விளக்கைத் தேடி விழுந்து அழியும் விட்டில்பூச்சிகளைப் போல, தேசம் முழுவதும் பரவிக்கிடக்கும், செல்லாத நோட்டுகளை மாற்றும் மோசடி நெட்வொர்க்கில், சிலர் வேகவேகமாக தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். இவர்கள் தரகர்களாகவும் இருப்பார்கள். கோடிகளில் செல்லாத நோட்டுகளோ, புது நோட்டுகளோ வைத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள். தங்களோடு ‘லிங்க்’ வைத்திருக்கும் கம்பெனி டெல்லியில் இருப்பதாகவும் ராஜஸ்தானில் இருப்பதாகவும் சொல்லிக்கொள்வார்கள். இவை மன்னார் அண்ட் கம்பெனி ரகமல்ல. மத்தியில் செல்வாக்குள்ள ஜிண்டால், பதஞ்சலி போன்ற நிறுவனங்களின் பெயரெல்லாம் இவர்களின் வாயில் சாதாரணமாக அடிபடும். இந்த நிறுவனங்கள் மூலம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பேக்-டோர் வாயிலாக, செல்லாத நோட்டுக்களை மாற்றிவிட முடியும் என்பதுதான், இவர்களின் நம்பிக்கை வார்த்தைகளாக வெளிப்படும்.
ரூபி டைமண்ட் என்ற தரகர், கேரள மாநிலம் -கோட்டயத்திலிருந்து சென்னை வந்து, ஸ்ரீனிவாசன் டீம் தரகர் ஒருவரைச் சந்தித்தார். தரகர் அவரிடம் "புதுநோட்டு ரூ.6 லட்சத்தை எங்களிடம் கொடுத்தால், நாங்கள் வைத்திருக்கும் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி(?) பழைய நோட்டுகளுக்கான வீடியோவைக் காட்டுகிறோம். 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ 20 நிமிடங்கள் ஓடும்'’என்கிறார். உடனே, ராஜஸ்தானில் புது நோட்டுகளை ஏற்பாடு செய்துதரும் கம்பெனியைத் தொடர்புகொண்டார் ரூபி. "சென்னையில் வீடியோ ஷோவுக்கெல்லாம் ரூ.6 லட்சம் தரவேண்டாம்'’என்று அறிவுறுத்தியது அந்தக் கம்பெனி.
மதுரையில் உள்ள பில்டர் ஒருவர் "என்னிடம் ரூ.230 கோடிக்கு பழைய நோட்டுகள் உள்ளன. ஃப்ரீ ஷோ காட்டுகிறேன். மாற்றி தரமுடியுமா?'’என்று ரூபியிடம் கேட்கிறார். உடனே, ராஜஸ்தான் கம்பெனியைத் தொடர்புகொண்டார் ரூபி. அதற்கு அந்தக் கம்பெனி "சென்னையில் இருக்கும் குருஜி ஆர்.பாலகிருஷ்ணனிடம் பேசுங்கள்'’என்று கூறியது. ரூபி குருஜியைத் தொடர்புகொள்ள "இப்போது, கர்நாடகாவில் ஒருவர் வைத்திருக்கும் ரூ.1000 கோடி பழைய நோட்டுக்களை மாற்றி தருவதற்காக பெங்களூரு வந்திருக்கிறேன். ராஜஸ்தான் கம்பெனி வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் கட்டிவிடுங்கள். நான் மதுரை வந்து, தங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கிறேன்'’என்றார். சொன்னபடி ரூபி நடந்துகொள்ள, மதுரை வந்தார் குருஜி.
