ஷ்ய - உக்ரைன் போர் உக்கிரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைனின் தலைநகரான கார்கிவ்வின் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்க, போர் நடவடிக்கையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் பலியாகியிருப்பது இந்தியர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ukraine

நாளுக்கு நாள் தாக்குதலை அதிகரித்துவரும் ரஷ்யா, கார்கிவ் நகரின் அரசுக் கட்டடங்கள் முதல் வணிக வளாகங்கள் வரை ராக்கெட் வீச்சுகளை மேற்கொண்டு வருகிறது. அந்நகரின் மருத்துவப் பல்கலைக்கழக விடுதி, பதுங்கு குழிகள், சுரங்கப் பாதைகளில் நாட்டைவிட்டு வெளியேற வழியின்றி சுமார் 4000 இந்திய மாணவர்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் மாணவியான பூஜா பிரகாராஜ், "கார்கிவ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நவீன் தங்கியிருந்தான். போர் காரணமாக உணவு, தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. காலையில் சிட்டி சென்டரருகேயுள்ள சூப்பர் மார்க்கெட்டில் உணவு வாங்கச் சென்றிருந்தான். அப்போது ஆளுநர் மாளிகையருகே வெடிகுண்டொன்று வெடித்துச் சிதறியது. அந்த வெடிப்பு நிகழ்ந்து சில மணி நேரத்துக்குப் பின் எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அதில் உக்ரைன் பெண் ஒருவர் பேசினார். குண்டுவெடிப்பில் நவீன் இறந்துவிட்டதாகவும், உடல் பிணவறையில் இருப்பதாகவும் அவர் தகவல் சொன்னார். நவீனின் உடலையும், உடைமைகளையும் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார்''’என்கிறார்.

எனினும் சில தகவல்கள், நவீன் வெடிகுண்டில் சிக்கி இறந்தாரா,… ரஷ்ய வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தாரா என உறுதியாகத் தெரியவில்லை என்கின்றன. நவீனின் மரணத்தால் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த சலகேரி கிராமம் துயரத்தில் மூழ்கியுள்ளது.

ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவரான அமித், “"நவீனும் நானும் ஒரே விடுதியில் தங்கிப் படித்து வந்தோம். முதலிரு நாட்களுக்குப் பின் உணவு, நீருக்குத் தட்டுப்பாடு நிலவியது. இருவரும் ஒன்றாகச் சென்றுதான் வெளியே போய் பொருட்கள் வாங்கிவருவோம். நேற்று (மார்ச் 1) நவீன் மட்டும் அதிகாலை யில் பணம் எடுக்க வெளியில் சென்றிரு ந்தார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் அவரது செல்போனுக்குத் தொடர்பு கொண்டோம். எதிர்முனையில் பேசியவர் நவீன் வெடிகுண்டுத் தாக்குதலில் இறந்ததாகத் தெரிவித்தபோது உடைந்து போய்விட்டோம்''’எனத் தெரிவித்துள்ளார்.

நவீன் பலியாவதற்கு முன்பு தனது தந்தையைத் தொடர்புகொண்டு, "அப்பா, நாங்கள் பதுங்கு குழியில் இருக்கிறோம். இங்கு உணவு, நீர் எதுவும் கிடைக்கவில்லை''’என பேசியிருக்கிறான். மகன் பத்திரமாகத் திரும்பவேண்டுமே என கலக்கத்தில் இருந்த உஜ்ஜான கவுடா, அவனது மரணச் செய்தியால் நொறுங்கிப் போயிருக்கிறார். “"ரஷ்யா போர் அறிவிப்பு செய்தபோதே, இந்தியா மாணவர்களை மீட்டு வந்திருந்தால் என் மகன் இறந்துபோயிருக்கமாட்டான். ஒன்றிய அரசின் மெத்தனப் போக்குக்கு என் மகன் பலியாகிவிட்டான்'' என்று அழுதிருக்கிறார். சலகேரியில், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுந்ததால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

tt

"கிராமப்புற மாணவனாகிய நவீன், 97 சதவிகிதம் மதிப்பெண் பெற்றும் உக்ரைனில் படிக்கநேர்ந்தது நீட் தேர்வின் காரண மாகவே. நீட் இல்லாமல் போயிருந்தால் நவீன் உயிரோடு இருந்திருப்பான்'' என எதிர்க்கட்சித் தலைவர்களான குமாரசாமி, சித்தராமையா போன்றோர் கண்டனம் தெரிவித்து, நீட் அநீதி பற்றிய விவாதங்களை கர்நாடகத்தில் தொடங்கிவைத்திருக்கின்றனர்.

நவீனின் மரணம் இந்தியர்களிடையே அதுவும் குறிப்பாக, உக்ரைனில் படிக்க தங்கள் பிள்ளைகளை அனுப்பியிருக்கும் பெற்றோர்களிடம் தவிப்பை ஏற்படுத்தி யுள்ளது. கார்கிவ் நகரில் உக்கிரமான போர்ச்சூழல் நிலவிவரும் நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போர் நிலவரத்தைத் தெரிந்துகொள்ளவும், நகரை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியங்களை அறியவும் தொடர்ந்து செல்போனைப் பயன்படுத்தவேண்டியுள் ளது. ஆனால் சார்ஜ் தீர்ந்தால், மின்னேற்றம் செய்ய வழியில்லை. இதனால், இந்தியாவிலுள்ள பெற்றோரையும் தொடர்புகொள்ள இயலாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. குளிர், பசி, மின்சாரமின்மை, வெடிகுண்டு முழக்கங்கள், இதற்கு நடுவில் இந்திய மாணவர் நவீனின் மரணம் போன்றவை மற்ற மாணவர்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது.

