த.வெ.க. ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இதுநாள்வரை இக்கட்சிக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கிளைக்கழகம் முதல் மா.செ. வரைக்குமான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமலிருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. இதனால் கட்சித் தொண்டர்களிடையே தவிப்பும் குழப்பமும் நீடிக்கிறது.
த.வெ.க.வினர் சிலரிடம் பேசிய போது, "த.வெ.க. தொடங்கியதிலிருந்தே தூத்துக்குடியை மட்டும் தலைவர் விஜய் தன்னுடைய நேர் கண்காணிப்பில் கொண்டு வந்துவிட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த பில்லா ஜெகன், விஜய்யின் ஆரம்பகால ரசிகர். அவரோடு நல்ல அன்டர்ஸ்டாண்டிங்கில் இருப்பவர். அதுமட்டுமில்லாது ஜெகனும் அவரது குடும்பத்தாரும் விஜய்யின் குடும்பத்தாரிடம் நெருங்கிப் பழகக்கூடியவர்கள். அது இன்றளவும் தொடர்கிறது.
மேலும் பில்லா ஜெகன் ஆரம்ப காலத்திலிருந்தே தி.மு.க.விலிருப்பவர். அமைச்சர் அனிதாவுக்கு நெருக்கமானவர். கட்சி ஆரம்பித்த விஜய், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக பில்லா ஜெகனை நியமிக்க நினைத்தபோது, தான் தி.மு.க.வில் பயணிப்பதால் செட்டாகாது என்றவரிடம், அவரது தம்பி சுமனைக் கேட்டிருக்கிறார். அவரோ, அரசியலில் நாட்டமில்லையென்று கூலாகச் சொல்லியிருக் கிறார். இதையடுத்து பில்லா ஜெகனும், அவரது தம்பியும், தங்களது சகோதரியான அஜிதா ஆக்னலின் அரசியல் விருப்பம் பற்றி விஜய்யிடம் தெரிவித்து, அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் என்று தெரிவித்ததால் அஜிதா ஆக்னலை கட்சியில் இணைத்த விஜய், அவரை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கும் திட்டத்திலிருந்தார்.
இவ்விஷயத்தில் விஜய்யின் கணக்கே வேறு. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 அப்பாவிகளின் குடும்பத்தினரையும் சந்தித்த அஜிதா ஆக்னல், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியும் செய்திருக்கிறார். பலியான 13 பேரில் 8 பேர் மீனவ சமுதாயம் சார்ந்தவர்கள். சம்பவத்திற்குப் பிறகு வந்த அனைத்து தேர்தல்களிலும் மீனவ சமுதாயத்தின் வாக்குகள் அ.தி.மு.க.வின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லையாம்.
தங்களது மதம் சார்ந்த விஜய் தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்ததோடு, தங்களுக்கு ஆரம்பத்தில் அவர் உதவியதையும் மீனவ சமூகத்தினர் நெகிழ்ச்சியாகப் பார்க்கிறார்களாம். இதனால் மீனவ சமுதாயத்தின் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் த.வெ.க. பக்கம் திரும்புமென்று கணக்கிட்ட விஜய், மீனவ சமூகம் சார்ந்த அஜிதா ஆக்னலை மாவட்ட பொறுப்பாளராக்கும் முடிவிலிருக்கிறார். மேலும், பெண் மா.செ. என்பதால் தொகுதியில் பெண் வாக்காளர்களை வசப்படுத்தலாம். தி.மு.க. மா.செ.வான கீதா ஜீவனுக்கு டஃப் கொடுக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம்.
