மனைவியைத் தவிக்கவிட்ட பண வெறி!

ரசியல் பின்னணி கொண்ட சென்னை - அபிபுல்லா ரோடு ஸ்ரீனிவாசன் தரப்பினர், செல்லாத நோட்டுகளை வைத்து கள்ளாட்டம் ஆடினாலும், எதிர்தரப்பினர் நம்பும் விதத்தில், ஒப்பந்தமெல்லாம் போடுவார்கள். நம் கைக்கு கிடைத்த ஒரு ஒப்பந்தத்தைப் பார்ப்போம்! செல்லாத நோட்டுகளை சென்னை குடோன்களில் பதுக்கி வைத்திருக்கும் ஸ்ரீனிவாசனை பார்ட்டி பி என்றும், புது நோட்டுகளைத் தந்து, ஐந்து மடங்கு பழைய நோட்டுகளை வாங்கும் மணிகண்டனை பார்ட்டி ஏ என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். ரிட்டயர்ட் மிலிட்டரி மேஜர் என்பதால் மணிகண்டன் பெயரை ஒப்பந்தத்தில் போட்டுவிட்டு, ஆர்.பி. சூரியா என்பவர் பார்ட்டி ஏ சார்பில் கையெழுத்திட்டிருக்கிறார். இந்த ஆர்.பி. சூரியா ஜிந்தால் நிறுவனத்தின் மேலாளராம். புது நோட்டுகள் இவருடையதாம்.

money

Advertisment

அந்த ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகள் இவை -

1. இரு பார்ட்டிகளும் காலை 11 மணிக்கு சந்திக்க வேண்டும். கரன்ஸி கட்டுக்களை எடுத்து வரும் வாகனத்தை எங்கே நிறுத்த வேண்டும் என்பதை பார்ட்டி ஏ உறுதிப்படுத்திவிட்டு, அங்கே மொத்தப் பணத்தையும் பார்ட்டி பி-க்கு காட்ட வேண்டும்.

2. வாகனம் நிறுத்தப்படும் இடம், போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதுகாப்பான இடமாகவும், ஏதாவது ஒரு வங்கி அல்லது ஏ.டி.எம்.க்கு அருகிலும் இருக்க வேண்டும்.

Advertisment

3. பார்ட்டி ஏ மணிகண்டன் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, பார்ட்டி பி ஸ்ரீனிவாசனை அந்த வாகனத்துக்குள் அழைத்துச்சென்று, புதிய 100 கோடி ரூபாய் நோட்டுகளை சரிபார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற ஸ்ரீனிவாசன் டிரங்குகள் எதை வேண்டுமானாலும் திறந்து சரிபார்த்து, உறுதிப்படுத்துவதற்கு உத்தரவிடுவார்.

4. திருப்தி ஏற்பட்டதும், ரூ.500 கோடி பழைய நோட்டுகள் இருக்கும் இடத்துக்கு மணிகண்டனை அழைத்துச்சென்று காண்பிப்பார் ஸ்ரீனிவாசன்.

5. நோட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதும், ரூ.100 கோடி புதிய கரன்ஸிக் கட்டுக்களுடன் மணிகண்டனும், உரிய அடையாள சான்று வைத்திருக்கும் 10 பேர் கொண்ட குழுவும், பணம் எண்ணும் உபகரணங்களுடன் அழைத்துச் செல்லப்படுவர்.

6. இரு பார்ட்டிகளும் ஒரே நேரத்தில் பணம் எண்ணும் வேலையை ஆரம்பித்துவிட வேண்டும்.

7. வேலை திருப்திகரமாக முடிந்தவுடன், இரு தரப்பினரும் அவரவர் பொருட்களை (கரன்ஸி) ஏற்றிக்கொண்டு கிளம்ப வேண்டும்.

8. ரூ.500 கோடிக்கான இந்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டால், இருப்பில் மீதம் உள்ள ரூ.2000 கோடிக்கான வேலையை, இதே இடத்தில், இதே நபரால் தொடர முடியும்.

9. ஒருவேளை, புதுத்தாள்கள் ரூ.100 கோடியை உரிய நேரத்தில் மணிகண்டனால் காட்ட முடியவில்லையென்றால், ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்தத் தொகை ஸ்ரீனிவாசனுக்குப் போய் சேர்ந்துவிடும்.