கார்கில் நகரிலுள்ள மாணவர்கள், தங்கள் மீட்பு தொடர்பாகவோ வழிகாட்டுதலுக்காகவோ தங்களை இந்தியத் தூதரகத்திலிருந்து யாரும் அணுகவில்லை என்று கூறியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அதுபோல உக்ரைன் நகரிலிருந்து கிளம்பும் ரயில்களில் உள்நாட்டினருக்கே பயணிக்க அனுமதியளிப்பதாகவும், இந்தியா உள்ளிட்ட பிறநாட்டினர் புறக்கணிக்கப்படுவ தாகவும் புகார் எழுந்துள்ளது.

Advertisment

tt

மார்ச் 2-ஆம் தேதி கார்கிவ்வில் சிக்கியுள்ள இந்தியர்கள் எப்படியாவது அந்நகரைவிட்டு அன்று மாலை 6 மணிக்குள் வெளியேறும் படி பிரதமராலும், இந்திய தூத ரகத்தாலும் கேட்டுக்கொள்ளப் பட்டனர். ரயில், போக்குவரத்து சாத்தியமற்ற, போர்ச்சூழல் நிலவும் தேசத்தில் இத்தகைய ஓடிக்கோ… பிழைச்சுக்கோ… உத்தரவை, எதிர்க் கட்சியினர் கடுமையாக விமர் சித்தனர். இதற்கிடையில் பஞ்சாப் மாநிலம், பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற மாணவர், உக்ரைனில் உடல்நலக் குறைவால் மார்ச் 2-ஆம் தேதி மரணமடைந்தது இந்தியர்களின் கவலையை மேலும் அதிகரித் திருக்கிறது.

ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியபின்பு நடந்த இரு கட் டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன் போரில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஈடுபடாதபோதும் உக்ரைனுக்கு முழு ஆதரவையும் 50 போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத உதவிகளையும் வழங்கிவருகின்றன.

உக்ரைனின் தொலைத் தொடர்பு சேவைகளை முடக்க ஒளிபரப்பு கோபுரங்களைக் குறிவைத்து குண்டுவீசுகிறது ரஷ்யா, இதனால் இணையசேவைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்கியுள்ளார்.

ரஷ்யாவின் மீதான தடைகளால் ரஷ்ய ரூபிள் மதிப்பு 30 சதமும், ரஷ்யப் பங்குச் சந்தை 40 சதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நீண்ட காலத்துக்கு விலை தரவேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்ச ரித்துள்ளார். இவையெதையும் ரஷ்யா பொருட்படுத்தவில்லை.

உக்ரைனிலிருந்து இதுவரை 15 விமானங்களில் கிட்டத்தட்ட 3000 இந்திய மாணவர்களை இந்தியா மீட்டுவந்துள்ளது. 20,000-க்கும் அதிகமான பேர் உக்ரைனில் படித்துவரும் நிலையில், கிவ், கார்கிவ், சுமி நகர்களைத் தவிர மற்ற இடங்களில் உள்ளவர்கள் உக்ரைனின் மேற்கு எல்லையான போலந்து, ரோமானியா, ஹங்கேரி, மால்டோவா போன்ற அண்டை நாட்டு எல்லைகளுக்கு வந்துசேர்கின்றனர்.

கிட்டத்தட்ட 12,000 பேர் பல்வேறு வழிகளில் உக்ரைனிலிருந்து வெளியேறி அதன் எல்லைப்புறங்களை அடைந்துள்ளனர். அவர்களை மீட்க இந்தியா 31 விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இன்னும் 20 சதவிகித மாணவர்கள் தீவிர போர் நடைபெறும் இடங்களில் சிக்கியுள்ளனர். உக்ரைனின் வடகிழக்குப் பகுதியான சுமியில் மட்டும் 600 மாணவர்கள் சிக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவர்களை மீட்பதுதான் இந்திய அரசுக்கு முன்னிருக்கும் சவால்.

போர் நடைபெறும் கார்கிவ் நகருக்குள் சிக்கிய நான்காயிரத்துக்கும் அதிகமானோரை பிப்ரவரி 2 மாலைக்குள் நகரைவிட்டு வெளியேறும்படி இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டது. அவர்கள் முழுமையாக வெளியேறிவிட்டனரா… எத்தனைபேர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர் என்பதுகுறித்த தகவல்கள் தெரியவில்லை.

பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “"வார்த்தை விளையாட்டுகளை நிறுத்திவிட்டு ரஷ்யா குண்டுகள் வீசுவதை தற்காலிகமாக நிறுத்தச் சொல்லவேண்டும். அதன்மூலம் உக்ரைனில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினர்கள் நாட்டைவிட்டு வெளியேறமுடியும்''’என விமர்சனம் செய்தார்.

அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் ஆயுதங்களையோ அணுஉலைகளையோ வாங்கி இரு தரப்பிடமும் நட்பைப் பேணுவது மட்டுமே ராஜதந்திரமல்ல. இக்கட்டான நிலையில், மாணவர்களை மீட்பதற்காக ரஷ்யாவை தற்காலிக போர் நிறுத்தத்துக்கோ, அல்லது இதர பயனுள்ள வியூகங்களுக்கோ இணங்கச்செய்வதுதான் அசல் ராஜதந்திரம். அப்படியில்லாமல் வார்த்தை ஜால அறிக்கைகளில் மட்டும் அக்கறை செலுத்திவிட்டு, நவீனைப் போல இன்னும்பல மாணவர்களை இக்கட்டில் ஆழ்த் தினால், அந்தப் பாவத்தைக் கங்கையால்கூட கழுவமுடியாது!