களையும் ஏதாவது புகார்களின் அடிப்படையில் வெளியே அனுப்பிவிட்டு அவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.எஸ்.எஸ். நபர்களை உட்காரவைக்கும் திட்டத்தோடுதான் இருக்குது. அதேபோல் தற்போது காலியாக இருக்கும் பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி உட்பட, கவர்னர் மூலம் நடக்க இருக்கும் அனைத்து நியமனங்களும் இந்துத்துவா நியமனங்களாகவே இருக்குமாம்.''’
""நிலைமையின் தீவிரம் புரியுதுப்பா. தமிழகம் போராட்ட மயமா இருக்கும் இந்த நேரத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. விஜயகாந்த் கோயில் கோயிலா போய்க்கிட்டிருக்காரே?''’
‘""விஜயகாந்த்துக்கு எல்லாத்தையும் தூக்கி அடிக்கணும்னுதான் ஆசை. ஆனா அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கலை. சீர்காழி கோயில்ல பேச்சுத்திறனுக்காக சிறப்பு வழிபாடு செஞ்சவர், அப்படியே திருவாரூரில் காவிரிக்கான ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அவரால் முடியாததால் அவர் வேலைகளை அவர் மனைவி பிரேமலதா கவனிக்கிறார். 8-ந் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துக்கிட்ட பிரேமலதா, தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் தாக்கிப் பேசினார். இதைப்பார்த்து, போராட்டக் களத்தில் இருந்த பெண்களே, "அரசியல் பேசாதீங்க'ன்னு அவருக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. எல்லா மீடியாக்களும் அவர் பேச்சைப் பதிவு செய்துக்கிட்டு இருக்கும்போதே, ஸ்டெர்லைட் விவகாரத்தை எங்க கேப்டன் டி.வி. மட்டும்தான் ஒளிபரப்புதுன்னு சொன்னார் பிரேமலதா.''’
""அப்புறம்?''’
""மத்த ஊடகங்கள் எல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, டென்ஷனான பிரேமலதா, அங்கிருந்து பாதியிலேயே கிளம்பினார். ஊடகக்காரர்கள் அவரிடம் பேட்டிக்காக மைக்கை நீட்ட, அவரோடு வந்தவர்கள், ஊடகத்தினரை நெட்டித் தள்ளினாங்க. இதில் சிலரது கேமராக்கள் உடைய, கீழே விழுந்ததில் சிலருக்கு காயமும் ஏற்பட்டுச்சு. பிரேமலதா காரும் கூட வந்தவங்க காரும் வேகமா பறந்ததில் ஊடகத்தினரை இடிச்சித் தள்ளிய பிரபாகரன், சரவணன், கனி ஆகியோர் காயமடைஞ்சிட்டாங்க. இதைத் தொடர்ந்து அவர்கள் காவல் துறையில் புகார் கொடுக்க, அதன் அடிப்படையில் பிரேமலதா மீது 5 பிரிவுகளில் வழக்கைப் பதிவு பண்ணியிருக்கு போலீஸ்.''’
""கான்ஸ்டபிளை போலீஸ் உயரதிகாரி மகள் மிரட்டும் வீடியோ தொடர்பான முக்கியத் தகவலைச் சொல்றேன். அண்மையில் நீலாங்கரை கடற்கரையில் ஆண் நண்பருடன் பேசியபடி குடிபோதையில் இருந்த ஏ.டி.ஜி.பி. தமிழ்ச்செல்வனின் மகள் வள்ளியால் மிரட்டப்பட்ட காவலர் கார்த்திகேயன் அடுத்த சில தினங்களிலேயே மர்ம விபத்தில் கைவிரல்கள் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதை நம்ம நக்கீரன், "ஏ.டி.ஜி.பி. மகள் அட்டகாசம்! கான்ஸ்டபிள் உயிருக்குக் குறி' என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது. தற்போது கார்த்திகேயனுடன் பணியாற்றும் காக்கிகள் சிலர் நம்மிடம், "கார்த்திகேயனுக்கு நேர்ந்தது விபத்தல்ல. மேலதிகாரிகள் சொன்னபடி, அவரைத் தாக்கி கைவிரல்களை போலீஸாரே முறித்திருக்கிறார்கள். கிண்டி பாலாஜி மருத்துவமனையில்தான் சிகிச்சை கொடுக்கப்பட்டது. மேலதிகாரி மகளின் தவறைத் தட்டிக்கேட்டதற்காக, போலீஸுக்கே போலீஸ் கொடுத்த தண்டனையைப் பார்த்தீங்களா'ன்னு கேட்குறாங்க.''’