குருஜியை தடபுடலாக வரவேற்று நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்த ரூபி "நாளை காலை ரூ.230 கோடிக்கு ஃப்ரீ ஷோ காட்டுகிறார் பில்டர். அதற்கான புது நோட்டுகளை வங்கி வாகனத்தில் கொண்டுவந்து தருவீர்களா? அல்லது, மதுரையில் எங்காவது குடோன் பிடித்து புது நோட்டுகளை வைத்திருக்கின்றீர்களா?'’என்று கேட்க... சிரிக்கிறார் குருஜி. “ராஜஸ்தான் கம்பெனியின் தலைவர் யாரென்று உனக்குத் தெரியாதல்லவா? அவர் பெரிய குருஜி. உன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அந்த அளவுக்கு அபார சக்தி உள்ளவர். ரூ.10 லட்சத்தை நீ அனுப்பியவுடன், அவருடைய சக்தியை எனக்கு அனுப்பிவிட்டார். ரூ.230 கோடி வைத்திருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். அந்தப் பழைய நோட்டுகளை என் சக்தி மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிவிடுவேன்'’என்று சொல்லிவிட்டு, ராஜஸ்தான் குருஜி, ஒரு பெண்ணிடமிருந்து பழைய நோட்டுக்களை வாங்கி, புது நோட்டுகளாக மாற்றித்தரும் அற்புத(?) வீடியோவைக் காட்டினார் குஷியுடன்.
குருஜியிடம் ரூபி "சாம்பிளுக்கு ரூ.5 கோடியை கொண்டு வருகிறோம். முதலில் அதை மாற்றிக்காட்டுங்கள்'’என்றார். "அற்பனே! என் சக்தி மீது உனக்கு சந்தேகமா?'’என்று சிலிர்த்த குருஜி, பிறகு ஒப்புக்கொண்டார். செல்லாத நோட்டுகள் ரூ.5 கோடியை அறையில் வைத்ததும், ரூபியையும் பில்டரையும் வெளியில் போகச் சொல்லிவிட்டு, கதவைச் சாத்திக்கொண்டார். இரண்டு மணி நேரமாகியும் திறக்கப்படாததால், கதவைத்தட்டி உள்ளே சென்றார்கள் ரூபியும் பில்டரும். பழைய நோட்டுகள் அப்படியே இருந்தன. குருஜியோ, சலனப்படாமல் "ஏன் இத்தனை அவசரம்? நான் புதிய நோட்டுகளாக மாற்றிக்கொண்டிருந்த வேளையில், கதவைத் தட்டி உள்ளே புகுந்ததால், திரும்பவும் பழைய நோட்டுகளாக மாறிவிட்டன. ஆனாலும், என் கண்களுக்கு புதிய நோட்டுக்களாகவும், உங்கள் கண்களுக்கு பழைய நோட்டுகளாகவும் தெரியும். எல்லோர் கண்களுக்கும் புதிய நோட்டுகளாகத் தெரியவேண்டுமென்றால், தடங்கலால் இழந்த சக்தியை நான் மீண்டும் பெறவேண்டும். இன்னும் ரூ.6 லட்சத்தை ராஜஸ்தான் குருஜி கணக்கில் கட்டிவிட்டால், அந்த சக்தி எனக்கு கிடைத்துவிடும்'’என்று சொல்ல... ரூபி, குருஜியிடம் "உங்கள் மகிமையே மகிமை. என் கண்களுக்கும் இவை புதிய நோட்டுகளாகவே தெரிகின்றன. இவற்றை எடுத்துச் செல்கிறேன். ரூ.6 லட்சம் கட்டிவிட்டு மீதி 225 கோடி பழைய நோட்டுக்களைக் கொண்டு வருகிறேன்'’என்று குருஜி பாணியிலேயே ரீல் விட்டார்.
ரூ.5 கோடி பழைய நோட்டுகளை அறையிலிருந்து எடுத்துச்சென்ற பிறகு, பூட்டிய அறையில் குருஜிக்கு அப்படி ஒரு கவனிப்பு. "என்னங்கடா இப்படி அடிக்கிறீங்க? நான் தாங்கமாட்டேன்டா...'’மூக்கில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடியே கதறிய குருஜி, முதலமைச்சரின் உறவினர், முன்னாள் ஜனாதிபதியின் உறவினர் என சில வி.வி.ஐ.பி.க்களின் பெயர்களைப் பட்டியலிட்டார். ரூபியும் பில்டரும் அதிர்ந்துபோய் அடிப்பதை நிறுத்தினார்கள்.
(சதுரங்க வேட்டை தொடரும்)