(8) நல்லவளாக வாழ்வதால் எதிரிகள் அதிகம்! -நறநறக்கும் நடிகை!
மதுரை நட்சத்திர ஓட்டல் அறையில், செல்லாத நோட்டுகளை, தன் அபூர்வ சக்தியால் புது நோட்டுகளாக மாற்றித்தருவதாக நாடகமாடிய குருஜி ஆர்.பாலகிருஷ்ணனை ரூபி ஆட்கள் அடி பின்னி எடுத்ததும், முதலமைச்சர், முன்னாள் ஜனாதிபதி என்று உளறிக்கொட்டினான்.
இந்த குருஜி உட்பட, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த பலரும் நோட்டு மாற்றும் தொழிலுக்கு எப்படி வந்தார்கள் தெரியுமா? 2016, நவம்பர் 8-ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தார் மோடி. அந்த ஆண்டு இறுதிக்குள் செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனால், கருப்புப்பணம் வைத்திருந்தவர்களுக்கு, பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். தரகர்கள் சிலர் 10 சதவீத கமிஷன் அடிப்படையில், பொது மக்களை இதில் ஈடுபடுத்தினார்கள். அதனாலேயே, எல்லா ஏ.டி.எம்.களிலும் அப்போது கூட்டமோ கூட்டம். காலக்கெடு முடிந்த நிலையிலும், கமிஷன் ருசிகண்ட தரகர்கள், பழைய நோட்டுகள் மாற்றும் வேலையை, 2017 மார்ச் 31-ஆம் தேதி வரை, வேறு வழிகளில் செய்தனர். அதன்பிறகும், இத்தொழிலை விட்டுவிடாமல், மோசடி நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்.
சரி, குருஜி சொன்ன முதலமைச்சர், முன்னாள் ஜனாதிபதி விஷயத்துக்கு வருவோம். சிவப்பு நிற வட மாநிலத்தவர், பிளைட் பிடித்து சென்னை வந்து, குறைந்தபட்ச வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.40,000 வரை செலவழித்து, தாங்கள் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கு தரகர்களை வரவழைப்பார்கள். ‘இவர் யார் தெரியுமா?’ என்று அவர்களை அறிமுகம் செய்துவைக்கும் விதமே மிரட்டலாக இருக்கும். மகாராஷ்ட்ரா முதல்வர் மனைவியின் நெருங்கிய உறவினர்’ என்பார்கள். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பேரன்; பெயர் பங்கஜ்’ என்று சொல்வார்கள். இதே ரீதியில், ‘இவர் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன், அதாவது காந்தியின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் வாரிசுகளில் ஒருவர்’ என்று அடித்துவிடுவார்கள். இந்த வரிசையில் மூதறிஞர் ராஜாஜியும் வருகிறார். அவருடைய பேரன் என, டாக்டர் ராஜேஷ் சர்மா என்பவரைக் கை காட்டியிருக்கின்றனர்.
டிஸ்கவரி சேனல் என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். அந்தச் சேனலின் ஸ்டிக்கரை, மகாராஷ்ட்ரா பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ காரில் ஒட்டியபடி, சென்னைக்கு வந்த ஒருவரை, ‘இவர்தான் டிஸ்கவரி சேனல் எம்.டி.யின் மகன் என்று அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒரு ரூபாய் நாணயத்தின் அளவுக்கு நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, பாதுகாப்புக்கு பவுன்சர் வீரர்களுடன், விமானத்தில் வந்து இறங்கியவரை, ‘இவர் பெயர் ராஜ்வீர். ஜிண்டால் குழுமத்தின் ரெய்ப்பூர் எம்.டி.’என்றிருக்கின்றனர். பெரும்பாலும் இந்த வி.வி.ஐ.பி.க்கள் தங்குவது சென்னையில் உள்ள சோழா, ஹயாத் ரீஜென்ஸி நட்சத்திர ஓட்டல்களில்தான். தரகர்கள் இவர்களின் பேச்சை அப்படியே நம்புவதற்கு காரணம் - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளோடு நெருங்கிய நட்புறவு வைத்திருப்பவர்கள் என்பதால்தான்.
போரூர் ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம், ராமசாமி உடையாரின் மகனான வி.ஆர்.வெங்கடாசலம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். 2014-ல் சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட இவருடைய பெயரும் இந்த ஃபீல்டில் அடிபடுகிறது. பென்ஸ், பி.எம்.டபிள்யூ கார்களில் வந்திறங்கும் இவர், ஹைடெக் மீடியேட்டர்’ ஆக பார்க்கப்படுகிறார். தியாகராய நகர், கல்யாண் ஜுவல்லர்ஸ் அருகிலுள்ள இவரது கெஸ்ட் ஹவுஸில், சந்திப்புகள் நடந்திருக்கின்றன. நோட்டு மாற்றும் வேலைகளுக்கு அந்தக் கல்லூரியைப் பயன்படுத்தி வந்தது, தரகர்கள் பலரும் அறிந்த விஷயமாக இருக்கிறது.
நோட்டு மாற்றும் விவகாரத்தில், சில பிரபலங்கள் குறித்த தகவல்கள் தாறுமாறாக எகிறி விழ, 6-வது அத்தியாயத்தில், "கலக்கிய காக்கி உடை நடிகை' என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்டிருந்த சின்னத்திரை நிலானி நம்மைத் தொடர்புகொண்டார்.
"நான் நடிகை மட்டுமல்ல. ஒரு ஜர்னலிஸ்ட்டும் கூட. தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியனில் இருக்கிறேன். சொசைட்டியில் நல்லவளா வாழணும்னு நினைச்சா, ரொம்பவும் எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கு. ஒரு பைசா வருமானம் இல்லாம ரொம்ப கஷ்டப்படறேன். இரண்டு குழந்தைகளோடு, வாழ்வதற்கே ரொம்பவும் போராடிக்கிட்டிருக்கேன். என்கிட்ட அடிவாங்காத ஆம்பளைங்க ரொம்ப கம்மி. ஓபனா சொல்லுறேன். எனக்கு எதிரிங்க கொஞ்சம் அதிகம்தான். இண்டஸ்ட்ரியிலும் எதிரிங்க அதிகமா இருக்காங்க. என்கிட்ட தவறாகவோ, மரியாதைக் குறைவாகவோ யாரும் நடந்துக்கிட்டா நான் ரொம்ப கெட்டவளா மாறிருவேன். என்னைச் சீண்டலா பார்த்தா ரொம்ப கொடூரமா நடந்துக்குவேன். போலீஸ்காரங்களும் எனக்கு எதிரா இருக்காங்க. எனக்கு எதிரா எப்ப ஒரு துருப்புச்சீட்டு கிடைக்கும்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க. இந்தமாதிரி இருக்கும்போது, நோட்டு மாத்துற தொழில்ல என்னையும் சம்பந்தப்படுத்தி இந்தத் தொடர்ல போட்டோவோட போட்டுட்டீங்க. சீனிவாசன்ங்கிறவர் யாரென்றே தெரியாது. ஏழுமலையும் காளிதாஸும் எனக்குத் தெரியாது. குறிப்பிட்ட அந்த ஓட்டலில் நான் எப்பவும் ரூம் போட்டதில்ல'’என்று மறுத்தார்.
இச்சந்தையில் முதல்வன், துணைவன் பெயர்களும் சர்வசாதாரணமாக அடிபடுகின்றன. ஏன் தெரியுமா?
-சி.என்.இராமகிருஷ்ணன்
(சதுரங்க வேட்டை தொடரும்)