டக்கார பேச்சிமுத்து தேவர். இதுதான் ஓ.பி.எஸ்.ஸின் பூர்வீகப் பெயர். ஓ.பன்னீர்செல்வமாக அறிமுகமான அவர், தனது தம்பி பாலமுருகனுக்காக ஓ.பி.எஸ். ஆகிறார். அதே பாலமுருகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அதற்கு உதவி செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பார்க்க டெல்லி சென்றார் என்கிறார்கள். ஆனால் அந்த விசிட்டிற்கு பின்னால் பல மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என நமுட்டுச் சிரிப்போடு சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ops familyஓடக்கார பேச்சிமுத்து தேவராக ஓ.பி.எஸ். இருந்தபோது ஒரு சம்பவம் நடக்கிறது. அப்பொழுது ஒரு டீக்கடை வைக்க முடிவு செய்கிறார். அதற்காக பெரியகுளத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் 20,000 ரூபாயை அவரது தம்பி பாலமுருகன் பெயரில் கடன் வாங்குகிறார். அந்த கடனை கட்ட முடியவில்லை. அதனால் ஜாமீன் கையெழுத்து போட்ட தன் மீது வங்கி அதிகாரியின் நடவடிக்கை பாயும் என பயந்தவர் ஓ.பி.எஸ்.

கடன் வாங்கிய பாலமுருகன் தலைமறைவாகிவிட... ஜாமீன் கையெழுத்தை "பேச்சிமுத்து' எனப் போட்ட ஓ.பன்னீர்செல்வமும் எஸ்கேப்பாகிறார். பெரியகுளத்தில் பி.வி.கேண்டீன் என தொடங்கப்பட்ட டீக்கடையின் பெயரும் ரோசி கேண்டீன் ஆனது. அதனால் லோனை வசூலிக்க முடியாமல் வங்கி நிர்வாகம் திணறியது. கடைசியாக அந்தக் கடனை ஓ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகுதான் கொடுத்தார். இதுதான் ஓ.பி.எஸ்.சின் உண்மையான சொத்தும் தில்லாலங்கடி வேலைகளும் என்கிறார்கள் அவரது சொந்தத்தினரே.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு வழக்கில் ஏ-1 குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட ஜெ., திரைத்துறையில் நடிகையாக இருந்தார். பணம் சம்பாதித்தார். அவர் முதல்வராவதற்கு முன்பே போயஸ் கார்டனில் வீடு, ஹைதராபாத் திராட்சை தோட்டம், நகைகள், விலையுயர்ந்த சேலைகள் எல்லாம் வைத்திருந்தார். ஆனாலும் ஜெ. முதல்வராக இருந்த 91-96 காலகட்டத்தில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தார் என வழக்கு போடப்பட்டது. அதாவது 1 ரூபாய் மாத சம்பளம் வாங்கிய 5 ஆண்டுகளில் மட்டும் 66 கோடிக்கு சொத்து குவித்திருந்தார். ஜெ.வுடன் ஒப்பிட்டால் ஓ.பி.எஸ்.சும் தமிழக முதல்வர் என்கிற லிஸ்டில் இடம் பெறுபவர். ஆனால் ஜெ.வை போன்ற செல்வாக்கும் வருமானமும் மிக்க தொழில் எதையும் ஓ.பி.எஸ். செய்யவில்லை. 20,000 ரூபாய் வங்கிக் கடனுக்காக தில்லாலங்கடி வேலை செய்ததுதான் ஓ.பி.எஸ்.சின் கடந்த கால வரலாறு. இப்போது சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்று வருமான வரித்துறையிடமும் அமலாக்கத்துறையிடமும் ஓ.பி.எஸ்.சும் அவரது மகனும் சிக்கியபோது நரேந்திரமோடியும் ஆடிட்டர் குருமூர்த்தியும் காப்பாற்றினர். அதுபோல் சொத்துக் குவிப்பு புகாரிலிருந்து தன்னை காப்பாற்ற டெல்லிக்குப் பறந்தார் ஓ.பி.எஸ். என அவரது டெல்லி பயண படலத்தை விளக்குகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Advertisment

அவர் டெல்லி நோக்கி ஓடக் காரணம் எடப்பாடி. ஓ.பி.எஸ். மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக இரண்டு ஃபைல்கள் இ.பி.எஸ்.சிடம் வந்தன. ""இதிலிருந்து என்னைக் காப்பாற்ற ஏதாவது நடவடிக்கை எடுங்கள்'' என தனிப்பட்ட முறையில் ஓ.பி.எஸ். கேட்டுக் கொண்டார். அதையும் மீறி ஒரு ஃபைலை பிறகு பார்க்கலாம் என நிறுத்தி வைத்தார். இன்னொரு ஃபைலை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்தார். அதனால் எடப்பாடியும் சேர்ந்து என்னை கவிழ்க்கிறார்'' என்கிற கதறலோடுதான் டெல்லிக்கு ஓடினார் ஓ.பி.எஸ்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ""ஓ.பி.எஸ். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். அதற்கு முன்பு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தோம். அதன் மீது கடந்த ஏழு மாதங்களாக எந்த நடவடிக்கையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுக்கவில்லை.

