மணல் கொள்ளையர்களால் முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்துபிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டது ஒரு புறமிருப்பினும், மணல் கொள்ளையர்களால் விவசாயி ஒருவரின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக் கூடாது என துப்பாக்கி ஏந்திய போலீஸை பாதுகாப்பிற்கு அமர்த்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
வி.ஏ.ஓ. கொலை செய்யப்பட்டதிலிருந்து 1 கி.மீ தூரத்திலுள்ளது தாமிரபரணி ஆற்றின் அகரம் கிராமம். ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வரும் விவசாயி பாலகிருஷ்ணன் அங்குள்ள பஞ்சாயத்தில் 1 வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். தாமிரபரணி ஆற்றின் அருகிலுள்ள சுடுகாட்டிலும் மணலைத் தோண்டி கடத்துகின்றனர் மணல் கொள்ளையர்கள் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்க மணல் கொள்ளையர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்திருக்கின்றது அவருக்கு.!! நீதிபதிகளான புகழேந்தி மற்றும் கிருபாகரனோ, "19.11.2020 அன்றிலிருந்து பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே காலையில் எழும் விவசாயியுடனேயே துப்பாக்கியுடன் தனது பாதுகாப்பைத் தொடர்கின்றார் அந்த காவலர். "போலீஸ் துணையுடன் தான் இயங்குகின்றேன். டீக்கடை தொடங்கி ஆடு மேய்ப்பது வரை ஒரு நல்லது கெட்டதுக்கு போகனும்னா கூட போலீஸ் உதவி தேவைப்படுகின்றது. இங்கே பஸ் வசதி கிடையாது. அருகிலுள்ள வல்லநாட்டில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று மகன் அனுப்பி வைக்க வேண்டும். சுதந்திரமாக அலைய முடியவில்லை. இங்குப் பணியாற்றும் போலீஸார் மட்டுமல்ல., இந்த ஊரை சேர்ந்த வெளியூரில் பணியாற்றும் போலீஸாரும் இந்த மணல் கொள்ளைக்கு உடந்தை. இது மாறனும். மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்." என்கிறார் பாலகிருஷ்ணன்.