‘வரும்…ஆனா வராது..’ ரகத்தில், சென்னையில் ஒரு மீடியேட்டர் மட்டும், 180 தரகர்களைக் களத்தில் இறக்கிவிட்டு, செல்லாத நோட்டுகளை மாற்றித்தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டு வருவதை, கடந்த 9 அத்தியாயங்களிலும், தகுந்த ஆதாரங்களுடன் விவரித்திருந்தோம்.

money

நடவடிக்கைகள் பெயரளவிலேயே!

Advertisment

சென்னை, கோடம்பாக்கம் -ஜக்காரியா காலனியில் தண்டபாணி என்பவரின் கடையில் பெட்டி பெட்டியாக, பல கோடி மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் பழைய நோட்டுகள் பிடிபட்டன. டெல்லியில் போலி கணக்குகள் மூலம் ரூ.34 கோடி டெபாசிட் செய்ய உதவிய கோட்டக் வங்கி மேலாளர் அசிஷ்குமார் என்பவர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதானார். பெங்களூரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ரிசர்வ் வங்கியின் கீழ்மட்ட ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக, பெயரளவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி, தேசம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் இந்த மோசடி நெட்வொர்க்கை, மத்திய, மாநில அரசுகளோ சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஏன் தெரியுமா?

கிழியும் முகத்திரை!

பிரதமர் மோடி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. வல்லுநர்கள் பலரும் கிழிகிழியென்று கிழிக்கின்றனர்.

Advertisment

""சொத்துகளாகவும், வெளிநாட்டு வங்கிகளில் அந்நிய செலவாணிகளாகவும் இருக்கும் கருப்புப்பணத்தை மீட்டுவர முயற்சிக்காத மத்திய அரசு, இந்தியாவில் ரொக்கமாக உள்ள சிறு அளவிலான கருப்புப்பணத்தைக் கண்டுபிடிப்பதாகச் சொல்லி, பெரிய அளவில் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது''’என்று சாடுகிறார் தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் பழனிவேல் தியாகராஜன்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ""பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய மோசடி''’என்கிறார். தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சரும், பொருளாதார வல்லுநருமான அருண்ஷோரி, ""பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம், கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள், அதனை எளிதாக வெள்ளைப்பணமாக மாற்றிக்கொண்டனர்''’என்று வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார். சி.பி.எம். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி “""மேற்குவங்காளத்தில், இன்னும் சில பிரதேசங்களில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, பா.ஜ.க. கட்சியின் முக்கியஸ்தர்கள் பெரும்தொகையை டெபாசிட் செய்துள்ளனர். சுதந்திர இந்தியாவின் மிகப்பெரும் ஊழல் இது''’என்று குற்றம்சாட்டுகிறார், மஹாராஷ்ட்ரா நவ நிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ்தாக்கரே, “""500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, 5 நாட்களில் குஜராத்தின் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745 கோடிக்கு செல்லாத நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளனர். அந்த வங்கியின் இயக்குநரும் பா.ஜ.க. தேசிய தலைவருமான அமித்ஷா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் மீதும் நடவடிக்கை இல்லையே?''’என்று கேள்வி எழுப்பி, பா.ஜ.க. ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கிறார்.

பா.ஜ.க. தலைவர்கள் தில்லுமுல்லு!

moneyஇந்தியாவில் செல்லாத நோட்டுகள் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டதில், அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி முதல் இடத்திலும், குஜராத்தின் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி, 2-வது இடத்திலும் இருக்கிறது. குஜராத்தில் கேபினட் அமைச்சராக இருக்கும் ஜெயேஷ்பாய் விட்டல்பாய் தாதாதியா தான் ராஜ்கோட் வங்கியின் தலைவராக இருக்கிறார். மாநில கூட்டுறவு வங்கிகளிலேயே மகாராஷ்ட்ரா மாநில கூட்டுறவு வங்கியில்தான் அதிகபட்சமாக, ரூ.1,128 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதிக தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ள வங்கிகளுக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. ஆனாலும், முறைகேடாக டெபாசிட் எதுவும் செய்யப்படவில்லை என்று மறுக்கிறது நபார்டு வங்கி. நாசிக் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.341 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுந்ததால், அதன்பிறகு டெபாசிட் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உறுத்தலான புள்ளிவிவரம்!

