எம்.ஜி.ஆர். நினைவு நாளன்று அவரது சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதாக அறிவித்தார் சசிகலா. ஆனால் அவர் அன்று எம்.ஜி.ஆர். சமாதிக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே எம்.ஜி.ஆர். படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இதில் சசிகலா கடுமையான அப்செட் ஆனார் என்கிறது சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரம்.

Advertisment

ttv

அன்றைய தினம் ஜெ. நினைவு நாளில் நடந்ததைப் போல டி.டி.வி. தினகரனும் சசிகலாவும் சமாதிக்குப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஜெ. நினைவுநாளின்போது முதலில் தினகரன் தனது பரிவாரங்களுடன் சென்றார். தினகரனுக்காக அ.ம.மு.க. கொடியைப் பிடித்துச் சென்றவர்கள், தினகரனுக்குப் பின் சசிகலா வந்தபோது அ.ம.மு.க.வின் கொடியை மறைத்து வைத்து "சசிகலா வாழ்க' என கோஷமிட்டனர்.

"சசிகலா செல்லும் இடங்களுக்கு அ.ம.மு.க.வினர் சென்றால், அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்' என தினகரனின் மனைவி அனுராதாவும், பி.ஏ. ஜனாவும் அறிவித்தார்கள். ஆமாம்... அது உண்மை. "சசிகலா, அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர் அல்ல, அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில்... அவர் கலந்துகொள்ளும் விழாவில் அ.ம.மு.க.வினர் கொடிபிடித்து கலந்துகொண்டால் சரியாக இருக்காது. அதனால் அ.ம.மு.க.வினர் சசிகலா கலந்துகொள்ளும் விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என எங்களது பொறுப்பாளர்கள் சொன் னார்கள்'' என டி.டி.வி. தினகரன் பேட்டியளித்தார்.

Advertisment

modi

அதற்குப் பிறகு நடந்ததுதான் ஜெ.வின் நினைவு நாள் விழா. அதில் கலந்துகொண்ட அ.ம.மு.க.வினர், எடப்பாடியைப் பார்த்ததும் டென்ஷன் ஆனார்கள். அவர்கள் எடப்பாடியின் கார் மீது செருப்பை வீசித் தாக்குதல் நடத்தினர். எடப்பாடி, ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி ஆகியோரை அ.ம.மு.க. தொண்டர்கள் முற்றுகையிட்டார்கள். இதனால் டென்ஷனான எடப்பாடி, "அ.தி.மு.க.வினரையும் அ.ம.மு.க.வினரையும் ஒரே நேரத்தில் ஜெ. சமாதிக்கு வரவைத்து தி.மு.க. அரசு மோத வைக்கிறது' என்றார். அந்த அறிக்கைக்குப் பின் போலீசார், எடப்பாடியின் காரை தாக்கியதாக அ.ம.மு.க.வினரை கைது செய்தனர்.

மறுபடியும் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தன்று அ.தி.மு.க.வினரும் அ.ம.மு.க.வினரும் விண்ணப்பித் திருந்தனர். போலீஸ் டென்ஷனானது. டி.டி.வி. தினகரனை கூப்பிட்டுப் பேசினார்கள். "ஜெயலலிதா நினைவு நாளன்று நடந்தது போல மோதல் எதுவும் நடந்தால் நன்றாக இருக்காது, எப்.ஐ.ஆர். போட்டு உங்களை கைது செய்யவேண்டி வரும், எனவே எந்த மோதலும் நடக்கக்கூடாது' என எச்சரித்தனர்.

இந்த எச்சரிக்கையை சசிகலாவுக்கு பாஸ் செய்தார் தினகரன். நான் கும்பலைக் கூட்டுவேன், அதில் சசிகலா குளிர் காய்வாரா? இந்தமுறை அப்படி நடக்காது என கட்சியினரிடம் தெரிவித்தவர், எம்.ஜி.ஆர். சமாதிக்குப் போவதை நிறுத்தினார். போலீசார் அனுமதி தரவில்லை என்றார்.

"நாங்கள் அனுமதி மறுக்கவில்லை. எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் எம்.ஜி.ஆர். சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த அனுமதித்த நாங்கள், தினகரனையும் சசியையும் ஏன் தடுக்கப் போகிறோம்? அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை... அதனால் எங்கள் மீது பழி போடுகிறார்கள்' என்றது காவல்துறை வட்டாரங்கள்.

"கூட்டம் இல்லாமல் நான் போய் என்னசெய்யப் போகிறேன் என சசிகலாவும், எம்.ஜி.ஆர். சமாதிக்குப் போகவில்லை. இதனால் டென்ஷனான சசிகலா தரப்பு, சசியிடம், "ஏன் கேன்சல் செய்தீர்கள்?' என கேட்டார்கள். "தினகரன் உதவி இல்லாமல் என்னால் பொது நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாது' என சசிகலா தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.

அதைக்கேட்ட சசிகலா வகையறாக்கள் நொந்து போனார்கள்.

இதுபற்றிப் பேசும் அவர்கள், முன்பு ஜெ. சசிகலாவுக்கு கட்டுப்பட்டு இருந்தார். அது எந்த அளவிற்கு இருந்தது என்றால் சசி, கார்டனிலிருந்து வெளி யேற்றப்பட்டவுடன் நரேந்திர மோடியை ஜெ. தொடர்பு கொண்டார். சசி இல்லாமல் என்னால் தனியாக எதுவும் செய்ய முடியாது என்ற ஜெ.வை கவனிக்க ஒரு நர்சை மோடி குஜராத்திலிருந்து அனுப்பிவைத்தார். சசி பற்றி ஜெ. சொன்னதால் ஏற்பட்ட கோபம் மோடிக்கு இன்னமும் குறையவில்லை. அன்று ஜெ.வின் அனைத்து நடவடிக்கைகளையும் சசி கட்டுப்படுத்தினார். அதுபோல இன்று சசியின் நடவடிக்கைகளை தினகரன் கட்டுப்படுத்துகிறார். அதற்கு ஒரு பெரிய காரணம், சசிகலாவின் சொத்துகளின் பினாமிகளான அனுராதா, டாக்டர் சிவகுமார், கலியமூர்த்தி பாஸ்கரன் என எல்லோருமே தினகரனின் உறவினர்கள்.

sasi

Advertisment

ஜெ.வுக்கும் சசிகலாவுக்கும், இளவரசிக்கும் தினகரனைப் பிடிக்காது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. சொன்னதை தினகரன் கேட்கவில்லை. அதனால் வழக்கறிஞர் ஜோதிக்கும் தினகரனுக்கும் மோதலே நடந்தது. ஆனால் ஜெ.வை மீறி தினகரனை, சசிகலா மறைமுகமாக ஆதரித்தார். அதற்குக் காரணம், தினகரன் குடும்பத்தைச் சுற்றி பினாமிகளாக வகுக்கப்பட்ட ஜெ.வின் ஊழல் பணம். அதை மாற்ற சிறையிலிருந்து வந்த சசிகலா விரும்பினார். முடியாது என சசியின் முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார் தினகரனின் மனைவி அனுராதா.

"ஒருபக்கம் நரேந்திர மோடியின் கோபம், மறுபக்கம் தினகரனின் மிரட்டல். இந்த இரண்டையும் மீற முடியாமல் சசி தவிக்கிறார்' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.