2006ஆம் ஆண்டு இதேபோல வருமானத்துக்கு அதிகமாக பன்னீர் சொத்து சேர்த்தார் என தி.மு.க. அரசு வழக்கு போட்டது. ஓ.பி.எஸ்., அவரது மகன் ரவீந்திரநாத், ஓ.பி.எஸ். தம்பி ராஜா, ராஜா மனைவி சசிகலாவதி, ஓ.பி.எஸ்.ஸின் இன்னொரு தம்பியான பாலமுருகன், அவரது மனைவி லதாமகேஸ்வரி ஆகியோர் மீதுதான் இந்த வழக்கு.

Advertisment

ops-family1 கோடியே 72 லட்சத்து 3 ஆயிரத்து 116 ரூபாய் வருமானத்தை மீறி 19-5-2001 முதல் 2006 வரை வருவாய்த்துறை அமைச்சர், முதலமைச்சர், அதன்பிறகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஓ.பி.எஸ். இருந்தபோது அவரது குடும்பத்தினர் சொத்து சேர்த்தார்கள் என்பது தான் அந்த வழக்கின் சாராம்சம். மதுரையில் நடைபெற்ற அந்த வழக்கை சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி ஓ.பி.எஸ். 2012ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மந்திரியாக வந்தபிறகு அந்த வழக்கில் உண்மையில்லை என லஞ்ச ஒழிப்புத்துறையையே கோர்ட்டில் சொல்ல வைத்து முடித்தார்.

அதேபோல்தான் தற்பொழுதும் லஞ்ச ஒழிப்புத்துறை ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக செயல்படுகிறது என நாங்கள் கோர்ட்டில் சொன்னோம். கடந்த 7 மாதமாக ஓ.பி.எஸ். மீது கொடுத்த புகாரை விசாரிக்கவில்லையென்றால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விடுவேன் என நீதிபதி ஜெயச்சந்திரன் எச்சரித்தார்'' என்கிறார் வழக்கு போட்ட அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன்.

""வழக்கு சி.பி.ஐ.க்கு போனால் என்ன செய்வது என பயந்துதான் டெல்லிக்கு ஓடினார் ஓ.பி.எஸ்.'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதுகுறித்து முன்கூட்டியே ஏற்பாடுகள் நடந்தன.

டெல்லிக்குப் போனதும் சி.பி.ஐ.க்கு பொறுப்பான மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வந்ததற்கான காரணத்தை சொன்னார் ஓ.பி.எஸ். ராஜ்நாத் சிங், தனது ஆளான சைலேந்திரசிங் யாதவை ஓ.பி.எஸ். தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்கே அனுப்பினார். அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி தன்னை அழிக்க செய்யும் சதிகள்பற்றி புலம்பிய ஓ.பி.எஸ்., எப்படியாவது தன்னை காப்பாற்றும்படி கெஞ்சினார். ஓ.பி.எஸ்.சை சந்தித்துவிட்டு சென்ற யாதவ், "நீங்கள் திட்டமிட்டபடி நிர்மலா சீதாராமனை பாருங்கள்' என்றார். நிர்மலாவை அழைத்த ராஜ்நாத் சிங், "ஓ.பி.எஸ். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை சி.பி.ஐ. ஏற்கக்கூடாது' என்கிறார். "அதெல்லாம் நடக்காத காரியம். உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டால், சி.பி.ஐ. அதை மறுக்க முடியாது என சொல்லிவிட்டார்' என சொன்னார். டெல்லியின் மூவ் தெரியாத ஓ.பி.எஸ். நிர்மலாவை சந்திக்கப் போகும்போதே, ""எனது தம்பி பாலமுருகனின் சிகிச்சைக்காக இராணுவ ஹெலிகாப்டரில் இயங்கும் ஏர் ஆம்புலன்சை கொடுத்தார். அதற்காக நான் நன்றி சொல்லப் போகிறேன்' என டெல்லியில் சொன்னார் ஓ.பி.எஸ். அதை முன்கூட்டியே சென்னையில் ஓபனாக சொல்லிவிட்டார் இ.பி.எஸ்.

ops family

"இவர்கள் பொய் சொல்கிறார்கள். இப்படித்தான் மோடி சொல்லி நான் எடப்பாடியுடன் இணைந்தேன்' என உளறினார் ஓ.பி.எஸ். இப்பொழுது சொத்துக்குவிப்பு வழக்குக்காக என்னை பார்க்க வந்துவிட்டு அவரது தம்பிக்கு இராணுவம் ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்தது என என்னை மாட்டிவிடுகிறார்' என டென்ஷனான நிர்மலா, ஓ.பி.எஸ்.சை சந்திக்கவேயில்லை. "எதையும் தாங்கும் இதயம் உண்டு' என நொந்து போய் ஓ.பி.எஸ்.சும் திரும்பிவிட்டார்.