2016 நவம்பர் 8-ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி என்ன செய்திருக்க வேண்டும்? கெடு முடிந்ததும், நேர்மையான முறையில், மாற்றப்பட்ட செல்லாத நோட்டுகளின் மதிப்பை, தாமதிக்காமல் அறிவித்திருக்க வேண்டும். அப்படி நடந்துகொள்ளாமல், தகவல் உரிமைச் சட்டத்தின், வாயிலாக கேள்வி எழுப்பிய பிறகே, எண்ணிக்கொண்டிருக்கிறோம்; ஆய்வு செய்கிறோம்’ என்று 15 மாதங்களுக்குப் பிறகு, 2018 பிப்ரவரியில், ஜூன் 2017 நிலவரப்படி, ரூ.15.28 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும், இது 99 சதவீத கணக்குதான், இன்னும் 1 சதவீத கணக்கு மிச்சமிருப்பதாக ஏதோ ஒரு கணக்கோடு சொல்கிறது. இதில் உறுத்தலான விஷயம் என்னவென்றால், 7 பொதுத்துறை வங்கிகள், 32 மாநில கூட்டுறவு வங்கிகள், 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகள், 39 அஞ்சல் நிலையங்களில் மட்டும் ரூ.7.91 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. அதாவது, ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் ரூ.15.28 லட்சத்தில், இந்தத் தொகை பாதிக்கும் மேலாக இருக்கிறது. அதேநேரத்தில், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தகவல்கள் அளிக்க மறுத்துவிட்டன.

பணக்காரர்களுக்கு மட்டுமே பிரதமரா?

அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் தாமஸ் பிராங்கோ “மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் மட்டுமே பயனடைந்திருக்கின்றன’என்கிறார். கூட்டிக்கழித்துப் பார்த்தால் விடை கிடைத்துவிடுகிறது. என்ன நடந்திருக்கிறது? கெடு முடிந்த பிறகும், செல்லாத நோட்டுகளை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் பேக்-டோர் வழியாக எளிதாக மாற்ற முடிந்திருக்கிறது. இதற்காக, பெரிய அளவில் கமிஷன் பெற்றிருக்கிறார்கள். இதற்கு ரூட் போட்டுக் கொடுத்திருக்கிறது மோடி அரசு. இந்தச் சேவையின் பின்னணியில்தான் சென்னை வரையிலும் உள்ள மீடியேட்டர்கள் மோசடியான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழல் செய்து, தனக்காகவோ தன்னுடைய பினாமிகளுக்காகவோ சொத்து சேர்ப்பவர்கள் ஒரு ரகம். மோடி அப்படி கிடையாது. பொதுத்தேர்தலை பா.ஜ.க. சந்திக்கும்போது, தேசம் முழுவதும் செலவழிப்பதற்கு பணம் வேண்டும். அப்போது, கோடி கோடியாகக் கொட்டிக் கொடுப்பார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் உண்மையான கணக்கு இதுதான் என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

ராகுல் காந்தியும், ""பிரதமர் நரேந்திரமோடியின் தனிப்பட்ட ஊழல் தொடர்பான முழு விவரங்களும் என்னிடம் உள்ளன. செல்லாத நோட்டு விவகாரம் குறித்து நான் பேச ஆரம்பித்தால் பூகம்பமே ஏற்படும். இந்திய வரலாற்றில் இது மிகப்பெரிய ஊழலாகும். 15 பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே பிரதமராக இருக்கும் மோடி, இந்திய நாட்டுக்குப் பிரதமர் அல்ல''’என்கிறார் அதிரடியாக.

2ஜி விஷயத்தில், அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் கோடி இழப்பே, தேசம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி, மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தது. செல்லாத நோட்டு ஊழலோ ‘அதுக்கும் மேலே’ என்று சொல்லும்படியாக அல்லவா இருக்கிறது!

-சி.என்.இராமகிருஷ்ணன்

(முற்றும்)