தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்க் கட்சிக்கு புதிய தலைவலியை உண்டாக்கியுள்ளது முன்னாள் அமைச்சர் அட்மிட்டான விவகாரம். முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஆலடி அருணாவின் மகள், டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர். இவரும் முன்னாள் அமைச்சர்.
வாக்கிங் போகும் போது ஆலடி அருணா, முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது மறைவிற்குப் பின் அவரது மகன்களான எழில்வாணன், மதிவாணன், அன்புவாணன் ஆகியோர், அவர் நடத்திவந்த கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் கவனம் செலுத்த, அருணாவின் பெண் வாரிசான பூங்கோதை மட்டும் அரசியலில் களமிறங்கினார். தொகுதியின் மக்கள் சார்ந்த பிரச்சினை களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த பூங்கோதை, கடந்த வாரம் திடீரென மருத் துவமனையில் அட்மிட் ஆக, பரபரப்புச் செய்திகள் சிறகடிக்கத் தொடங்கிவிட்டன.
இது குறித்து ஆலங்குடி பகுதி தி.மு.க. சீனியர்களிடம் நாம் விசாரித்த போது, ""வரும் சட்டமன்றத் தேர்தலிலும் சீட் வாங்கும் எண்ணத்தில் இருந்தார் பூங்கோதை. ஆனால் தென்காசி தெற்கு தி.மு.க., மா.செ.வான சிவபத்மனாபன், தான் வசிக்கும் தென்காசியில் எதிர்ப்பு அதிகம் என்பதால் ஆலங்குடி தொகுதியைக் குறி வைத்து, சிட்டிங் பூங்கோதையை ஓரங்கட்டும் அரசியலைக் கையில் எடுத்தார். தொகுதி எம்.எல்.ஏ.வான பூங்கோதைக்குச் சொல்லாமலே ஆலங்குடியில் கட்சிக் கூட்டங்களை மா.செ. தொடர்ந்து நடத்தினார். ஆனா லும் இந்தக் கூட்டங்களில் தானாகவே பூங்கோதை கலந்துக்கிட்டார்.
இந்த நிலையில் பூங்கோதை யின் தம்பி எழில்வாணனைத் தன்வயப்படுத்திய மா.செ., அவர் மூலம் பூங்கோதைக்கு குடும்பத்தி லேயே நெருக்கடியை ஏற்படுத்தினார். கடந்த 15 ஆம் தேதி கட்சிப் பொறுப்பாளர்கள் கூட் டத்தை ஆலங்குளத்தில் பெரிய லெவலில் நடத்தினார் மா.செ. அதில் கலந்துகொண்டவர் களுக்கு பிரியாணி, வழிச் செலவு ஆகியவற்றை பூங்கோதையின் தம்பியே செய்தார். இந்தக் கூட்டத்திற்கும் பூங்கோதையை அழைக்கவில்லை. இதிலும் அவர் தானாகவே கலந்துகொண்டார்.
அடுத்து கடந்த 18-ந் தேதி கடையத்தில் கட்சி ஊழியர் களின் கூட்டத்தை கூட்டினார் சிவபத்மனாபன். அங்கு நடந்த நிகழ்ச்சிகள்தான், வேதனையின் உச்சம்'' என்றதுடன், நடந்தவற்றை விளக்கினார் ஒன்றியப் பொறுப்பில் உள்ள ஒருவர். “""அழைப்பு இல்லாவிட்டாலும் எம்.எல்.ஏ. என்பதாலும் கட்சி உணர்வாலும் அங்கே சென்ற பூங்கோதையை மா.செ. தரப்பு மேடையில் உட்காரவிடவில்லை. கீழே இருந்த கட்சியினர் எழுந்து அவருக்குக் சீட் கொடுத்தனர். அப்போது மா.செ.வின் ஆதரவாளரான முருகன், பூங்கோதையைக் குறிவைத்துப் பேச ஆரம்பித்தார். கட்டப்பஞ்சாயத்து அரசியல் பண்ணுகிறார் என்றும், இந்தத் தடவை சீட்டு கொடுக் கக்கூடாதுன்னு பேசிக் கொண்டே போக, மனம் நொந்து போன பூங்கோதை, மா.செ. சிவபத்ம நாபனைப் பார்த்து, அவரை பேச வச்சி கேக்குறீகளா என வேதனை யை வெளிப்படுத்தினார். ஆனால் மா.செ.வோ, கூட்டம்னா எல்லாத்தையும் கேட்டுத்தான் ஆகனும்னு எடக்கா சொன்னார். இதனால் பூங்கோதையின் ஆதர வாளர்களும் குரல் கொடுக்க, சலசலப்பானது.