ஓ.பி.எஸ். டெல்லி விசிட் தோல்வியில் முடிந்தவுடன் தமிழக அரசு ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கத் தயார் என கோர்ட்டில் தெரிவித்தது. அதை பாசிட்டிவ் சிக்னலாக அப்படியே ரெகார்டு செய்த நீதிபதி ஜெயச்சந்திரன், ""ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் சொத்துக்குவிப்பு புகார் தெரிவிக்கப்பட்டால் அதை ஒரு வாரத்திற்குள் ஆரம்ப கட்ட விசாரணையை முடித்து விட வேண்டும் என லலிதாகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையாக விசாரணை நடத்தவில்லையென்றால் மனுதாரர் மறுபடியும் கோர்ட்டை அணுகலாம்' என வழக்கை முடித்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். நீதிபதியின் இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது'' என்கிறார் அறப்போர் இயக்கத்தின் சார்பாக வழக்கு தொடுத்த ஜெயராமன்.

சி.பி.ஐ.யின் மிரட்டலுக்குப் பயந்து டெல்லிக்கு ஓடியபோதும் அங்கிருந்து விரட்டப்பட்டார் ஓ.பி.எஸ்.

""2006ஆம் ஆண்டே ஓ.பி.எஸ். 20 கோடியை தாண்டிவிட்டார். அவர் மீது தி.மு.க. ஆட்சியின் லஞ்ச ஒழிப்புத்துறை ஒண்ணே முக்கால் கோடிக்குதான் சொத்து சேர்த்தார் என வழக்கு போட்டது. 2006ஆம் ஆண்டு வெறும் 36,000 ரூபாய் வருமான வரியை கட்டிய ஓ.பி.எஸ்.சின் மனைவி 2015ஆம் ஆண்டு 45 லட்சம் என வருமானவரி கட்டியிருக்கிறார். 9 வருடத்தில் எந்த வேலையும் பார்க்காமல் 100 மடங்கு வருமானத்தை பெருக்கியுள்ளார். 2006 வரை படித்துக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.ஸின் மகன்களான ரவீந்திரநாத்தும் ஜெயபிரதீப்பும் 2008ஆம் ஆண்டு வாணி பேப்ரிக்ஸ் என்கிற நிறுவனத்தை 30 லட்சம் முதலீட்டில் வாங்குகிறார்கள். அந்த நிறுவனம் மார்ச் 2011-ல் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 60 ஏக்கர் நிலத்தை வாங்குகிறது. அதேபோல் ஓ.பி.யின் மகன்கள் எக்ஸலண்ட் மாரி லைன் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். எந்தவிதமான வங்கிக் கடனும் வாங்காமல் அந்த நிறுவனம் 31 கோடி ரூபாய் வருமானம் காட்டுகிறது.

இது தவிர இன்னொரு கண்டெய்னர் நிறுவனத்தையும் ஓ.பி.எஸ். குடும்பம் ஆரம்பித்துள்ளது. அதுபோல தேனி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்கள் என பாய்கிறது ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான புகார்கள். இத்துடன் சேகர் ரெட்டி என்கிற மணல் மாஃபியாவோடு சேர்ந்து கொள்ளையடித்ததாக வருமான வரித்துறை திரட்டிய ஆவணங்கள். இந்தோனேசியாவில் உள்ள முதலீடுகள் என ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக ஏராளமாக திரட்டிக் கொடுத்துள்ளது ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தி.மு.க.வும் அறப்போர் இயக்கமும். இந்த புகார்களில் உள்ள உண்மைத்தன்மையை லஞ்ச ஒழிப்புத்துறை புறக்கணித்துவிட்டு ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாக ரிப்போர்ட் போட்டால் உச்சநீதிமன்ற கதவையே தட்ட தயாராக உள்ளோம். ஜெ.வைப் போலவே தமிழக முதல்வராக இருந்த மற்றொருவரான ஓ.பி.எஸ்.சும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி என்கிறார்கள் கோர்ட் வட்டாரங்களை சேர்ந்தவர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

படம்: ஸ்டாலின்