தலைவர் விஜய்யின் அசைக்கமுடியாத ஆதரவிருப்பதால் மா.செ. பொறுப்பு நிச்சயம் என்ற எண்ணத்தில் அன்றாடம் கட்சிப் பணிகளை மேற்கொள்ளும் அஜிதா ஆக்னல், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது, மக்களுக்கு நிவாரண உதவி களை அளிப்பது எனப் பல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்த வகையில் பல லட்சங்கள் செல விட்டிருக்கிறாராம். இது இப்படியிருக்க, தூத்துக்குடி வந்த த.வெ.க.வின் பொ.செ.வான புஸ்ஸி ஆனந்த், அரசியல் சூழலைப் பற்றி விசாரிக்க, தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் நாடார் சமூகம் சார்ந்தவர்களே பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கமென்று தெரிந்துகொண்ட புஸ்ஸி ஆனந்த், அந்த சமூகம் சார்ந்த எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ் என்பவரை மாவட்டப் பொறுப்பாளராக்கும் முயற்சியிலிருந்திருக்கிறார். அரசியலுக்குப் புதிதான சாமுவேல்ராஜ், த.மா.க.வைச் சேர்ந்த எஸ்.டி.ஆர்.விஜயசீலனின் தம்பி. இதனிடையே தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான டேவிட் செல்வின், பிற கட்சிகளுக்குச் சென்றுவிட்டு தற்போது த.வெ.க. பக்கம் திரும்பியிருக்கிறார். த.வெ.க.வின் மூலம் ஸ்ரீவைகுண்டம் அல்லது தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாகிடலாமென்றும், கட்சியின் மாவட்ட பொறுப்பையும் பெற்றுவிடலாமென்ற கணக்கோடும் கட்சியில் இணைந்து தனிக் கோஷ்டியாக செயல்பட்டு வருகிறாராம்.
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நிதி நிறுவனம் மற்றும் கட்டுமானத்தொழிலை நடத்திவரும் பசையுள்ள தொழிலதிபரான கே.ஜே.ஆர்.முருகன் என்பவரும் மா.செ. வாகிவிட வேண்டுமென்ற திட்டத்தில் கட்சியின் மேல்மட்டப் புள்ளிகளின் தொடர்பிலிருக்கிறாராம். கட்சியின் மா.செ. பொறுப்பை அடைவதற் கான ரேஸ்கள் வேகமெடுத்துக் கொண்டிருக்க, விஜய்யோ அஜிதா ஆக்னலைத்தான் மா.செ. பொறுப்பி லமர்த்த வேண்டுமென்ற முடிவில் புஸ்ஸி ஆனந்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதால் பொறுப் பாளர்களை நியமிப்பதில் இழுபறி நீடித்துக்கொண்டிருக்கிறது'' என்கிறார்கள்.
இந்தச் சூழலில், அக்டோபர் 20-ல், விஜய் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரத் திற்கு வர அனுமதிகேட்டு அஜிதா ஆக்னல் தரப்பும், டேவிட் செல்வின் தரப்பும் தனித்தனியே மாவட்ட எஸ்.பி.யான ஆல்பர்ட் ஜானிடம் மனு கொடுத்தது பரபரப்பை கிளப்பியது. கைக்கெட்டும் தூரத்தில் தேர்தல் இருக்கிறது. வாக்காளர் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைப்பு என்று தலைக்கு மேலே வேலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் பொறுப்பாளரே இல்லாமல் கட்சித் தொண்டர்கள் எந்தப் பாதையில் செல்வது, எந்த வேலைகளைக் கவனிப்பது என்று குழப்பத்துடனும், தடுமாற்றத்துடனும் இருப் பதைக் கட்சியின் மேல்மட்டம் வரை தெரிவித்தும் கவனித்ததாகத் தெரியவில்லை.
"பரம்பரை பரம்பரையான அரசியல் கட்சிகளோடு மோதுவது சாதாரண விஷயமல்ல. அக்கட்சிகளை எதிர்கொள்ளுமளவிற்கு டஃப் கொடுப்பதில்தான் இருக்கிறது புதிதாக களத்திற்கு வந்த த.வெ.க.வின் வலிமை' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-பி.சிவன்