10. புதிய நோட்டுகள் ரூ.100 கோடியை சரிபார்த்த பிறகு, பழைய நோட்டுகள் ரூ.500 கோடியைக் காட்ட முடியவில்லையென்றால், அபராதம் ரூ.30 லட்சத்தை மணிகண்டனுக்கு ஸ்ரீனிவாசன் தந்துவிட வேண்டும்.

-இப்படி மிகத்தெளிவாக சீட்டிங் செய்துவருகிறது ஸ்ரீனிவாசன் கும்பல்.

இந்தியா முழுவதும் செல்லாத நோட்டுகளை மாற்றும் 180 தரகர்களின் பெயர்ப் பட்டியலை, நண்பர் ஒருவரின் வாட்ஸ்-அப் நம்பரிலிருந்து நமக்கு அனுப்பிய பெண் ஒருவர், பொதுத் தொலைபேசி வாயிலாக நம்மைத் தொடர்புகொண்டார். ""கோயம்புத்தூரிலிருந்து சித்ரா பேசுகிறேன்...''’என்றவர், ""இங்கே பார்லே-ஜி கம்பெனி டிஸ்ட்ரிபியூட்டராக இருக்கும் என் கணவர் முருகானந்தம், லாட்டரி மார்ட்டினுடைய சொத்துக்களையும் நிர்வகித்து வந்தார். அவருடைய வெளிநாட்டுத் தொடர்புகளையும் கவனித்தார். திடீர்னு ஒருநாள் நானும் மார்ட்டின் அளவுக்கு முன்னேறுவேன்.’ என்று கூறிவிட்டு, ரூ.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அடுத்து அவர் வீடு திரும்பவே இல்லை. நானும் சென்னை, அண்ணாநகர் கிழக்கு, சிந்தாமணி சிக்னல், சொரன்டோ கெஸ்ட் ஹவுசுக்குச் சென்று இரண்டு தடவை பார்த்தேன். "நமது சொந்தபந்தங்கள் அரசுத் துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். இப்படி ஒரு மோசமான தொழிலில் நீங்கள் ஈடுபடுவது அவர்களுக்குத் தெரிந்தால், குடும்பத்தோடு நாம் தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும். சென்னையில் உங்களை யாராவது மிரட்டினால் பயப்படாமல் என்கிட்ட சொல்லுங்க. கோயம்பேடு ஸ்டேஷன்ல எஸ்.ஐ.யாக இருக்கும் உங்க மாமா மனோகர்கிட்ட சொல்லி, உங்களை மீட்டு கூட்டிட்டுப் போறேன்'னு கெஞ்சினேன். வெறிபிடிச்ச மாதிரி கத்தினார். என்னோடு வர மறுத்தார்.

நான் கேள்விப்பட்ட வரையில், மொத்தப் பணத்தையும் இழந்து, அங்கே ஒரு கிரிமினல் கேங்க்கின் கையில் சிக்கி, வெளிவர முடியாமல் என் கணவர் தவிக்கிறார். என் கணவர் மட்டுமல்ல, பலரும் பணத்தை இழந்து அந்தக் கும்பலின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். சென்னையில் அந்த கிரிமினல் கேங்க் எந்தெந்த விதத்தில் மோசடி செய்கிறது என்பதற்கு ஆதாரமாக, என் கணவருடைய போனில் இருந்து, அவருக்குத் தெரியாமல் எடுத்த சில வீடியோக்கள் மற்றும் டாகுமெண்ட்டுகளை எங்கள் குடும்ப நண்பரின் வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். என் கணவர் எனக்கு திரும்பக் கிடைக்கவேண்டும்'' என்றார் உடைந்த குரலில்.

சித்ராவின் கணவர் முருகானந்தமெல்லாம் ஜுஜுபி. பணிக்காலத்தில், மக்களைச் சுரண்டி பணம் பறிப்பதில், பழம் தின்று கொட்டை போட்ட காவல்துறை அதிகாரிகளையும், ஏமாந்த சோனகிரிகள் ஆக்கி, தன் பிடிக்குள் வைத்திருக்கிறார் ஸ்ரீனிவாசன். தன் குழுவில் அவர் எப்படி ஆள் சேர்க்கிறார் தெரியுமா?

-(சதுரங்க வேட்டை தொடரும்)