வெறுத்துப்போன எம்.எல்.ஏ. பூங்கோதை, எனக்குரிய மரியாதையைத் தரமாட் டீங்கன்னா பரவால்ல, என்றபடி கண்ணீருடன் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டார். பின்னர், பாதியிலேயே விடுவிடுன்னு அங்கிருந்து கிளம்பிட் டார். ஒரு எம்.எல்.ஏ., அதிலும் அவர் ஒரு பெண் என்றும் பார்க்காமல் தனக்குத் தொடர்ந்து தரப்பட்டு வரும் டார்ச்சரையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அவர், மன உளைச்சலில், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கிட்டார். அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்து வீட்டில் இருந்த வர்கள் அவரை மருத்துவமனையில் அட்மிட் பண்ணிட்டாங்க. நல்ல வேளையா சிகிச்சை பலன் கொடுத்தது'' என்றார் கவலையாய்.
இதைத் தொடர்ந்து நாம் பூங்கோதையின் உதவியாளர் ரஞ்சித்தைத் தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம், ""எம்.எல்.ஏ.வுக்கு எதிராகத் திட்ட மிட்டுச் செயல்படுகிறார்கள், கடையம் கூட்டத்தில் ஏற்பட்ட அவமானம். குடும்பத்தில் கிளம்பிய பிரச்சினைன்னு மன உளைச்சலில் இருந்தவங்க, இப் படி ஒரு முடிவுக்குப் போவாங்கன்னு நாங்க நெனைக்கல்ல'' என்றார் பதட்டம் மாறாமல்.
நாம் மா.செ. சிவபத்மநாப னின் விளக்கமறிய, அவரைப் பலமுறை தொடர்புகொண்டும், நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவர் தரப்போ ""அரசியல் ஏற்ற இறங்கங்களுக்கு மா.செ.வைக் காரணம் சொல்லக்கூடாது'' என்றார்கள்.
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருக்கும் பூங்கோதை அருணா சார்பில் வெளியிடப் பட்டிருக்கும் அறிக்கையில், தான் தற்கொலை முயற்சி மேற் கொண்டதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என்றும், திடீரென ஏற்பட்ட மயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிய சென்னை மருத்துவமனையில் அட்மிட் ஆனதாகவும், தனக்கு சர்க்கரை அளவும், ரத்தம் உறை யும் தன்மையும் குறைவாக உள்ள தாகவும் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் அமைச்சராக இருந்த பெண்ணுக்கே பாதுகாப்பில்லையா என வேல் யாத்திரையில் எல்.முருகன் கேள்வி கேட்கும் அளவுக்கு பூங்கோதை விவகாரம் அரசியலாகியுள்ளது. இத்தகைய சிக்கல்களை மு.க. ஸ்டாலின் தீர்க்காவிட்டால், தேர்தல் களத்தில் தி.மு.கவைப் பாதிப்படையச் செய்ய, வெளியில் உள்ள எதிரிகள் தேவையில்லை. சொந்தக் கட்சியினரே சூனியம் வைத்துவிடுவார்கள்.
-பரமசிவன்